
ஊட்டியில் கோடை சீசன் நிறைவடைந்திருந்தாலும், தற்போது நிலவி வரும் குளிர்ந்த காலநிலையை அனுபவிக்க அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். கேரளா மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 5-ம் தேதி குடும்பத்துடன் ஊட்டிக்குச் சுற்றுலா வந்திருக்கிறார்.
ஊட்டியில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் குடும்பத்துடன் தங்கி ஊட்டியைச் சுற்றிப் பார்த்திருக்கிறார். தங்கும் விடுதியில் உள்ள குளியலறையில் குளித்துக் கொண்டிருக்கையில் சுவரின் சிறிய துளையிலிருந்து திடீரென செல்போன் ஃபிளாஷ் லைட் ஒளிர்ந்திருக்கிறது.
பதறிய அந்தப் பெண் உடனடியாக உடையை மாற்றிக் கொண்டு காவல்துறையினரைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்திருக்கிறார். சம்மந்தப்பட்ட தங்கும் விடுதிக்கு விரைந்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தங்கும் விடுதியில் பணியாற்றி வந்த 30 வயதான நபர் ஒருவர், இளம்பெண்ணை வீடியோ எடுத்ததை உறுதி செய்துள்ளனர். உடனடியாக அந்த இளைஞனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இது குறித்துத் தெரிவித்துள்ள காவல்துறையினர், “ஹோட்டல் பணியாளர்கள் தங்கும் அறையின் சுவரில் சிறிய துளை ஒன்று தென்பட்டது. அதிலிருந்து பார்த்தால் அருகில் உள்ள தங்கும் விடுதியின் குளியலறை தெரிகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இந்த ஹோட்டலில் ரூம் பாயாகப் பணியில் சேர்ந்த கேரளாவைச் சேர்ந்த 30 வயதான நித்திஷ் என்கிற நபர், அந்தத் துளை வழியாக செல்போன் மூலம் பெண்களை வீடியோ எடுத்து வந்திருக்கிறான். இதுவரை 5 பெண்களை இதுபோன்று வீடியோ எடுத்துள்ளான்.

இந்த முறை வீடியோ எடுக்கையில் ஃபிளாஷ் லைட் ஆன் ஆகியிருக்கிறது. அதன் காரணமாகவே பிடிபட்டுள்ளான். அவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். தங்கும் விடுதிகளில் பயணிகள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்” என்றனர்.