
மலேசியாவைச் சேர்ந்தப் பெண் நூரூல் சியாஸ்வானி. இவருக்கு 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு இவருக்கு ஒரு குழந்தை பிறந்தது. வாழ்க்கை அற்புதமாகச் சென்றுக்கொண்டிருந்தபோது, வாழ்க்கையின் பெரும் இடிவந்து இறங்கியது நூரூல் சியாஸ்வானிக்கு. 2019-ம் ஆண்டு அவரின் கணவர் கார் விபத்தில் கடும் காயமடைந்து படுக்கையில் வீழ்ந்தார். ஆனாலும், கணவன் மீது வைத்திருந்த அன்பால் கணவரை குழந்தையைப்போல பார்த்துக்கொண்டார். குழாய் மூலம் உணவளித்ததில் தொடங்கி, டையப்பர் மாற்றுவது வரை எல்லா சேவைகளையும் செய்துவந்தார்.
இதை தன் சமூக ஊடகங்களில் எழுதியிருந்தார் நூரூல் சியாஸ்வானி. இந்த நிலையில், கடந்த ஆண்டு நூரூல் சியாஸ்வானியின் கணவர் குணமடைந்தார். சாதாரண வாழ்க்கையை வாழத் தொடங்கிய சில வாரங்களில் நூரூல் சியாஸ்வானியை விவாகரத்துச் செய்வதாகத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து நூரூல் சியாஸ்வானியும் அவரின் விருப்பத்துக்கு சம்மதம் தெரிவித்து விவாகரத்தை ஏற்றுக்கொண்டார். இந்த விவாகரத்து நடந்த சில வாரங்களில் அவர் வேறொருப்பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.
இதில் ஆச்சர்யமான விஷயம், நூரூல் சியாஸ்வானி தன் சமூக ஊடகப் பக்கத்தில் தன் முன்னாள் கணவரின் புதிய திருமணப் புகைப்படத்தை பதிவிட்டு, திருமண வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
அதில், “என் ‘கணவருக்கு’ வாழ்த்துகள். நீங்கள் தேர்ந்தெடுத்தவருடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். தயவுசெய்து என்னைப் போலவே அவரை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். நான் அவருடன் வாழ்ந்து முடித்துவிட்டேன்; இப்போது அவருக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய நேரம் இது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தப் பதிவுக்கு சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் வந்தது. அதில் ஒருபுறம் கணவரை ஏமாற்றுக்காரர், நன்றிகெட்டவர் என்ற விமர்சனமும், இன்னொருபுறம், இப்படி கேவலமாக நடந்துக்கொண்டவரை இன்னொருப் பெண்ணும் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என வாழ்த்துவதும், அதைப் பொறுமை என நம்பி தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்வதும் புத்திசாலித்தனம் அல்ல’ என்றும் விமர்சனங்கள் வந்துக்கொண்டிருக்கிறது.
`விபத்துக்கான சிகிச்சையில், குழந்தையைப் போல கவனித்த மனைவிக்கு விவாகரத்து பரிசா?’ – என்று நெட்டிசன்கள் வேதனையோடு கருத்து தெரிவித்து வருகின்றனர்.