
மும்பையில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்தவர் டோல்லி கோடக். இவர் தனது சகோதரன் மற்றும் தன்னுடன் பணியாற்றிய வங்கி ஊழியர்களின் துணையோடு தனது காதலனை மிரட்டி ஒரு கோடி பணம் கேட்டுள்ளார். டோல்லி கோடக்கின் முன்னாள் காதலன் தகவல் தொழில் நுட்ப கம்பெனியில் பணியாற்றி வருகிறார். அவருடன் டோல்லிக்கு இருந்த உறவு துண்டிக்கப்பட்டதால் போலியான காரணம் சொல்லி தனது காதலனை சிறைக்கு அனுப்பினார். சிறையில் இருந்து காதலன் ஜாமீனில் வந்த அன்று டோல்லி தனது காதலனின் சகோதரியை கோர்ட்டில் சந்தித்து பேசினார்.
அப்போது ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் இவ்வழக்கில் இருந்து விடுபட தடையில்லா சான்று கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். அப்படி பணம் கொடுக்கவில்லையெனில் மீடியா மூலம் பெயரை களங்கபடுத்துவேன் என்று மிரட்டினார். அப்படி இருந்தும் டோல்லியின் காதலன் குடும்பம் பணம் கொடுக்க மறுத்து வந்தது. இதனால் டோல்லி தொடர்ந்து மெசேஜ் மற்றும் போன் மூலம் பணம் கேட்டுக்கொண்டே இருந்தார். அதோடு டோல்லி தனது காதலனின் வழக்கறிஞரிடமும் சென்று பணம் கேட்டார். ஆனாலும் காதலன் பணம் கொடுக்கவில்லை.
இதையடுத்து டோல்லி தன்னுடன் பணியாற்றிய ஹரிஷ், ஆனந்த் ரூயா, ஜெயேஷ் கெய்க்வாட் ஆகியோர் துணையுடன் தனது காதலனுக்கு தெரியாமல் அவரது டிஜிட்டல் டேட்டாவை திருடினார். அதோடு தனது மொபைல் நம்பரை காதலனின் இமெயிலோடு இணைத்தார். இது தவிர காதலனின் அந்தரங்க புகைப்படம், ஆன்லைன் வங்கிக் கணக்கு ஆகியவற்றையும் டோல்லி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். திடீரென டோல்லி தனது போன் நம்பரில் இருந்து காதலனுக்கு ஒரு மிரட்டல் மெசேஜ் அனுப்பினார். அதில் ‘நீ வெற்றி பெற முடியாது. வேதனையில் சாவு. பணம் கொடு. இல்லாவிட்டால் சிறையில் சாவு’ என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதோடு காதலன் பணியாற்றிய கம்பெனி அதிகாரிக்கு காதலனைப் பற்றி தவறான தகவல்களை இமெயில் மூலம் அனுப்பி வைத்தார். இதனால் அவரை கம்பெனி நிர்வாகம் பணியில் இருந்து நீக்கியது. இதையடுத்து இது குறித்து பாதிக்கப்பட்ட காதலன் போலீஸில் புகார் செய்தார். ஆனால் போலீஸார் நடவடிக்கை எடுக்க மறுத்தனர். இதையடுத்து மும்பை போரிவலி கோர்ட்டில் இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர் மனுத்தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் இப்புகார் குறித்து விசாரித்து வழக்கு பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் போலீஸார் டோல்லி, அவரது சகோதரன் சாகர் கோடக், அவரது தோழி பிரமிளா மற்றும் வங்கி ஊழியர்கள் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டோல்லி கைது செய்யப்பட்டுள்ளார்.