• August 9, 2025
  • NewsEditor
  • 0

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வனச்சரகத்திற்கு உள்பட்ட நான்காம் எண் பீட் பகுதியான சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லக்கூடிய மலைப்பாதையில் உள்ள வருசநாடு சந்திப்பு மணிக்கட்டி பகுதியில் காட்டுத் தீயானது பரவியது.

காட்டுத் தீயினால் பகுதியில் உள்ள அரிய வகை மூலிகைகள் மற்றும் அரிய வகை மரங்கள் எரிந்து சேதம் அடைந்து வருகிறது. வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினை அணைக்க வத்திராயிருப்பு, சாப்டூர் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர் என 20-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயினை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனார்.

காட்டுத்தீ

வனப்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் காட்டுத் தீயினை கட்டுக்குள் கொண்டு வர வனத்துறையினர் போராடி வருகின்றனர். இதனால் வனப்பகுதியில் பரவிவரும் தீயை அணைக்கும் முயற்சியில் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு கோயிலுக்கு சென்று வருகின்றனர்.

இந்த நிலையில், காட்டு தீயானது பக்தர்கள் நடந்து செல்லும் மலைப்பாதைக்கு வந்து விடுமோ என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாமி தரிசனம் முடித்த பக்தர்களை உடனடியாக கோயிலில் இருந்து அடிவாரப் பகுதிக்கு அனுப்பும் பணியில் வனத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

மேலும் கோயிலுக்கு செல்ல தினசரி காலை 6 மணி முதல் 10 மணி வரை அனுமதி இருப்பதால் வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டு தீயினை முழுமையாக அணைத்த பின்னரே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *