
ஜீ தமிழில் ‘சிங்கிள் பசங்க’ என்ற புதிய நிகழ்ச்சி ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் ஒளிபரப்பாகவிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியை மணிமேகலை தொகுத்து வழங்க, நடிகர் பார்த்திபன், நடிகைகள் ஆலியா மானசா மற்றும் ஷ்ருதிகா ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்கின்றனர்.
கூமாப்பட்டி தங்கபாண்டியன், ‘விக்னேஷ் கிச்சன்’ விக்னேஷ் உள்ளிட்ட இன்ஸ்டாகிராமில் பிரபலமான பல இளைஞர்கள்தான் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களாகப் பங்கேற்கின்றனர்.
இந்நிகழ்ச்சி தொடர்பாக நடிகர் பார்த்திபன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
பார்த்திபன் பேசுகையில், “இன்றைய காலகட்டத்தில் ஒரு பெண், ஆணை எப்படி விரும்புகிறார், ஒரு ஆண், பெண்ணை எப்படி விரும்புகிறார் என்பது மிகவும் குழப்பமான விஷயமாக இருக்கிறது.
(ஜாலியாக) ஒரு ஆண் எப்படி ஒரு பெண்ணை ஈர்க்கிறார் என்பதுதான் இந்த நிகழ்ச்சி. எனக்கு யாரையும் இம்ப்ரெஸ் செய்யத் தெரியாது. அதைக் கற்றுக்கொள்ளவே இங்கு வந்திருக்கிறேன்.” என்றவரிடம் ஒரு செய்தியாளர், “சினிமாவில் மார்க்கெட் குறைந்ததால் நடிகர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள் என்று பேச்சு இருக்கிறதே?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த பார்த்திபன், “நான் தற்போது மூன்று தெலுங்கு படங்கள், ஒரு மலையாளப் படம், ஒரு கன்னடப் படம் மற்றும் ஒரு தமிழ்ப் படத்தில் நடித்து வருகிறேன்.
எனவே, மார்க்கெட் இல்லை என்று சொல்ல முடியாது. கடந்த ஆண்டு எனது இயக்கத்தில் ஒரு திரைப்படம் வெளியாகியிருந்தது. எனக்கு எப்போதுமே இயக்கம்தான் மிகவும் பிடிக்கும். எனது அடுத்த படத்தை இயக்குவதற்காகக் காத்திருக்கிறேன்.
இதற்கிடையில் இப்படியான ஒரு நிகழ்ச்சி வாய்ப்பு வந்தது. அதை முயன்று பார்க்கலாம் என்று பங்கேற்றேன். இதுபோன்ற கேள்விகள் வரும் என்று எதிர்பார்த்தேன்” என்றார்.
தொடர்ந்து, தேசிய விருது குறித்து செய்தியாளர்கள் சில கேள்விகளை எழுப்பினர். அதற்குப் பதிலளித்த பார்த்திபன், “ஒருவருக்கு விருது கொடுத்தால், மற்றவருக்கு ஏன் கொடுக்கவில்லை என்ற கேள்வி காலங்காலமாக இருந்து வருகிறது.
இந்த முறை எனது நெருங்கிய நண்பர் எம்.எஸ். பாஸ்கருக்கு விருது கிடைத்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஊர்வசி மேடத்துக்கும், ஜி.வி. பிரகாஷுக்கும் விருது கிடைத்திருக்கிறது.
இதுபோன்ற நல்ல விஷயங்களைத்தான் பேச வேண்டும். மற்றவர்களுக்கு ஏன் விருது கொடுக்கவில்லை என்ற கேள்விக்கு, தேர்வுக் குழுவினர் பல பதில்களை வைத்திருப்பார்கள்” என்றார்.

மேலும், “இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் ‘ஆடியன்ஸும் ஆவுடையப்பனும்’ என்ற திரைப்படத்தை இயக்கி, தணிக்கைச் சான்றிதழ் பெறத் திட்டமிட்டுள்ளேன்.
இந்தப் படம் ‘ஒத்த செருப்பு’ மற்றும் ‘இரவின் நிழல்’ போன்று மோனோ ஆக்டிங் மற்றும் சிங்கிள் ஷாட் நுட்பத்தில் உருவாக்கப்படும். தற்போது குடும்பப் படங்கள் திரையரங்குகளில் நன்றாக ஓடுகின்றன.
அதனால், ‘ஆண்டாள்’ என்ற பெயரில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற கமர்ஷியல் படத்தை இயக்கவிருக்கிறேன்.” என்றார்.
மேலும் பேசிய அவர், “நானும் எனது நண்பர் எம்.எஸ். பாஸ்கரும் முன்பு ஒன்றாக டப்பிங் செய்திருக்கிறோம். நாங்கள் இருவரும் சேர்ந்து நீண்ட தூரம் நடந்து செல்வோம். நான் தொடக்கத்திலிருந்தே மக்கள் சேவையில் அதிக ஆர்வம் கொண்டவன்.

அதனால்தான் ‘பார்த்திபன் மனிதநேய மன்றம்’ என்ற அமைப்பைத் தொடங்கினேன்.
எனக்கு அரசியலிலும் ஆர்வம் உண்டு. ஆனால், சினிமாவில் இன்னும் நான் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லவில்லை.
நேற்று இரவுகூட ஒரு அரசியல் கட்சியிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவர்கள் 1000 கோடி ரூபாய் கொடுத்தாலும், அதில் 100 கோடியை மட்டும் ஒரு படம் எடுக்கப் பயன்படுத்திவிட்டு, மீதமுள்ள தொகையைத் திருப்பிக் கொடுத்துவிடுவேன்” என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…