
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்பதற்கு முன்பும், இப்போதும், அவருக்கு இருக்கும் முக்கியமான கொள்கைகளில் ஒன்று, ‘ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம்’.
துருக்கியில் இந்தப் போர் நிறுத்தத்திற்காக இரு நாடுகளும் மூன்று கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் ஒரு பயனும் இல்லை.
ரஷ்ய அதிபர் புதின் இறங்கி வருவதாகவே இல்லை. அவர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்க தயாராக இல்லை.
ட்ரம்ப் அறிவிப்பு
சமீபத்தில், ட்ரம்ப், ‘போரை நிறுத்த வேண்டும். இல்லையென்றால், ரஷ்யா மீதுஅதிகளவில் வரி விதிக்கப்படும்’ என்று அறிவித்தார். போர் நிறுத்தத்திற்கான இறுதி நாளாக ஆகஸ்ட் 8-ம் (நேற்று) தேதியை அறிவித்திருந்தார்.
ஆனால், இன்னும் போர் நிறுத்தம் வந்தப்பாடில்லை.
சந்திப்பு எங்கே, எப்போது?
இந்த நிலையில், ட்ரம்ப் மற்றும் புதின் சந்திப்பு உறுதியானது. இப்போது எங்கே, எந்தத் தேதி என்கிற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
ட்ரம்பும், புதினும் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி, அமெரிக்காவில் உள்ள அலஸ்காவில் சந்தித்துகொள்ள உள்ளனர்.
அப்போது ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவுக்கு நல்லதா?
இந்தப் பேச்சுவார்த்தைக்கு பின், இந்தியா மற்றும் பிரேசிலுக்கு நல்ல முடிவுகள் வரலாம்.
காரணம், இந்தியா மற்றும் பிரேசில் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்கின்றன என்று, இரு நாடுகள் மீதும் 50 சதவிகித வரி விதித்துள்ளார் ட்ரம்ப்.
ட்ரம்ப் – புதின் பேச்சுவார்த்தை வெற்றியில் முடிந்தால், இந்த வரி விகிதமும், அபராதமும் குறைக்கப்படலாம்.
