• August 7, 2025
  • NewsEditor
  • 0

திருநெல்வேலியில் காவல்துறை அதிகாரியின் மகன் சுர்ஜித் என்பவர், தனது அக்காவை காதலித்த பட்டியலினத்தைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் கவின் என்பவரைக் கடந்த ஜூலை 27-ம் தேதி வெட்டி ஆணவப் படுகொலை செய்த சம்பவம் மாநில அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில், சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. மறுபக்கம், ஆளும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், ஆணவப் படுகொலையைத் தடுக்க தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றன. சமூக செயற்பாட்டாளர்களும் இதையே வலியுறுத்திவருகின்றனர்.

இந்த நிலையில், சாதி தேவையா தேவையில்லையா என்பதை முதலமைச்சரிடம் கேளுங்கள் என்று செய்தியாளர்களிடம் நடிகர் சாய் தீனா கூறியிருக்கிறார்.

கவின்

நாளை வெளியாகவிருக்கும் `காத்து வாக்குல ஒரு காதல்’ திரைப்படத்தின் படக்குழுவினர் நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது, சாய் தீனாவிடம், “சமூக கருத்து பேசும் நீங்கள், கவின் ஆணவக்கொலையில் எதுவும் பேசவில்லையே” என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

அதற்கு, சாய் தீனா, “இந்தக் கருத்தை வெறும் சினிமா நடிகர்களிடம் மட்டும் கேட்பதை நிறுத்திவிட்டு, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் இந்த நாட்டை ஆள்கின்ற முதலமைச்சர், துணை முதலமைச்சர் அரசியல்வாதிகள், அதிகாரிகளிடம் கேளுங்கள்.

சினிமா நடிகர்களிடத்தில் என்ன இருக்கிறது. நாட்டை ஆள்றவங்ககிட்ட கேக்கணும், சாதி இருக்கணுமா வேணாமா, சாதிய முறை நல்லதா கெட்டதா, தேவையா தேவையில்லையா-னு.

இன்னைக்கு மின்சாரம் வந்துடுச்சு, பள்ளிக்கூடம் கல்வி கெடச்சிடுச்சு என்கிறார்கள். இந்த அரசால் எல்லாமே கிடைக்குது.

ஆனால், சமூக நீதி பேணுகின்ற இந்த அரசுதான் சமூக நீதி விதைக்க முயற்சி பண்ணனும். சினிமா நடிகன் என்னால என்ன முயற்சி பண்ண முடியும்.

வன்முறைகள் அதிகமாக வெடிக்குது. நான் பாதுகாப்போடு வெளியே சுற்றுபவன் கிடையாது.

சாய் தீனா
சாய் தீனா

தொடர்ந்து அரசியல் தளத்தில் இயங்குபவர்களிடத்தில் இந்தக் கேள்வியை கேக்கணும்.

அதிகாரத்தில் இருப்பவர்களிடத்தில் கேட்க வேண்டிய கேள்வி. அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

கண்டிப்பா சாதி ஒழிக்கப்பட வேண்டும். சாதிய சமூகமாக வாழ்ந்து எந்த பிரயோஜனமும் கிடையாது.

சமூக நீதியை இங்கு பேணிகாக்கணும். சமூக நீதியால்தான் இங்க எல்லோரும் ஒண்ணா நிக்குறோம், பழகுறோம்.

ஆனால், திருமணம் என்று வரும்போது அங்க சாதி வந்துருது. அதை ஒழிச்சிட்டா இன்னும் நல்லா இருக்கும்.

நாம எல்லோரும் தமிழர்கள் என்று சொல்றோம். இனமா சேர்ந்திருந்தாலும் சாதியாகத்தான் இருக்றோம்.

என்னை யாரும் வெளியில் இருக்ற யாரும் கொல்லல. இங்கயேதான் எல்லாம் நடக்குது. அதைத் தடுப்பதற்கான வேலைகளை அரசு செய்யணும். அதைக் கல்வியிலிருந்து ஆரம்பிக்கணும்.” என்று கூறினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *