• August 9, 2025
  • NewsEditor
  • 0

வாக்காளர் பட்டியல் திருத்தம்

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பயணத்தில் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய தொகுதிகளில் மக்களை சந்தித்தார்.

திமுக ஆட்சி வந்து 50 மாதம் கடந்து விட்டது. உருப்படியான திட்டங்கள் ஏதும் செய்யவிலை. ஆனால் தமிழகம் வளர்ந்துவிட்டது என்பது போன்ற தோற்றத்தை திமுகவும், கூட்டணி கட்சிகளும் பொய்யாக உருவாக்குகிறார்கள்.

இன்று வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு இபிஎஸ் வாய்த்திறக்காதது ஏன் என்று துரைமுருகன் கேள்வி கேட்கிறார். 86 வயதில் பொய்யான அறிக்கை வெளியிடுகிறார்.

இபிஎஸ் சுற்றுப்பயணம்

இப்போது ஆட்சியில் இருப்பது திமுக. அவர்களிடம் தானே அதிகாரம் இருக்கிறது. ஸ்டாலினுக்குக் கீழே தானே அதிகாரிகள் உள்ளனர். ஸ்டாலின் உத்தரவின்பேரில், அமைச்சரின் கட்டுப்பாட்டில் தானே அவர்கள் செயல்படுகினறனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் போன்றவை மாவட்ட ஆட்சியரின் பணி. அதில் இப்போது அதிமுக என்ன செய்ய முடியும்? அதிமுக, பாஜக கூட்டணி வைத்ததும் திமுகவுக்குப் பயம் வந்துவிட்டது. அவர்களுக்கு வெற்றி பெற முடியாதென்று எண்ணம் வந்துவிட்டது. அதனால் இப்படி மடைமாற்றம் செய்கிறார்.

துரைமுருகன் அவர்களே, ஆட்சி உங்களிடம் உள்ளது, நீங்கள்தான் போலி வாக்காளர்களை சேர்க்கிறீர்கள். வயதில் மூத்தவர் என்பதால் மதிக்கிறோம். அதேநேரம், தவறான தகவல் வெளியிட்டால் நிச்சயம் கண்டிப்போம்.

போலி வாக்காளர்கள்

சென்னை மாநகராட்சியில் ஆர்.கே. நகர் தொகுதியில் 27,779 நீதிமன்றத்தின் மூலம் வாக்கு நீக்கப்பட்டது. அதேபோல் பெரம்பூர் தொகுதியில் 12,085 வாக்காளர்கள் முறைகேடாக சேர்க்கப்பட்டதாக நாங்கள் கொடுத்த புகார் விசாரணையில் உள்ளது.

தி.நகர் தொகுதியில் பல்லாயிரக்கணக்கான போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக புகார் கொடுத்திருக்கிறோம்.

சென்னை மாநகராட்சி முழுவதும் திமுக போலி வாக்காளர்களால் மட்டுமே வெற்றி பெறுகிறது. இது உண்மை, ஆதாரபூர்வமாக நீதிமன்ற உத்தரவின் பேரில் சம்பந்தபட்ட அதிகாரிகள் வீடுவீடாகச் சென்று போலி வாக்காளர்களை நீக்கியுள்ளனர். திமுக மக்கள் மற்றும் கட்சிக்காரர்களின் செல்வாக்கை இழந்துவிட்டனர். அதனால் 2026 தேர்தலில் திமுக கூட்டணி படுதோல்வி அடையும்.

நலம் காக்கும் ஸ்டாலின்

”நலம் காக்கும் ஸ்டாலின்” நாலு வருடம் கழித்து இப்போதுதான் மக்களின் மீது பற்று வந்துள்ளதா. திட்டங்களுக்கு பெயர் வைப்பதற்கு நோபல் பரிசு கொடுத்தால் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு தான் தர வேண்டும்.

இபிஎஸ் சுற்றுப்பயணம்

போதைப் பொருள் விற்பனை

போதைப் பொருள் விற்பனை கனஜோராக நடக்கிறது. இந்த போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை, பாலியல் சீண்டல்கள் நடக்காத நாளே இல்லை.

2022ம் ஆண்டு காவல்துறை மானியம் கோரிக்கை முதல்வர் ஸ்டாலின் அவர்களால் வாசிக்கப்பட்டது. அந்த குறிப்பில் 20-வது பக்கத்தில், பள்ளி கல்லூரிக்கு அருகில் 2348 பேர் கஞ்சா விற்றதாக கண்டறியப்பட்டது. ஆனால் கைதுசெய்யப்பட்டது 148 பேர். மற்றவர்கள் எல்லாம் யார்? அவர்கள் எல்லாம் திமுககாரர்கள். அப்புறம் எப்படி கஞ்சாவை கட்டுப்படுத்த முடியும்? எந்த கேள்வி கேட்டாலும் பதிலே கிடையாது.

சட்டமன்ற உரை

நான் சட்டமன்றத்தில் 2 மணி நேரம் 50 நிமிடம் பேசினேன். அப்போது அவர், இவ்வளவு நேரம் பேசிவிட்டீர்கள். நான் போய் பதிலுக்காக குறிப்பெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதனால் பேச்சை நிறுத்திக்கொண்டேன். இவ்வளவு நேரம் ஏன் பேசுகிறேன்? ஆட்சியில் நடக்கும் குறைகளைத்தானே சுட்டிக்காட்டுகிறேன். திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து இன்றுவரை மக்கள் போராடுகிறார்கள்.

வேலைவாய்ப்பு

அதிமுக ஆட்சிக்காலத்தில் 2019 ஆம் ஆண்டு பொருளில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி 3. 05 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டது. 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. இதே லட்சக்கணக்கான முதலீடுகளை ஈர்த்துள்ளோம், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி உள்ளோம் என கூறுகிறது. ஆனால் நாங்கள் கேட்ட வெள்ளை அறிக்கை மட்டும் வெளியிட தயங்குகிறது.

கடன் சுமை

இந்த ஐந்தாண்டில் 5 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன் சுமை. உங்களிடம் தான் வசூல் செய்வார்கள். ஒருநாள் திமுக அரசு தமிழ்நாட்டையே கடன் வாங்கியதற்கு அடமானம் வைக்கப்போகிறது. அப்படிப்பட்ட காலம் வந்துவிடும், எதிர்க் கட்சித் தலைவராக இருந்தபோது கடனை குறைக்க நிபுணர் குழு அமைக்கப்படும் என்றார். ஆனால், அதற்காக அமைத்தார்களா. கடன் வாங்குவதற்கே நிபுணர் குழு அமைத்தார்கள்.

அதிமுக ஆட்சியில் ஒருநாளைக்கு 700 முதல் 800 ரூபாய் ஊதியம் கிடைத்தது. இந்த திமுக ஆட்சியில் 150 ரூபாய்தான் கிடைக்கிறது என்றார்கள்.

இபிஎஸ் சுற்றுப்பயணத்தில் மக்கள்

விலைவாசி உயர்வு

நீங்கள் புள்ளிவிவரம் சொல்கிறீகள். வெளியே வந்து நாட்டு மக்களைப் பாருங்கள், மக்கள் கஷ்டத்தை பார்த்து தெரிந்து பேசுங்கள். விலைவாசி உயர்வு விண்ணை முட்டிவிட்டது. விலை குறைப்பதற்கு திமுக என்ன நடவடிக்கை எடுத்தது?

இதே அதிமுக ஆட்சியில் விலை கட்டுப்பாட்டு நிதியம் அமைத்து 100 கோடி ரூபாய் ஒதுக்கி, உணவுத்துறை மூலமாக எந்த மாநிலத்தில் விலை குறைவாக இருக்கிறதோ, அங்கிருந்து வாங்கி வந்து, இங்கு விற்பனை செய்தோம். அண்டை மாநிலத்தில் இருந்தும் கூட வாங்கி வந்து விலையைக் கட்டுப்பாட்டில் வைத்தோம். அப்படி ஏதாவது இந்த ஆட்சியில் செய்தார்களா?

11 மருத்துவக்கல்லூரி

அதிமுக ஆட்சியில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தமிழகத்தில் 11 மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் ஒரு மருத்துவக்கல்லூரியாவது தொடங்க முடிந்ததா. கடந்த 6 மாத்தில் 6 காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர். காவலர்களுக்கே பாதுகாப்பில்லாமல் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது. இதை நான் சொன்னால் நான் பொய் சொல்கிறேன் என ஸ்டாலின் சொல்லுவார்.

சிறுமி முதல் பெரியவர்கள் பெண்கள் என யாருக்கும் தமிழகத்தில் பாதுகாப்பில்லை. இது கட்சி அல்ல கம்பெனி, கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி அவரை தொடர்ந்து இன்பநிதியையும் கொண்டுவருவார்.” என்று எடப்பாடி தனது பிரசார உரையில் தெரிவித்துள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *