• August 8, 2025
  • NewsEditor
  • 0

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள வரிகளின் “எதிர்பாராத விளைவுகளால்” ஏற்படும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி இந்தியா வியாபாரத்தை எளிமையாக்கவும், உலக முதலீடுகளின் தவிர்க்கமுடியாத மையமாக மாறவும் வேண்டுமென மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா கருத்து தெரிவித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிய வரி போரில், “எதிர்பாராத விளைவுகளின் சட்டம்” மறைமுகமாக செயல்படுவதாக ஆனந்த் மகிந்திரா குறிப்பிட்டுள்ளார்.

நீண்டகால நோக்கில் உளகளாவிய வளர்ச்சியை அளிக்கும் நேர்மறையான விஷயங்கள் இதில் இருப்பதாகக் கூறும் அவர், “அவற்றைப் பயன்படுத்திக்கொண்டு இந்தியா நல்ல விளைவுகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Trump – ட்ரம்ப்

“எதிர்பாராத விளைவுகளின் சட்டம்” என்பது என்ன? ஆனந்த் மகிந்திரா நாட்டுக்கு கொடுக்கும் அட்வைஸ் என்ன என்பதைப் பார்க்கலாம்.

 இந்தியா மீது கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி 25% வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டதுடன், 6-ம் தேதி கூடுதலாக 25% வரியை விதித்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப். 50% வரி விதிக்கப்பட்ட நாடாக இந்தியாவும் பிரேசிலும் உள்ளன.

“எதிர்பாராத விளைவுகளின் சட்டம் (law of unintended consequences)”

“எதிர்பாராத விளைவுகள் சட்டம்” என்பது ஒரு அரசாங்கம் இரு நோக்கத்துக்காக நடவடிக்கை மேற்கொள்ளும்போது அதற்கு மாறாக அல்லது பொருத்தமில்லாமல் களத்தில் மாற்றங்கள் நிகழ்வதைக் குறிப்பதாகும். இதற்கு இரண்டு உதாரணங்களைக் கூறியுள்ளார் மகிந்திரா.

ஐரோப்பிய ஒன்றியம்

“ஐரோப்பிய ஒன்றியம் உலகளாவிய வரிவிதிப்பு ஆட்சியை ஏற்றுக்கொண்டு, அதன் யுத்திகளை மாற்றுவதன் மூலம் பதிலளித்து வருகிறது.

ஆனாலும் இதனால் ஏற்பட்ட உரசல் ஐரோப்பா அதன் பாதுகாப்புக்கு அமெரிக்காவைச் சார்ந்திருப்பதை மறுபரிசீலனை செய்ய தூண்டியுள்ளது.

விளைவாக, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளின் இராணுவ செலவீனம் அதிகரித்துள்ளது.

இந்த செயல்முறையில் ஜெர்மனி அதன் நிதியைப் பயன்படுத்தும் மரபைத் தளர்த்தியிருக்கிறது, இது ஐரோப்பாவில் பொருளாதார மறுமலர்ச்சியை ஊக்குவிக்கக் கூடும். உலகம் வளர்ச்சிக்கான புதிய இயந்திரத்தை பெறலாம்.” என்கிறார்.

மற்றொரு உதாரணமாக, “கனடாவில் நீண்டநாட்கள் தடையாக இருந்த உள் மாகாணங்களுக்கு இடையிலான வர்த்தக தடைகளை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் மொத்த நாடும் ஒரே சந்தையின் கீழ் வருவதுடன் பொருளாதார மீள் தன்மையை மேம்படுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டும் ட்ரம்ப் வரிவிதிப்பின் எதிர்பாராத விளைவுகள் எனக் கூறும் அவர், இவை நீண்டகால உலக வளர்ச்சிக்கான மேற்கூரையாக செயல்படும் என்கிறார்.

1991 ஆம் ஆண்டு அந்நிய செலாவணி இருப்பு நெருக்கடி தாராளமயமாக்கலைத் தூண்டியது போல, இந்த வரிகள் இந்தியாவை வளர்ச்சியை நோக்கிக் கூட்டிச் செல்ல வேண்டும் என அவர் கூறியுள்ளார். இதற்காக இந்தியா மேற்கொள்ளக் கூடிய இரண்டு நடவடிக்கைகளை முன்வைத்துள்ளார்.

Global Trade

தீவிரமாக வணிகம் செய்வதை எளிதாக்குவது

  • இந்தியா படிப்படியாக சீர்திருத்தம் செய்வதை கடந்து, அனைத்து முதலீட்டு திட்டங்களுக்கும் உண்மையிலேயே பயனுள்ள ஒற்றைச் சாளர அனுமதி அமைப்பை உருவாக்க வேண்டும். (அதாவது நாடு முழுமைக்குமாக முதலீடுகளை அனுமதிக்கும் ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்)

  • பெரும்பாலான முதலீட்டு விதிமுறைகளை மாநிலங்கள் கையாளும் சூழலில், விருப்பமுள்ள மாநிலங்கள் இணைந்து தேசிய ஒற்றைச் சாளர அனுமதி அமைப்பில் பங்குகொள்ளலாம்.

  • நாம் சந்தையில் வேகம், எளிமை மற்றும் கணிக்கக்கூடிய தன்மையை (Predictability) நிரூபித்தால், நம்பிக்கையான பார்ட்னர்களைத் தேடும் முதலீட்டு உலகில் தவிர்க்க முடியாத இடமாக இந்தியாவை மாற்றலாம்.

அந்நிய செலாவணி இயந்திரமாக சுற்றுலாவின் சக்தியை கட்டவிழ்த்து விடுதல்

  • அந்நிய செலவாணி மற்றும் வேலை வாய்ப்புகளில் சுற்றுலா மிகவும் குறைவாகவே பயன்படுத்தப்பட்ட ஒரு துறையாகும்.

  • விசா நடைமுறையை நாம் வியத்தகு முறையில் துரிதப்படுத்த வேண்டும், சுற்றுலா வசதிகளை மேம்படுத்த வேண்டும், முதலில் தற்போதுள்ள முக்கிய இடங்களைச் சுற்றி பிரத்யேக சுற்றுலா வழித்தடங்களை உருவாக்க வேண்டும், உறுதியான பாதுகாப்பு, சுத்தம் மற்றும் சுகாதாரத்தை வழங்க வேண்டும்.

  • இந்த வழித்தடங்கள் சிறந்த சுற்றுலாத் தலத்துக்கான மாதிரிகளாக இருக்கும். இதைத் தொடர்ந்து மற்ற பிராந்தியங்களிலும் தேசிய தரநிலைகளைப் பின்பற்றத் தொடங்குவர்.

இந்த இரண்டு நடவடிக்கைகளைத் தூணாகக்கொண்டு பரந்த செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். எதிர்பாரத விளைவுகள் மூலம் நாம் ஏற்படுத்தும் மாற்றங்கள் மிகவும் முக்கியமானதாக அமைய வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இறுதியாக, “மற்றவர்கள் தங்கள் நாட்டை முன்னிலைப்படுத்துவதை நாம் குறைகூற முடியாது. நமது சொந்த நாட்டை எப்போதையும் விட சிறந்ததாக மாற்ற வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *