
ஆசிய கண்டத்தில் சைனாவிற்கு பிறகு இந்தியாவில் முதன்முதலில் ஆன் சைட் மியூசியமா..? ஆன் சைட் மியூசியம் என்றால் என்ன? தமிழில் தள அருங்காட்சியகம் என்று அழைக்கப்படும் ஆன் சைட் மியூசியம் என்பது ஒரு வரலாற்று அல்லது தொல்லியல் இடத்தில், அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள், அந்நிய இடத்திற்கு எடுத்துச் செல்லாமல் அதே இடத்தில் காட்சிக்காக அமைக்கப்படும் அருங்காட்சியகம் ஆகும்.
கேட்கவே சுவாரசியமாக இருக்கின்றது அல்லவா? ஆம்… போலந்து, லண்டன், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் இதனை பார்க்க ஆவலுடன் மக்கள் வருகின்றனர். அப்படி என்னதான் அங்கு இருக்கின்றது?
தூத்துக்குடி மாவட்டத்தில், ஸ்ரீவைகுண்டம் அருகே உலக நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில், 2023 ஆம் ஆண்டில், 125.4 ஏக்கரை கொண்ட அருங்காட்சியகத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலும் மக்களவை உறுப்பினர், தூத்துக்குடி கனிமொழி முன்னிலையிலும் திறந்து வைக்கப்பட்டது.
இந்த அருங்காட்சியகம், ஆதிச்சநல்லூரின் கிராமிய அழகை மேலிருந்து முழுமையாக ரசிக்கும் வகையில் மலைமுகட்டின் மிக உயரமான இடமாக 10 மீட்டர் உயரத்தில் உள்ளது.
2004-2005 ஆம் ஆண்டில் நடத்திய அகழாய்விற்குப் பிறகு 2021- 2023 இல் தான் புதிதாக நிறுவப்பட்ட இந்திய தொல்லியல் துறையின் திருச்சி வட்டத்தின் சார்பாக டி. அருண் ராஜ் வழிகாட்டுதலின் கீழ் தொல்லியல் ஆராய்ச்சிகள் மீண்டும் தொடங்கியது. அப்போதுதான் பல சுவாரசியமான விஷயங்கள் அனைத்தும் கண்டெடுக்கப்பட்டன. இங்கு கிடைக்கப்பட்ட பெரும்பாலானவை இரும்புக்கால மனிதன் பயன்படுத்திய பொருட்களே ஆகும். மேலும், கற்பதுக்கை, கற்குவை போன்ற ஈமப்புதையல்களின் வகைகளை புரிந்து கொள்ளும் வகையில் அங்கு முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
முதுமக்கள் தாழிகளை ஆய்வு செய்த போது, போரில் மாண்ட வீரர்களின் உடல்கள் கிடைக்காத போதும்கூட அவர்கள் பயன்படுத்திய பொருட்களையோ அல்லது கிடைத்த எச்சங்களையோ வைத்து அடக்கம் செய்துள்ளனர். இதன் மூலம் தமிழர்கள் உயிருக்கு எந்த அளவிற்கு மரியாதை கொடுத்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், அங்கு கண்டெடுக்கப்பட்ட சில முதுமக்கள் தாழிகளில் இருந்த ஸ்டிச் மார்க்ஸ், உடைந்து போன தாழிகளைக் கூட , தைத்து மீண்டும் பயன்படுத்தி உள்ளனர் என்பதையும் இதன்மூலம் தமிழர்களின் எளிமையான வாழ்வியல் முறையையும் புரிந்து கொள்ள முடிகின்றது.

அகழாய்வின்போது எடுத்த புகைப்படங்கள், இரும்பு காலம் பற்றிய தகவல்கள், அங்கு கிடைக்கப்பட்ட செம்பு, இரும்பு ஆயுதங்களின் புகைப்படங்கள், அதிலும் சுவாரசியமாக, அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் தோண்டிய குழியிலேயே இருக்க, அதன் மீது உறுதியான கண்ணாடி போட்டு அழகாக பார்வைக்கு வைத்திருக்கின்றார்கள். அருங்காட்சியகத்தில் ஒரு அற்புதமான வழிகாட்டி, பெயர் கஜா, மிகவும் எளிமையாக எல்லாவற்றையும் விளக்குகிறார். நாம் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் சலிக்காமல் நகைச்சுவையுடன் பதிலளிக்கிறார்.

மேலும், ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் பற்றியும் அதன் சுவாரசியங்கள் பற்றியும் “ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்” நூலின் ஆசிரியர் முத்தாலங்குறிச்சி காமராசு அவர்களிடம் கேட்டபோது, “இந்தியாவுடைய ஃபர்ஸ்ட் சைட் மியூசியம் என்ற பெயரை வாங்கி வைத்து விட்டோம்.. ஆனால் பறக்க பறக்க முழிச்சுக்கிட்டு இருக்கோம்… வெளிநாட்டு மக்கள் எல்லாம் ட்ரான்ஸ்லேட்டர்சோட வந்து இறங்குறாங்க, நம்மளுடைய பண்பாட தெரிஞ்சிக்கறதுக்கு. தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட கலெக்டர்ஸ் இரண்டு பேருமே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவருமே ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகத்தை வந்து பார்க்க வேண்டும் என்று ஆணையிட்டால் போதும்… முன்னோர்களின் பண்பாட்டையும் வாழ்வியல் முறையையும் அவர்கள் உயிர் மீது வைத்திருக்கும் மரியாதையையும் இக்காலத்து மாணவர்களுக்கு எடுத்துக் காட்டலாம். நம்ம நாகரிகத்தை நாமே பேசலன்னா வேற யாரு பேசுவா…?” என்று ஏக்கத்துடன் கேட்டுக்கொண்டார்.