• August 8, 2025
  • NewsEditor
  • 0

இந்தியாவின் ஐஸ்கிரீம் சந்தை கடந்த பத்தாண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில், பாரம்பரிய குளிர்பானங்களிலிருந்து நவீன ஐஸ்கிரீம் வகைகளுக்கு மக்களின் விருப்பம் மாறியுள்ளது. இந்த மாற்றம் வணிக உலகில் பல புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்தியாவின் ஐஸ்கிரீம் சந்தை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அனுபவித்து வருகிறது. 2024-ல் சந்தை அளவு ₹268 பில்லியன் (இரண்டு லட்சத்து அறுபத்து எட்டு ஆயிரம் கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2033-ல் ₹1.07 டிரில்லியன் ஆக உயர்ந்து, ஆண்டு வளர்ச்சி விகிதம் (CAGR) சுமார் 16.7% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற மற்றும் கிராமங்களும் நகர்ப்புறமாக மாற்றப்பட்டு வருவதும், வாழ்க்கைத் தரம் உயர்ந்ததும், இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்ததும் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

ஐஸ்கிரீம்

பிரபல பிராண்டுகளான அமுல், வடிலால், நேச்சுரல் ஐஸ்கிரீம், கேவன்டர்ஸ், அருண் ஐஸ்கிரீம் போன்றவை இந்திய சந்தையில் முன்னணியில் உள்ளன. உள்ளூர் பிராண்டுகளும் கணிசமான பங்கு வகிக்கின்றன.

தமிழ்நாட்டின் வெப்பமான காலநிலை ஆண்டு முழுவதும் ஐஸ்கிரீம் தேவையை உறுதி செய்கிறது. கோடைக்காலத்தில் மட்டுமல்லாமல், மற்ற பருவங்களிலும் நல்ல விற்பனை இருப்பது தமிழ்நாட்டின் சிறப்பம்சமாகும்.

தமிழ் மக்களின் இனிப்பு விருப்பத்திற்கேற்ப, கல்கண்டு, இலாய்ச்சி, அல்வா, பால் கோவா போன்ற பாரம்பரிய சுவைகளில் ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுகிறது. இது உள்ளூர் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெறுகிறது.

சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம் போன்ற நகரங்களில் ஐஸ்கிரீம் நுகர்வு கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த நகரங்களில் உள்ள மால்கள், சினிமா தியேட்டர்கள், கடற்கரைகளில் ஐஸ்கிரீம் விற்பனை சிறப்பாக நடைபெறுகிறது.

புதிய தொழில்முனைவோர்கள் ஐஸ்கிரீம் துறைக்கு வந்தாலும் ஏற்கனவே உள்ள சந்தையில் புதிய ஐஸ்கிரீம்களை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

தமிழ்நாட்டின் ஐஸ்கிரீம் சந்தை நம்பிக்கை அளிக்கும் வளர்ச்சிப் பாதையில் உள்ளது. சாதகமான காலநிலை , மக்களின் வருமான அதிகரிப்பு, புதிய சுவை வகைகளின் ஏற்றுக்கொள்ளுதல் போன்ற காரணங்கள் இந்த வளர்ச்சியை தொடர்ந்து ஊக்குவிக்கும். குளிர்பதன வசதி மேம்பாடு, ஊரக பகுதி விரிவாக்கம், ஆரோக்கியமான வகைகள் அறிமுகம் போன்றவற்றின் மூலம் இந்த சந்தையின் முழு ஆற்றலையும் பயன்படுத்த முடியும். ஐஸ்கிரீம் துறையில் நிறைய இயந்திரம் சார்ந்த கண்டுபிடிப்பு்களுக்கும் தேவை இருக்கிறது, தமிழ்நாட்டின் இனிப்பு ரசிகர்களும், வெப்பமான காலநிலையும் ஐஸ்கிரீம் தொழிலுக்கு நல்ல அடித்தளமாக உள்ளன. சரியான திட்டமிடல் மற்றும் நுகர்வோர் விருப்பங்களை புரிந்து கொண்டு செயல்பட்டால், இந்த சந்தையில் நல்ல வெற்றியைப் பெற முடியும்.

இப்படிப்பட்ட சந்தையில், கணவரை இழந்து தனி பெண் ஒருவராக, பல இடங்களில் பயிற்சி பெற்று சில பல தோல்விகளுக்குப் பிறகு, ஐஸ்கிரீம் உருவாக்கம் இவருக்கு வசமான பின்பு இன்று 250க்கும் மேற்பட்ட நமது உள்ளூர் உணவுப்பொருட்களை வைத்து ஐஸ்கிரீம் செய்து அதை சந்தைப்படுத்தியும், கிளைகளை அமைத்தும் வெற்றிகரமாக வலம் வரும் திருமதி. லதா ராஜா அவர்களின் சில் அன் ஹீல் ஐஸ்கிரீமில் (Chill N Heal Icecreams) வளரும் சாகசக் கதையைதத்தான் நாம் இன்று பார்க்கப்போகின்றோம்.

`இன்றைய தமிழ்நாட்டில் வீட்டிலிருந்து எல்லாருமே சமையல் மசாலாவில் குவிந்துகிடக்கும்போது நீங்கள் எப்படி மட்டும் ஐஸ்கிரீம் நோக்கி உங்கள் தொழில்முனைவை ஆரம்பித்தீர்கள்? என்ன காரணம்?’

`2018-ல் வீட்டு முறைப்படி சமையல், வீட்டிலிருந்து தயாரிக்கப்படும் கேக் வகைகள் செய்து கொண்டிருந்தோம். அப்போது நம் பிள்ளைகளுக்கு கடையில் இருந்து வாங்கி கொடுக்கும் கேக் வகைகளில் என்னென்ன சேர்த்திருக்கிறார்கள் என்பதை பார்க்க ஆரம்பித்தேன். கேக் ஜெல், கேக் கலர், இன்னும் சில பொருட்கள் சேர்த்திருப்பதை கண்டேன். நாம் செய்யும் பொருட்களில் இவை எல்லாம் இல்லாமல் செய்ய வேண்டும் என்பதை உறுதி எடுத்துக் கொண்டு கேக் வகைகள் தயார் செய்தோம்.

அதன்பின் குழந்தைகள் அதிகமாக விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீம் வகைகளில் என்னென்ன இருக்கும் என்பதை பார்த்தேன். அதில் பாமாயில், வெஜிடபிள் ஆயில், ப்ரோஸன் பல்ப், Emulsifier, preservatives, essential oils, flavours, colours ஆகியவை சேர்த்திருப்பதைப் பார்த்தேன். என் மகள் அதிகமாக ஐஸ்கிரீம் சாப்பிட விரும்புவாள். ஆகையால் நாமே வீட்டில் ஐஸ்கிரீம் தயாரித்து கொடுக்க திட்டமிட்டு வீட்டிலிருந்து ஆன்லைன் வழியே நிறைய பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு செய்ய பழகினேன். அதில் நிறைய தவறுகள் நடந்தன.

பின் தொடர் முயற்சியில் கிட்டத்தட்ட 80 சதவீதம் ஐஸ்கிரீம் வந்தது. 100% ஐஸ்கிரீம் முறை செய்ய கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக தஞ்சாவூரில் இருக்கும் NIFTEM உதவியுடன் பயிற்சி எடுத்துக் கொண்டதோடு, சென்னையில் உள்ள கல்லூரியில் பயிற்சி எடுத்துக்கொண்டு சிறு சிறு மாறுதல்களைக் கொண்டு ஐஸ்கிரீம் செய்து லேப் டெஸ்ட் செய்து பார்த்தேன். அதில் நல்ல ரிசல்ட் இருந்தது. பின் அந்த ஐஸ்கிரீமை என் மகளுக்கு கொடுக்க ஆரம்பித்தேன்.

அவளுக்கு எந்தவிதமான பின்விளைவுகளும், அதாவது காய்ச்சலோ சளியோ பிடிக்கவில்லை. அதன் பின் தான் இதைத் தொழிலாக செய்ய வேண்டும் என்று முடிவு செய்து தயாரிக்க ஆரம்பித்தேன். ஆரம்பகட்டத்தில் hand blender, கேஸ் அடுப்பு மற்றும் deep freezer இவற்றின் உதவியுடன் ஐஸ்கிரீம் தயார் செய்தேன்.”

“காய்கறிகள், சிறுதானியங்கள், மற்றும் பாரம்பரிய அரிசி வகைகள் போன்ற வழக்கத்திற்கு மாறான பொருட்களைப் பயன்படுத்தி 250க்கும் மேற்பட்ட வகையிலான ஐஸ்கிரீம்களை உருவாக்க உங்களுக்கு எது உத்வேகம் அளித்தது?”

“நம் பிள்ளைகளை காய்கறிகள், சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி வகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இட்லி தோசை எதுவாக இருந்தாலும் சாப்பிட வைப்பதற்கு அம்மாக்களுக்கு சிரமமாக இருக்கும். அதை நானும் உணர்ந்தேன். அதுவே ஐஸ்கிரீமாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள். இந்த வழிமுறையையே வணிகமாக மாற்றினேன். இதனால் இரண்டு விஷயம் நடந்தது. நமது உள்ளூர் பொருட்களும் ஐஸ்கிரீமுக்கு மாறின, பெற்றோர்களுக்கும் சுலபமாக குழந்தைகளை சாப்பிட வைக்க முடிந்தது.

“ஒரு புதிய உணவுப்பொருட்களிலிருந்து ஐஸ்கிரீம் உருவாக்கும் செயல்முறை பற்றி சொல்ல முடியுமா? சிறுதானியம் அல்லது கீரை ஐஸ்கிரீம் போன்ற ஒரு யோசனையிலிருந்து ஒரு முழுமையான தயாரிப்புக்கு நீங்கள் எவ்வாறு தயார் ஆகிறீர்கள்?”

“ஒரு புதிய வகையான ஐஸ்கிரீமைச் செய்வதற்கு கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் முதல் ஆறு மாத காலமாகும். உதாரணத்திற்கு சிறுதானியத்தை எடுத்துக் கொண்டால் சிறுதானிய பால் மற்றும் அதற்கு ஏற்ற இனிப்பு, அதன் சுவை மற்றும் அதற்கு ஏற்றவாறு பால் பொருட்களைக் கொண்டு தயார் செய்ய வேண்டும். அதைத் தயார் செய்து வைத்துவிட்டு deep freezerல் வைத்தால் சுவை கூடுகிறதா இல்லை சுவை குறைகிறதா என்பதைப் பார்க்க வேண்டும். அது மட்டுமில்லாமல் ஐஸ்கிரீமின் temperature fixing பார்க்க வேண்டும். எல்லாம் சரியாக அமைந்தால் அந்த ஐஸ்கிரீமை samples கொடுப்போம். Customer இடம் feedback கேட்போம். ஏதாவது குறைகள் வந்தால் அதைச் சரி செய்துவிடுவோம். உணவு ஆய்வகத்தில் கொடுத்துப் பரிசோதனை செய்வோம், அதன் பின் சந்தைக்கு அறிமுகப்படுத்துவோம்.”

“சத்தான, வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட, மற்றும் கையால் செய்யப்பட்ட தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், தரத்தை நிலைநிறுத்திக்கொண்டு மூலப்பொருட்களைப் பெறுவதிலும், உற்பத்தியை அதிகரிப்பதிலும் நீங்கள் என்னென்ன சவால்களை எதிர்கொண்டீர்கள்?”

“அம்மாக்கள் சமைக்கும் உணவு எவ்வளவு சுத்தமாகவும், சத்தானதாகவும் தயாரிக்கப்படுகிறதோ அதே முறையில்தான் நம் ஐஸ் ராஜா ஐஸ்கிரீம்களும் தயாரிக்கப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் ஐஸ் கிரீம் தயாரிக்கும் இயந்திரங்கள் மார்க்கெட்டில் கிடைக்கிறது. அதில் பால் ஊற்றினால் கிட்டத்தட்ட 1 நாளில் ஐஸ்கிரீமாக எடுக்கலாம். இவ்வகை மிஷினில் ஐஸ்கிரீம்கள் தயாரித்தால் கெமிக்கல்ஸ் சேர்த்துத்தான் தயார் செய்ய வேண்டும். அதற்குண்டான வழிமுறைகளை மெஷின் தயாரிப்பாளர்களே கற்றுக் கொடுக்கிறார்கள். ஆனால் நாங்கள் பெண்களை (அம்மாக்கள்) வைத்துத்தான் தயார் செய்கிறோம் மற்றும் வேலை வாய்ப்புகள் அதிகப்படுத்தும் நோக்கத்திலும் குறிப்பாக பெண்களுக்கு வேலை கொடுத்து காய்கறிகள், பழங்கள், கீரைகள், சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகள் எல்லாம் சுத்தம் செய்து முறைப்படி பக்குவம் செய்து ஐஸ்கிரீம்களாக மாற்றுகிறோம்.

நம் ஐஸ்கிரீம்களுக்கு பால்தான் முக்கிய பொருள், அதன் தரத்தை அறிந்த பின்தான் உபயோகம் செய்கிறோம். பால் அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்சி அதைக் குளிர வைத்து அதன் பின்தான் ஐஸ்கிரீம் தயாரிக்கிறோம். பாலிலிருந்து ஐஸ்கிரீமாக மாறுவதற்கு கிட்டத்தட்ட 4 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை ஆகும் இதுவே எங்களுக்குப் பெரிய சவால்தான். நம்மிடம் 250 + வகைகளில் ஐஸ்கிரீம் இருப்பதால் முன்கூட்டியே தயார் செய்து storage செய்ய மாட்டோம். ஆர்டர் வந்த பிறகுதான் தயாரிக்க ஆரம்பிப்போம்.”

“கருப்பட்டி, நாட்டு சர்க்கரை, மற்றும் பாரம்பரிய அரிசி போன்ற உங்கள் சுவைகளில் பல, தென்னிந்திய பாரம்பரிய மூலப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டவை. இந்த சுவைகளை இணைத்ததற்கான கதையையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?”

“நோய் வருவதற்கு முதல் காரணம் அதிகமாக வெள்ளை சக்கரை உபயோகப்படுத்துவது, பாலிஷ் செய்த அரிசி மற்றும் சிறுதானிய வகைகளை பயன்படுத்துவது, அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பது, அதிக எண்ணெய் உணவில் சேர்ப்பது. இதை நாம் தொடர்ந்து உட்கொண்டால் சர்க்கரை நோய், இருதய நோய், உடல் பருமன் இன்னும் பல நோய்கள் வரும். ஆகவேதான் நம் தயாரிப்புகளில் சர்க்கரையின் அளவு குறைவாகத்தான் இருக்கும், பழத்தின் இனிப்பு எவ்வளவு இருக்குமோ அந்த அளவிற்குத்தான் ஐஸ்கிரீமின் இனிப்பும் இருக்கும்.

நம் முன்னோர்கள் அந்தக் காலத்தில் அவர்களுடைய உணவில் கருப்பட்டி, நாட்டு சக்கரை, சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி வகைகளைக் கொண்டு உணவு சாப்பிட்டதால்தான் அவர்கள் ஆரோக்கியமாக இருந்தார்கள். ஆனால் இன்றைய தலைமுறையினர் இவ்வகையான உணவு எடுப்பதில்லை, சிக்கல்கள் இருக்கின்றன. இன்றைய தலைமுறையினருக்காக இவ்வகையான ஐஸ்கிரீம்களைத் தயார் செய்ய ஆரம்பித்தோம்.

Modern Food in Traditional Way

அது மட்டுமில்லாமல் இவ்வகையான ஐஸ்கிரீம்களை லேப் டெஸ்ட் செய்து பார்க்கும்போது இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், ஃபைபர் இருந்தது. ஆகவே நாம் சத்தான பொருட்களைத்தான் தயாரிக்கிறோம் என்ற மகிழ்ச்சியுடன் இன்னும் பல வகைகளில் கொண்டு வர ஆரம்பித்தோம். ஆனால் தரத்தில் எந்த சமரசமும் இல்லாமல் நாங்கள் செயல்படுகின்றோம்.”

“உங்கள் வாடிக்கையாளர்களிடையே மிகவும் ஆச்சரியமான அல்லது பிரபலமான சுவை எது, மேலும் நீங்கள் உருவாக்கியதில் நீங்கள் மிகவும் பெருமைப்படும் சுவை எது?”

“வெற்றிலை ஐஸ்கிரீம், இஞ்சி, பஞ்சாமிர்தம் ஐஸ்கிரீம், ராகி வேர்க்கடலை ஐஸ்கிரீம், ராகி சாக்லேட் ஐஸ்கிரீம், கம்பு கருப்பட்டி, கருப்பு கவுனி கருப்பட்டி இவைகள் எல்லாம் பிரபலமானவை. மதுரையில் ஒரு பெரியவர் அவரின் வயது 90, அவர் எங்களிடம் அதிகமாக விரும்பி சாப்பிட்ட ஐஸ்கிரீம் எதுவென்றால் கம்பு கருப்பட்டி ஐஸ்கிரீம்.

அதேபோல் கோவையில் 70 வயது பாட்டி ஒருவர் கம்பு இளநீர் ஐஸ்கிரீம் சுவைத்து மிகவும் பாராட்டினார். நாங்கள் உருவாக்கியதில் பெருமைப்படும் ஐஸ்கிரீம் வகை எதுவென்றால் குழந்தைகளுக்காக பிரத்யேகமாகத் தயாரித்த சிறுதானியத்தோடு பழங்கள், சாக்லேட்ஸ், வேர்க்கடலை இவைகளைக் கொண்டு இணைத்து ஐஸ்கிரீம் தயாரித்தோம். குழந்தைகளுக்கு சிறுதானியத்தை ஐஸ்கிரீமில் சேர்த்துக் கொடுக்க ஆரம்பித்தோம். அடுத்த தலைமுறைக்கும் நம் பாரம்பரிய தானியங்களை இப்படித்தான் அறிமுகப்படுத்துகின்றோம்.”

“வேகன், சர்க்கரை இல்லாத, மற்றும் குல்ஃபி போன்ற பல்வேறு விருப்பங்களைக் கொண்ட உங்கள் மெனுவைப் பார்க்கும்போது, சுவையில் சமரசம் செய்யாமல் வெவ்வேறு உணவுத் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு நீங்கள் எவ்வாறு சேவை செய்கிறீர்கள்?”

“பால் அலர்ஜி உள்ளவர்களுக்குப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம் வகைதான் வேகன் ஐஸ்கிரீம். இதில் பாலுக்கு மாற்றாகப் பருத்தி பால், தேங்காய் பால், சோயா பால் இவற்றைக் கொண்டு வேகன் ஐஸ்கிரீம் தயாரிக்கிறோம்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஐஸ்கிரீமை உண்ண முடியாது. ஆகவே அவர்களுக்குத் தயாரிக்கப்பட்டதுதான் சர்க்கரை இல்லாத ஐஸ்கிரீம். இவற்றில் நாங்கள் சீனி துளசியை உபயோகம் செய்து ஐஸ்கிரீம்கள் தயாரிக்கிறோம். அதை உணவு ஆய்வகத்தில் கொடுத்து பரிசோதனை செய்கிறோம்.”

“இதுவரை உங்கள் வணிகத்தில் நீங்கள் சந்தித்த சிக்கல்கள் என்ன? அவற்றை எப்படி எதிர்கொண்டீர்கள்?”

1. நாம் தயாரிக்கும் பொருட்கள் மட்டும் இயற்கையானதாக இருந்தால் மட்டும் போதாது, நாம் அதைக் கொண்டு சென்று மக்களிடம் சேர்க்கும் விதமும் நல்ல விதத்தில் இருக்க வேண்டும் என்று எண்ணினோம். கடந்த ஆறு ஆண்டுகளாக 4 லிட்டர் கார்ட்டன் பாக்ஸ்களில் மட்டுமே நிரப்பிக் கொடுத்தோம். மொத்த வணிகத்திற்கு இது ஏற்றதாக இருந்தது. ஆனால் ரீடைல் வணிகத்திற்கு இதனால் ஒரு குறிப்பிட்ட அளவில் எங்களால் டப்பாக்களைத் தயாரிக்க முடியவில்லை. பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் தெரிந்து கொண்டு அதில் நிரப்பிக் கொடுக்க மனமில்லை. ஆகவே அதற்கு மாற்று யோசனையாக மண்பாண்டம் தயாரிக்கும் நபர்களிடமிருந்து குறிப்பிட்ட அளவில் அதாவது 125 ml அளவுள்ள மண்பானைகளைத் தயார் செய்து அதற்குரிய மக்கும் தன்மையில் உள்ள பெட்டிகளில் அடைத்து விற்பனைக்குக் கொண்டு வந்தோம்.

பிளாஸ்டிக் டப்பாக்களில் ஐஸ்கிரீம் கொடுக்காமல் மண்பானையில் ஐஸ்கிரீம்களை மக்களிடம் கொண்டு சென்றோம். இது எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது, ஏனென்றால் ஐஸ்கிரீமை fill பண்ணும் மிஷின்கள் கிடையாது, கைகளால்தான் நிரப்பிக் கொடுக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் 250க்கும் மேற்பட்ட வகையான ஐஸ்கிரீம் இருக்கும்போது அதிலிருந்து பத்து வகைகளை மட்டும் டார்கெட் செய்து மக்களிடம் 125ml மண்பானைகளில் கொடுக்க ஆரம்பித்துள்ளோம்.

2. ஐஸ்கிரீம்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு ஊருக்கு அனுப்புவதற்கு ப்ரீசன் வெஹிக்கிள் எங்களிடம் இல்லை. தற்சமயம் வரை Thermocol boxல்தான் பயன்படுத்துகிறோம். அரசு பேருந்து, தனியார் பேருந்து மற்றும் ரயில்கள் மூலம் மற்ற இடங்களுக்கு அனுப்பிக் கொண்டு உள்ளோம். இது எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது.

3. மற்ற கார்ப்பரேட் ஐஸ்கிரீம் கம்பெனிகள் இலவசமாக freezerஐ ரீடைல் விற்பனைக்குக் கொடுப்பதால் எங்களால் அதை அதிக முதலீடு செய்து ரீடைல் கடைகளுக்கு சப்ளை செய்ய சவாலாக உள்ளது.

4. தற்போது நாங்கள் ஆர்கானிக் ஆக (பூச்சிக்கொல்லிகள் உபயோகப்படுத்தாத) விளைவிக்கப்பட்ட பொருட்களை (பழங்கள், காய் வகைகள், கீரைகள், சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகள், நாட்டு சக்கரை, கருப்பட்டி, பனங்கற்கண்டு, வெற்றிலை, கற்றாழை, சில வகை பூக்கள், மசாலாப் பொருட்கள், இலைகள்) விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்வதற்கான தேடுதலில் இறங்கியுள்ளோம்.

5. இன்னும் சிறிய வகையான packagingல் எப்படிக் கொடுக்கலாம் என்பதைப் பற்றியும் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். ஏனென்றால் 125 ml மண்பானை ஐஸ்கிரீம் ரூபாய் 99/- க்கு விற்கப்படுகிறது. இது எல்லாத் தட்டு மக்களும் வாங்குபவர்கள் என்பது சந்தேகம்தான். ஆதலால் இன்னும் சிறிய வகையான packaging அதுபோல் family pack மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற சவாலைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

6. ஐஸ்கிரீம் தயாரிப்பதற்கு உறுதுணையாக இருப்பது மின்சாரம்தான். மின்சாரக் கட்டணம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் இதற்கு வேறு வழி இருக்கிறதா என்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்தச் சவாலையும் எதிர்கொண்டு வருகிறோம்.

7. மார்க்கெட்டில் கிடைக்கும் ஐஸ்கிரீம்கள் மலிவு விலையில் கிடைக்கிறது. இதற்குக் காரணம் அவர்கள் உபயோகிக்கும் மூலப்பொருட்கள் அதாவது எண்ணெய் மற்றும் கெமிக்கல்ஸ் கொண்டு தயாரிக்கிறார்கள், அதனால் அவர்களால் மலிவு விலைக்குக் கொடுக்க முடிகிறது. ஆனால் நாமோ பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை மட்டுமே வைத்துக் கொண்டு ப்ரெஷ் ஆன பழங்கள், காய்கறிகள், கீரைகள் இவற்றைக் கொண்டு தயாரிக்கும்போது அதனுடைய உற்பத்திச் செலவு அதிகமாக இருக்கிறது. ஆதலால் முடிந்தவரை மார்க்கெட்டுக்கு ஏற்ற விலையில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளோம்.

8. கார்ப்பரேட் கம்பெனிகள் Bill Credit Time அதிகமாகக் கொடுப்பதால் அவர்களிடமிருந்து விற்பனைக்கு வாங்கிக் கொள்கிறார்கள். அதுவே நம்மால் bill credit time குறுகிய காலத்திற்கு மட்டுமே கொடுக்க முடிகிறது. இதுவே ரீடைல் மற்றும் ஹோல்சேல் மார்க்கெட்டில் நாங்கள் சந்திக்கக்கூடிய சிக்கல்கள்.

9. ஐஸ்கிரீமைப் பொறுத்தவரை ஈசியாக எடுத்துக்கொண்டு செல்ல முடியாது. மற்றும் கொரியர் அனுப்ப முடியாது. இப்படி இருக்கும் பட்சத்தில் ஸ்டால்கள் ஏதாவது அமைத்து மார்க்கெட்டிங் செய்ய நினைத்தால் அதற்கு freezer மற்றும் அதற்குண்டான கரண்ட் சப்ளை எடுத்துத்தான் நாம் ஸ்டால்கள் அமைக்க வேண்டும். இதுவும் எங்களுக்குப் பெரிய சவாலாகத்தான் அமைகிறது.

சில் அன் ஹீல் ஐஸ்கிரீமில் (Chill N Heal Icecreams) உங்கள் நீண்ட கால பார்வை என்ன? உங்கள் தயாரிப்பு வரிசையை விரிவுபடுத்தவோ அல்லது புதிய கிளைகளைத் திறக்கவோ திட்டமிட்டுள்ளீர்களா?

“ஐஸ் ராஜா பெயர் வைத்ததன் காரணம் என்னுடைய மறைந்த கணவரின் நினைவாகத்தான் இந்தப் பெயரை வைத்தோம். அதுபோல் ஐஸ் ராஜாவில் 4 லிட்டர் பேக் மட்டுமே கிடைக்கும். ஆனால் இப்போது ஐஸ் ராஜாவிலிருந்து மற்றொரு பிராண்ட் Chill N Heal Ice creams.

இந்தச் சில் அன் ஹீல் ஐஸ்கிரீமில் (Chill N Heal Icecreams) மொத்த வணிகத்திற்கும், சில்லறை விற்பனைக்கும், சொந்தமாகத் தொழில் துவங்கிட ஏதுவாகவும் இந்த நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் கிளைகள் அமைக்கத் திட்டமிட்டு தற்போது சங்கரன்கோயில் மற்றும் தேனி மாவட்டத்தில் கிளைகள் ஆரம்பித்துள்ளோம். இன்னும் பல மாவட்டங்களில் ஆரம்பிப்பதற்கான ஆர்வமுள்ளவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

நம் பாரம்பரியப் பொருட்களைக் கொண்டு உருவாக்கும் ஐஸ் ராஜா மற்றும் சில் அன் ஹீல் ஐஸ்கிரீம்ஸ் இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் எங்களது இலக்காக உள்ளது. அதற்குச் சரியான கூட்டாளிகளைச் சந்திக்க ஆர்வமாக உள்ளோம்.”

(சாகசங்கள் தொடரும்)

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *