• August 9, 2025
  • NewsEditor
  • 0

Doctor Vikatan: என் வயது 47. எனக்கு கடந்த 2-3 வாரங்களாகவே சரியான தூக்கமில்லை. வாரத்தில் ஒன்றிரண்டு நாள்கள் தூக்கமின்மையால் மிகவும் அவதிப்படுகிறேன். இன்று பலரும் தூக்கமின்மையால் அவதிப்படுவதைக் கேள்விப்படும்போது, எனக்கு இப்போது ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்னை நிரந்தரமாகிவிடுமோ என பயமாக இருக்கிறது. இது சரியாகிவிடுமா… சிகிச்சை தேவையா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

திடீரென ஒருநாள், இரண்டு நாள் அல்லது அதிகபட்சமாக ஒரு வாரத்துக்கு தூக்கமின்மை ஏற்படுவதை ‘ஷார்ட் டேர்ம் இன்சோம்னியா’  (Short-term insomnia) என்கிறோம். மாதக் கணக்கில், வருடக் கணக்கில் தூக்கமில்லாமல் இருக்கும் பிரச்னையைப் போன்றதல்ல இது.  இத்தகைய தற்காலிக தூக்கமின்மைக்குப் பல காரணங்கள் இருக்கலாம். 

இரவு நேரத்தில் ஸ்ட்ரெஸ் இருந்தால் தூக்கம் வராது. உடலும் உள்ளமும் அமைதியாக இருக்க வேண்டியது அவசியம். வீட்டில் நடக்கவுள்ள திருமணம் உள்ளிட்ட விசேஷங்கள், அடுத்தடுத்த நாள்களில் அட்டெண்ட் செய்யவிருக்கிற இன்டர்வியூ, தேர்வு, போட்டிகள், சுற்றுலா போன்றவற்றை பற்றி இரவு நேரங்களில் யோசிப்பார்கள்.  மனது பரபரப்பாக எதையேனும் யோசிக்கும்போதும், சிந்தனைகள் (பாசிட்டிவ்வாகவோ, நெகட்டிவ்வாகவோ) ஓடிக்கொண்டிருக்கும்போதும் தூக்கம் பாதிக்கப்படலாம். வழக்கமாகத் தூங்கும் அறையை, இடத்தை மாற்றிவிட்டு, வேறோர் இடத்தில் தூங்க முயற்சிசெய்யும்போதும் உடல் அந்தச் சூழலுக்குப் பழகாததால் தூக்கம் தடைப்படலாம்.

மாலை 3-4 மணிக்கு மேல் காபி, டீ குடிப்பதை நிறுத்த வேண்டும்.

பெண்களுக்கு மெனோபாஸ், ஆண்களுக்கு ஆண்ட்ரோபாஸ், ஹைப்பர் தைராய்டிசம்,  கர்ப்பகாலம் உள்ளிட்ட நிலைகளில் உடலில் அடிக்கடி ஹார்மோன் மாற்றங்கள் நிகழும். இவையும் தற்காலிக தூக்கமின்மையை ஏற்படுத்தலாம். மாலை 3-4 மணிக்கு மேல் காபி, டீ குடிப்பதை நிறுத்த வேண்டும். ஆல்கஹால் கலந்த பானங்களைக் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும். என்றோ ஒருநாள் வழக்கத்தைவிட அதிக அளவில் காபி, டீ குடிக்க வேண்டியிருக்கலாம். அந்த நாள்களில் தூக்கம் தடைப்படும். மிதமான உடற்பயிற்சி என்பது உறக்கத்துக்கு உத்தரவாதம் தரும் என்பதில் சந்தேகமில்லை. 

ஆனால், சிலர் மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிகமாக உடற்பயிற்சி செய்வார்கள். அப்படிச் செய்வது தூக்கத்தை பாதிக்கும். இரவு நேரத்தில் பரபரப்பான கேம்ஸ் விளையாடுவது, திகில் காட்சிகள் நிறைந்த டி.வி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் பார்ப்பதும் அன்றைய நாளின் தூக்கத்தைக் கெடுக்கும். அடுத்த இரண்டு நாள்களுக்குக்கூட அந்த பாதிப்பு தொடரலாம். பகல் மற்றும் இரவு ஷிஃப்ட்டில் மாற்றி மாறி வேலை பார்ப்பவர்களுக்கு, ஷிஃப்ட் மாறும் நாள்களில் தூக்கம் பாதிக்கப்படலாம். 

இரவு நேரத்தில் , திகில் காட்சிகள் நிறைந்த டி.வி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் பார்ப்பதும் அன்றைய நாளின் தூக்கத்தைக் கெடுக்கும்.

தூக்கமில்லாத இரவுகளில், அது பற்றியே யோசித்துக்கொண்டு, படுக்கையிலேயே புரண்டு கொண்டிருக்க வேண்டாம். படுக்கையிலிருந்து எழுந்து விடுங்கள். பெட்ரூமிலிருந்து வெளியே வந்து விடுங்கள்.  செய்யாமல் விடப்பட்ட சின்னச் சின்ன வேலைகளைச் செய்யலாம். துணிகளை மடிப்பது, அலமாரியை சுத்தம் செய்வது என அது எதுவாகவும் இருக்கலாம்.  எல்லோருக்கும் எல்லா நாள்களிலும் தூக்க நேரம் ஒன்றுபோல இருக்கும் என்று சொல்ல முடியாது. சில நாள்களில் வழக்கத்தைவிட ஒன்றிரண்டு மணி நேரம் அதிகமாகத் தூங்குவதும், ஒருசில நாள்களில் தூக்கமில்லாமல் இருப்பதும் நடக்கும். இது இயல்பானதுதான். மற்றபடி தற்காலிகத் தூக்கமின்மை குறித்து பெரிதாக கவலைப்படத் தேவையில்லை. 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *