
நடிகை ஊர்வசிக்கு ‘உள்ளொழுக்கு’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது. இதற்கு முன் 2005-ம் ஆண்டு இவர் நடித்திருந்த ‘அச்சுவின்டே அம்மா’ என்ற திரைப்படத்திற்காக தேசிய விருதை வென்றிருந்தார்.
தேசிய விருது அவருக்கு அறிவிக்கப்பட்டப் பிறகு பேட்டியளித்த ஊர்வசி, “என்னை விருதுக்கு தேர்வு செய்ததற்கு நன்றி. ஆனால் எந்த அடிப்படையில் அல்லது அளவுகோல்களின் அடிப்படையில் சிறந்த துணை நடிகைக்கான விருது, விஜயராகவனுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்படுகிறது? விஜயராகவனை சிறந்த துணை நடிகராகவும், ஷாருக் கானை சிறந்த நடிகராகவும் ஆக்கியது எது?
சிறந்த நடிகர்கள் இருவர், சிறந்த துணை நடிகர்கள் இருவர். ஆனால், சிறந்த நடிகையாக ஒருவரையும், சிறந்த துணை நடிகையாக ஒருவரையும் தேர்வு செய்திருக்கிறார்கள்.
ஏன் நடிகைகளுக்கான விருது பகிர்ந்தளிக்கப்படவில்லை?” எனக் காட்டமாகப் பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து தொகுப்பாளர் கோபிநாத்தின் யூட்யூப் சேனலுக்கு அவர் பேட்டியளித்திருக்கிறார்.
அதில் அவர் தன்னுடைய சிறுவயதில் கேமராவைக் கண்டு அஞ்சியது தொடர்பாகப் பேசியிருக்கிறார்.
அந்தப் பேட்டியில் அவர், “என்னுடைய தொடக்கக் காலங்களில் கேமராவைக் கண்டு நான் மிகவும் பயந்தேன். அது ஒரு வகையான இயந்திர சத்தத்தை எழுப்பியது.
சொல்லப்போனால், அது என்னை அச்சுறுத்தியது. ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தின் மலையாள ரீமேக் எடுக்கப்பட்டது.
அதில் என் தம்பி, முதலில் கமல் ஹாசன் அவர்கள் செய்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்.
அவனுக்கு அப்போது மூன்று வயது கூட ஆகவில்லை, ஆனால் அவன் முழு பாடலையும் மனப்பாடம் செய்திருந்தான்.

படத்தின் இயக்குநர், என் தந்தையை அறிந்தவர், என்னையும் என் மற்ற இரு உடன்பிறப்புகளையும் பின்னணியில் நின்று கோரஸ் பாடச் சொன்னார்.
படப்பிடிப்புத் தளத்தில் இருந்த பெரிய 5-வாட் விளக்குகள் இன்னும் என் நினைவில் உள்ளன. அவை என்னைப் பயமுறுத்தின.
இயக்குநர் ‘லைட்ஸ்’ என்று கத்தியவுடன் விளக்குகள் ஒளிர்ந்தபோது, பயத்தில் நான் மயங்கி விழுந்துவிட்டேன்,” எனப் பகிர்ந்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…