• August 8, 2025
  • NewsEditor
  • 0

காரைக்குடி மாநகராட்சி திமுக மேயருக்கு எதிராக கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்தது, இந்த பிரச்னையை கிளப்பிய துணை மேயரே கலந்துகொள்ளாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேயர் முத்துதுரை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியில் திமுக மேயர் முத்துதுரையை மாற்ற நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டுமென்று திமுக துணை மேயர் குணசேகரன், அனைத்து கட்சி கவுன்சிலர்களுடன் கடந்த மாதம் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

அமைச்சர் பெரியகருப்பனின் தீவிர ஆதரவாளரான மேயர் முத்துதுரை, ஏற்கெனவே சேர்மனாக இருந்த நிலையில் கடந்த நகராட்சித் தேர்தலில் நகரச்செயலாளரான குணசேகரனுக்கு முடிவு செய்யப்பட்ட சேர்மன் பதவியை கடைசி நேரத்தில் கைப்பற்றி இரண்டாவது முறையாக சேர்மனானார். பின்பு காரைக்குடி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால் மேயராக தகுதி உயர்த்தப்பட்டார். குணசேகரன், துணை மேயரானார்.

துணைமேயர் குணசேகரன்

காரைக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடங்கள், சொத்துகளை லீசுக்கு விட்டதிலும், அரசுத் திட்டங்களிலும், பல்வேறு ஒப்பந்தங்களையும் தன்னுடைய பினாமி மூலமே எடுத்து ஆதாயம் பார்க்கிறார் என்றும் புகார்கள் எழுந்த நிலையில் அரசு டெண்டர்களில் விதிமீறல் நடந்ததாக உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

அது மட்டுமின்றி திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி கவுன்சிலர்களிடமும் குறிப்பாக பெண் கவுன்சிலர்களிடம் மரியாதைக்குறைவாக நடந்து கொள்கிறார் என்றும், முறைகேட்டுக்கு ஒத்துழைக்காத ஆணையர் சித்ரா மீது குற்றச்சாட்டுகள் சுமத்தி இடமாறுதல் செய்ய வைத்தார் என்றும் சொல்லப்பட்டது.

இந்த நிலையில்தான் துணை மேயர் குணசேகரன் தலைமையில் அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் கடந்த மாதம் மாமன்ற கூட்டத்தை புறக்கணித்து மேயரை மாற்ற நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.

காரைக்குடி மாநகராட்சி

இந்த சம்பவம் சிவகங்கை மாவட்ட திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியது. “இதற்கு மேல் பொறுக்க முடியாது, மூன்றில் இரண்டு பங்கு கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக உள்ளார்கள். காரைக்குடியை காப்பாற்ற வேண்டுமென்றால் மேயரை மாற்றியாக வேண்டும், இல்லையென்றால் திமுக அரசுக்குதான் கெட்ட பெயர் ஏற்படும்” என்று துணைமேயர் குணசேகரன் அப்போது தெரிவித்தார். இந்த நிலையில் துணை மேயர் குணசேகரன் மேயராக்கப்படுவார் என்று சொல்லப்பட்டது.

‘விரைவில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர உத்தரவிட வேண்டும்’ என்று அதிமுக கவுன்சிலர் ராம்குமார் தொடர்ந்த வழக்கில், ‘ஜூலை 7 ஆம் தேதி சிறப்பு கூட்டத்தை கூட்டி வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, காரைக்குடி மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று நம்பிக்கையில்லாத் தீர்மான முடிவை காரைக்குடி மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்க, வாக்கெடுப்பில் கலந்துகொள்ள அதிமுகவைச் சேர்ந்த 7 கவுன்சிலர்களுடன் சுயேச்சை கவுன்சிலர் ஒருவர் என மொத்தம் 8 பேர் மட்டுமே வந்திருந்தனர். துணை மேயர் குணசேகரன் உள்ளிட்ட திமுக கவுன்சிலர்களும், கூட்டணி கட்சி கவுன்சிலர்களும் வரவில்லை. இது, அதிமுக கவுன்சிலர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

மேயர் முத்துதுரை

‘துணை மேயர் உள்பட எதிர்த்து வாக்களிக்கவிருந்த கவுன்சிலர்களை, மேயர் தரப்பில் கடத்தி விட்டனர், இதற்கு ஆணையரும் துணை போயுள்ளார்’ என்று அதிமுகவினர் குற்றம் சாட்டினர். இன்னொரு பக்கம், ‘எதிர்க்கும் கவுன்சிலர்களுக்கு மேயர் முத்துதுரை தரப்பில் பெரிய அளவில் கவனிக்கப்பட்டுள்ளது’ என்றும் சொல்லப்பட்டது.

எப்படியோ, அமைச்சர் பெரியகருப்பன் மூலம் தன் மேயர் பதவியை முத்துதுரை தக்க வைத்திருக்கிறார் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *