
குஜராத் மாநிலத்தில் குஸ்தாத் என்பவர் தான் இறப்பதற்கு முன்பு தனது வீட்டில் சமையலாளராக பணியாற்றிய பெண்ணின் பேத்தியான அமிஷாவுக்கு தனது வீட்டை வழங்குவதாக உயில் எழுதி கொடுத்துள்ளார்.
முன்னாள் டாடா இண்டஸ்ட்ரீஸ் ஊழியரான குஸ்தாத், 2014 ஜனவரி 12ஆம் தேதி அன்று மரணமடைந்திருக்கிறார். இறப்பதற்கு ஒரு மாதம் முன்பு தனது பங்காளவை, வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் பேத்திக்கு உயில் எழுதி கொடுத்துள்ளார். குஸ்தாத் மனைவி 2001 இல் காலமாகி இருக்கிறார்.
அவருக்கு மகன், மகள்கள் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. அமிஷா அப்போது 13 வயது சிறுமியாக இருந்துள்ளார் பாட்டியுடன் சேர்ந்து அவரும் அந்த வீட்டிற்கு அடிக்கடி வந்துள்ளார்.
இதனால் அவர்களுக்கு அமிஷா மீது ஒரு பிணைப்பு உருவாகி இருக்கிறது. அமிஷாவின் கல்வி செலவை அவரே ஏற்று தனது குழந்தையைப் போலவே அவர் கருதி இருக்கிறார்.
அமிஷா கடந்த 2023 ஆம் ஆண்டு அந்த உயில் குறித்து நீதிமன்றத்தில் உரிமை கோரி இருக்கிறார். உயிலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க பொது அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. குஸ்தாத் சகோதரரும் அமிஷாவுக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்.
இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் இரண்டாம் தேதி நீதிமன்றம் உயிருக்கு அனுமதி வழங்கி அமிஷாவுக்கு வாரிசு சான்றிதழை வழங்கி இருக்கிறது.
தற்போது தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அமிஷா இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா வலைதளத்தில் தெரிவித்து இருக்கின்றார்.
அதன்படி” அவரை நான் தாய் என்றே அழைப்பேன், அவர் என்னை கவனித்துக் கொள்ள விரும்பினார். எனக்கு அப்பாவாகவும், அம்மாவாகவும் இருந்தார். 13 வயது வரை அவர் எனக்கு பாதுகாப்பு கவசமாக இருந்தார். அவர் என்னை தத்தெடுக்க விரும்பினார்.
ஆனால் எனது நலன் கருதி கொண்டு அதை செய்யவில்லை காரணம் தத்தெடுத்த பின்பு எனது உயிரியல் பெற்றோரிடமிருந்து விலக்கி விடக்கூடாது என்பதற்காக அவர் அதனை செய்யவில்லை. இரு குடும்பத்தினர்களிடமிருந்து எனக்கு அன்பு கிடைக்க வேண்டும் என்று அவர் எப்போதும் விரும்பினார்” என்று குஸ்தாத் குறித்து அமிஷா நினைவு கூர்ந்து இருக்கிறார்.