
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
1995 இல் பாட்ஷா படத்தில் “எட்டு எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சுக்கோ” என்று பாடுவதற்கு ஏழு வருடங்களுக்கு முன்பே , நம்ம ஜூனியர் விகடன் 8.8.88 என்று சிறப்பிதழை வெளியிட்டு அசத்தியது . விகடன் ஊழியர்கள், விகடன் வாசகர்கள் ,வெகுஜன மக்கள் என எத்தனை பேருக்கு இந்த சிறப்பிதழையும் , சிறப்பான தேதியையும் நினைவில் வைத்திருப்பார்கள் என்று தெரியவில்லை ..
எனக்கு மட்டும் இந்த தேதியும் , சிறப்பிதழும் பசு மரத்து ஆணி போல் பதிந்து விட்டது.
காரணம் எனக்கு விகடன் அறிமுகமான 1986 ல் இருந்து விகடனில் அவ்வப்போது நான் எழுதிய வாசகர் கடிதங்கள் ஒன்றிரண்டு வெளியானதை வைத்து நான் என்னமோ பெரிய எழுத்தாளர் என்ற தோரணையில் எங்கள் கல்லூரி நண்பர்களிடையே மிகவும் பிரபலமானேன். அதே போன்று 757 , அண்ணாசாலை , சென்னை -2 என்ற முகவரிக்கு அவ்வப்போது எழுதும் கடிதங்களை வைத்து சென்னையை நான் என்னமோ முழுசா கரைத்துக் குடித்தவன் போல் நண்பர்கள் நினைத்து கொண்டார்கள் .
இப்படியிருக்கையில் செல்வம் என்ற எனது விடுதி நண்பன் , விமானப்படையில் சேரும் ஆர்வத்தில் விண்ணப்பித்திருந்தார் . எழுத்து தேர்விற்கு வந்த அழைப்பிதழை வைத்து , அவனுக்கு சென்னை பயணம் முதல் முறை என்பதால் என்னையும் துணைக்கு அழைத்தான்.
வாணியம்பாடியில் இருந்து தாம்பரம் விமானப்படை அலுவலகத்திற்கு அவனை அழைத்து சென்று தேர்வு எழுத அனுப்பிவிட்டு , வழக்கமாக நான் வாசிக்கும் ஜூனியர் விகடனை வாங்கினேன். அந்த சிறப்பிதழ் தான் 8.8.88
8.8.88 தேதி குறித்த சிறப்பு கட்டுரைகள் சுவையான தகவல்களும் அந்த இதழ்கள் முழுவதும் நிறைந்து கிடந்தது. முழு இதழையும் முழு மூச்சாக படித்து முடிக்கையில் ,உள்ளே தேர்வு எழுத போன நண்பன் வெளியே வரவும் சரியாக இருந்தது . அப்போதெல்லாம் வெளியூர்களுக்கு செல்லும் பேருந்து நிலையம் பிராட்வே யில் இருந்தது. அதனால் பிராட்வே போகிற வழியில் மவுண்ட் ரோட்டில் ஆனந்த விகடன் ஆபீசை பார்த்துவிட்டு போய்விடலாம் என்று என் நண்பரிடம் சொன்னேன். அவரும் ஒத்துக் கொண்டார் . தாம்பரத்திலிருந்து பிராட்வே செல்லும் பேருந்து ஏறி LIC என்று டிக்கெட் வாங்கிவிட்டோம்.
தற்போது அளவுக்கு போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலையில் அப்போதைய பல்லவன் பேருந்து கிண்டி கடந்து சைதாப்பேட்டை நெருங்கும் போது வழியில் தெரிந்த கடை பெயர் பலகையில் அண்ணாசாலை என்று பார்த்தவுடன் அனந்த விகடன் அலுவலகம் வந்து விட்டது என்று எண்ணி இரங்கி விட்டோம்.

அருகருகே இருந்த கடைகளில் உள்ள கதவு இலக்க எண்ணை வைத்து 757 அண்ணா சாலை என்ற முகவரியை தேடி நடக்க ஆரம்பித்தோம். நடக்கிறோம்… நடக்கிறோம்… நடக்கிறோம்… ஆனந்த விகடன் அலுவலகத்தை கண்டுபிடிக்க முடியவில்லை வழியில் தென்பட்ட சில பேரிடம் கேட்டோம் அவர்களுக்கு சரியாக விலாசம் சொல்ல தெரியவில்லை .
திடீரென்று கதவு இலக்கங்கள் ஏறுவரிசையில் தெரிவதும் இறங்கு வரிசையில் மாறுவதையும் கண்ட எனக்கு தவறாக இறங்கி விட்டோமோ என்று தெரிந்தும் வெளியில் கட்டி கொள்ளாமல் , இதோ வந்து விட்டது.. இதோ வந்து விட்டது என்று நடந்து கொண்டே இருந்தோம். அட எங்க தான் இருக்கு அந்த .. 757 அண்ணா சாலை..இப்படி நடக்க வைக்கிறியே ன்னு நண்பன் கடிந்து கொண்டான் பக்கத்தில் தான் இருக்கு வா வா போய் விடுவோம் என்று சொல்லிக் கொண்டே எனக்கும் தெரியாது என்பதை பூசகமாக மறைத்து அவரை நடத்திக் கொண்டே சுமார் எட்டு கிலோ மீட்டர் தூரம் வரை சென்றவுடன் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
சென்னை 15 க்கும் , சென்னை 2 க்கும் வித்தியாசம் தெரியாமல் , அண்ணா சாலை என்று பார்த்தவுடன் அவசரமாக இறங்கியதன் தவறு கால் வலிக்க நடந்தும் கடைசி வரை ஆனந்த விகடன் அலுவலகத்தை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினோம்.
அடுத்த சில வருடங்கள் கழித்து ஆனந்த விகடன் அலுவலகத்தை பார்த்தே தீர வேண்டும் என்ற ஆசையில் அலைந்த போது வாசன் அவன்யூ கண்ணில்பட்டது . வாசல் வரை வந்து வணங்கி விட்டு சென்றேன்.
8.8.88 சிறப்பு இதழை படித்துவிட்டு
8 கிலோமீட்டர் நடந்து
ஏமாற்றத்துடன் சென்றதை ,
என்னைப்போன்றே சென்னையில் இருக்கும்
நண்பன் செல்வம் அடிக்கடி சொல்லிக் காட்டுவான்
அதே 08.08 ல் இந்த கட்டுரை அவன் கண்ணில் படும்போது , ஆச்சர்யமுடன் அழைப்பான் . ஏமாற்றாமல் அவன் அழைப்பை ஏற்று பேசுவேன்.
-பூநசி.மேதாவி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!