
நடிகை ராதிகா ஆப்தே தனது ஆரம்ப கர்ப்ப காலத்தில் எதிர்கொண்ட சவால்கள் குறித்தும், இந்திய திரையுலகில் உணர்ச்சியற்ற மனப்பான்மையை எதிர்கொண்டதாகவும் அவர் சமீபத்தில் ஒரு நேரலையில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
நடிகை ராதிகா ஆப்தே இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார்.
இவர் கடந்த ஆண்டு தான் கர்ப்பம் ஆனது குறித்து அவரது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் அவர் கர்ப்பமாக இருக்கும் போது பணியாற்றிய சமயங்களில் அவர் எதிர்கொண்ட சவால்களையும் பாகுபாடுகளையும் அவர் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
நேஹா துபியாவின் ஃப்ரீடம் டு ஃபீட் ( freedom to feed) நேரலையில் பேசிய ராதிகா ஆப்தே, தனது கர்ப்பத்தை அறிவித்த பிறகு எதிர்கொண்ட உணர்ச்சி மற்றும் உடல் ரீதியான சவால்கள் குறித்து பேசி இருக்கிறார்.
நடிகை ராதிகா ஆப்தே, ” நான் பணியாற்றிய ஒரு இந்திய தயாரிப்பாளர், எனது கர்ப்பம் குறித்த செய்தி அறிந்து மகிழ்ச்சி அடையவில்லை. எனக்கு அசௌகரியமாக இருந்த போதிலும் இறுக்கமான உடைகளை அணிய வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.
நான் முதல் மூன்று வாரங்களில் இருந்தபோது தொடர்ந்து பசியுடன் இருந்தேன். அதனால் அதிகமாக உணவுகள் எடுத்துக்கொண்டு உடலில் மாற்றங்கள் ஏற்பட்டன.
இவற்றை புரிந்து கொள்வதற்கு பதிலாக உணர்ச்சியற்ற மனப்பான்மை எதிர்க்கொண்டேன். படப்பிடிப்பு தளத்தில் அசாதாரணமாக உணர்ந்தபோது கூட மருத்துவரை பார்க்க அனுமதிக்கப்படவில்லை. இது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது.
ஆனால் நான் பணிபுரிந்த ஹாலிவுட் இயக்குனர் எனக்கு ஆதரவாக இருந்தார். நான் வழக்கத்தை விட உணவு அதிகமாக உட்கொள்வதாகவும் படப்பிடிப்பு முடியும் போது முற்றிலும் வேறு ஒரு தோற்றத்தில் இருக்கலாம் என்றும் நான் அவரிடம் கூறிய போது அவர் சிரித்துக் கொண்டே, `கவலைப்படாதே, வேறு ஒரு நபராக இருந்தாலும் பரவாயில்லை. நீ கர்ப்பிணி’ என்று அவர் கூறியிருந்தார். அந்த ஒரு சிறிய புரிதல் எனக்கு பயனுள்ளதாக இருந்தது.
நான் மிகுந்த சலுகைகள் எதையும் எதிர்பார்க்கவில்லை. இப்படி ஒரு தனிப்பட்ட மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்த பிறகு குறைந்தபட்ச மனிதாபிமானத்தையும் கருணையும் மட்டுமே எதிர்பார்த்தேன்” என்று தனது கர்ப்ப காலத்தில் எதிர்கொண்ட சவால்கள் குறித்து நடிகை ராதிகா ஆப்தே பகிர்ந்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…