
அதிமுகவின் சார்பில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்கின்ற பிரச்சார பயணத்தில் அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ராஜபாளையம், ஶ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், “திமுக கூட்டணி என்பது சந்தர்ப்பவாத கூட்டணி. அந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் தனது கட்சியின் கொள்கைகளை மறந்து திமுக கட்சி போல் செயல்பட்டு வருகிறார்கள். இதற்கு பதிலாக கட்சியை கலைத்து விட்டு திமுகவில் இணைந்து விடலாம்.
கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன் கேட்கிறார், அதிமுகவிற்கு என்ன கொள்கை இருக்கிறது என்று. கொள்கை இருப்பதால்தான் ஒரு அசைக்க முடியாத கட்சியாக அதிமுக திகழ்ந்து வருகிறது. எங்களின் கொள்கை வேறு கூட்டணி வேறு என்பதை பலமுறை நாங்கள் எடுத்துக் கூறியிருக்கிறோம்.
கம்யூனிஸ்ட் கட்சிக்கென கொள்கை இருந்தது, தற்போது அது காற்றோடு காற்றாக கரைந்து விட்டது. கம்யூனிஸ்ட் கட்சி தேய்ந்து விடக்கூடாது என்பதற்காக ஒரு நல்ல எண்ணத்தில் உங்களுக்கான கருத்துக்களை நாங்கள் சொல்கிறோம். திமுகவுடன் கூட்டணி அமைத்த பின்பு கம்யூனிஸ்ட் கட்சியை கொஞ்சம் கொஞ்சமாக திமுக விழுந்துகிறது.
கம்யூனிஸ்டு கட்சி எதிர்க்கட்சியாக இருந்து மக்களுடைய பிரச்னைகளை முதல்வருக்கு கொண்டு சேர்க்க வேண்டும். ஆனால் ஒருமுறை கூட திமுக ஆட்சியை எதிர்த்து அவர்கள் குரல் கொடுக்கவில்லை.
சட்டமன்றத்திலும் மக்களுக்காக திமுகவை அவர்கள் கேள்வி கேட்கவில்லை. ஆவணக் கொலை குறித்து தனி சட்டம் கொண்டுவர முதல்வரிடம் பேச வேண்டிய கூட்டணிக் கட்சிகளே, இது பற்றி பேசலாமா, வேண்டாமா என முதல்வரிடம் அனுமதி கேட்கிறார்கள்.
திமுகவில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் நிலை இப்படி இருக்கிறது. இந்த ஆட்சியில் நடைபெறும் அவலங்களை நாங்கள் சுட்டிக் காட்டும் பொழுது திமுகவை விட அதன் கூட்டணி கட்சிகளே அதிகமாக பொங்கி எழுகிறது.

உங்களுடன் ஸ்டாலின் என்கின்ற திட்டத்தை தற்போது துவங்கி உள்ளார். 4 ஆண்டு காலமாக 46 குறைகள் இருப்பது தெரியாமல் தற்போது தான் அவருக்கு தெரிந்ததா?. மக்களுக்காக பணிகளைச் செய்யாமல் கும்பகர்ணன் போல் தூங்கிக் கொண்டிருந்தாரா?. நான்கு காலத்தில் தனது அதிகாரிகள் மற்றும் உளவுத்துறையை வைத்து மக்களுக்கான பிரச்னைகளை தீர்த்து இருந்தால் இந்த 46 குறைகள் எப்படி வந்திருக்கும் என கேள்வி எழுப்பினார்.
பட்டாசு தொழிலுக்கு எதிராக தனிநபர் கொடுத்த வழக்கை உச்ச நீதிமன்றம் வரை சென்று சிறந்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடி வெற்றி பெற்றது அதிமுக ஆட்சியில் தான்.
பட்டாசு தொழிலாளர்களை மட்டுமல்ல உழைக்கும் மக்களை காக்கும் ஒரே அரசாக அதிமுக திகழ்ந்தது. அதிமுக ஆட்சியின் போது இந்திய அளவில் துறை சார்ந்த பணிகளுக்காக 140 விருதுகளை பெற்றோம். அதுவே தற்போது இருக்கக்கூடிய அரசு ஊழல் செய்வதில் தான் விடுதலை பெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டத்திற்கு தனியாக 10 வாக்குறுதிகளை தந்து ஆட்சிக்கு வந்த இந்த அரசு பத்தியில் ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை என உரையாற்றினார்.