
சைபர் கிரிமினல்கள் அடிக்கடி பெண்கள் மற்றும் முதியவர்களிடம் பணமோசடி புகார் அல்லது திருமண ஆசை என எதாவது ஒரு காரணத்தை சொல்லி பணம் பறிக்கின்றனர்.
அதிகமான நேரங்களில் பெண்கள் மற்றும் முதியவர்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறித்து விடுகின்றனர். மும்பையில் 80 வயது முதியவரிடம் இரண்டு ஆண்டில் 4 பெண்கள் ரூ.9 கோடியை பறித்துள்ளனர். மத்திய மும்பை பகுதியில் வசிக்கும் 80 வயது முதியவர் கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பேஸ்புக் மூலம் ஷார்வி என்ற பெண்ணிற்கு நட்பு கோரிக்கை விடுத்தார். ஆரம்பத்தில் அப்பெண் முதியவரின் நட்பு கோரிக்கையை நிராகரித்தார்.
அதன் பிறகு அப்பெண் தானே முதியவருக்கு நட்பு கோரிக்கை விடுத்தார். அதனை முதியவரும் ஏற்றுக்கொண்டார். இருவரும் ஆன்லைன் மூலம் சாட்டிங் செய்து கொண்டனர். அதன் பிறகு இருவரும் போன் நம்பர்களை பகிர்ந்து கொண்டு வாட்ஸ் ஆப் மூலம் உரையாட ஆரம்பித்தனர்.
அப்பெண் தான் கணவரிடமிருந்து பிரிந்து வாழ்வதாகவும், மும்பை தார்டுதேவ் பகுதியில் வசிப்பதாகவும் தெரிவித்தார். நாளடைவில் தனது குழந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி முதியவரிடம் அப்பெண் பணம் கேட்டார்.
முதியவரும் பணம் கொடுத்தார். இப்படியே அப்பெண் அடிக்கடி பணம் வாங்கிக்கொண்டிருந்தார். சில நாள்கள் கழித்து வாட்ஸ் ஆப் மூலம் கவிதா என்ற பெண் முதியவரிடம் அறிமுகமானார். அப்பெண் தன்னை ஷார்வியின் தோழி என்று அறிமுகம் செய்து கொண்டார். கவிதா முதியவருக்கு அடிக்கடி ஆபாச மெசேஜ் அனுப்பிக்கொண்டிருந்தார். கவிதாவும் தனது குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி முதியவரிடம் பணம் கேட்டார். முதியவரும் பணம் கொடுத்தார்.
2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் சர்வதேச போன் நம்பரில் இருந்து முதியவருக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் தனது பெயர் தினாஸ் என்றும், தான் ஷார்வியின் சகோதரி என்றும், ஷார்வி இறந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் முதியவரை திருமணம் செய்ய விரும்புவதாக தினாஸ் தெரிவித்து அவரிடம் இருந்து பணம் வாங்கினார். அதன் பிறகு தினாஸ் திருமணம் செய்ய சம்மதிக்காத காரணத்தால் முதியவர் தான் கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்கும்படி கேட்டார்.
ஆனால் தன்னிடம் பணம் இல்லை என்றும், தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார். இறுதியாக ஜாஸ்மின் என்ற பெண் முதியவரை தொடர்பு கொண்டு தான் தினாஸ் தோழி என்று அறிமுகம் செய்து கொண்டார். மேலும் தினாஸ் தான் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்க தயாராக இருப்பதாகவும் முதியவரிடம் பேசினார். அப்படியே முதியவரிடம் பேசி ஜாஸ்மினும் பணம் வாங்கிக்கொண்டார்.

இறுதியில் முதியவரிடம் இருந்த பணம் முழுக்க காலியாகிவிட்டது. இதனால் தனது மருமகளிடமிருந்து 2 லட்சம் வாங்கி பெண்களுக்கு கொடுத்தார். அப்படி இருந்தும் பெண்கள் தொடர்ந்து பணம் கேட்டதால் தனது மகனிடம் 5 லட்சம் கேட்டார். ஆனால் அவரது மகன் எதற்காக அவ்வளவு பணம் என்று கேட்டார். அப்போதுதான் முதியவர் அனைத்தையும் தெரிவித்தார். உடனே இது மோசடி என்று அவரது மகன் தெரிவித்தார். இதனால் முதியவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இறுதியாக இந்த மோசடி குறித்து மும்பை சைபர் பிரிவு போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதியவர் 2023ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2025ம் ஆண்டு ஜனவரி வரை 4 பெண்களுக்கும் சேர்த்து ரூ.8.7 கோடியை கொடுத்திருந்தார். மொத்தம் 734 பரிவர்த்தனைகள் மூலம் இப்பணம் கொடுக்கப்பட்டு இருந்தது.