• August 7, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

இன்றைய தென்காசி மாவட்டத்தில் நயினாரகரம் எனும் சிறு கிராமம் எனது ஊர். எனது சுருக்கப் பெயரான மணி  ஊருடன் சேர்ந்து நயினாரகரம் மணி என்று பத்திரிகை உலகில் எழுத்தாளராக அறிமுகம் செய்து வைத்தது.

தினம் ஒரு வார இதழ் அப்போது வீட்டிற்கு வந்தாலும், விகடனுக்காக எப்போதுமே எங்கள் வீட்டில் போட்டிதான். வயதிற்கு வந்து வீட்டில் இருந்த அக்காவுடன் தான் எனது போட்டி எல்லாம்.  வழக்கமாக நூலகத்தில் இருந்து புத்தகங்கள் எடுத்து வந்து அவளிடம் படிக்கத் தருவேன்.

வீட்டில் விகடன் முதலில் படிக்கத் தராவிட்டால் லைப்ரரிக்குப் போகமாட்டேன் என்று அக்காவிடம் மிரட்டுவேன். நான் சாதுவே. ஆனால் இந்த ஒருவிஷயத்தில் மட்டும் என்னைத் தீவிரவாதி ஆக்கியது விகடன்! அப்போது எனக்கு வயது 14 இருக்கும். ஆண்டு 1975. இது விகடனுடன் அன்பு ஏற்பட்ட முதல் அனுபவம். 

ஒவ்வொரு விடுமுறையிலும் விகடனின் தொடர்களைக் கிழித்து சுயமாகவே பள்ளி நண்பன் பாலுவுடன் சேர்ந்து பைண்டிங் செய்தது அடுத்த அனுபவம்.

“பாரதி” திரைப்படம் எடுப்பது பற்றி ஆளாளுக்குப் போட்டியிட்ட போது எல்லோரும் சேர்ந்து கூட்டாக “பாரதி” படத்தைத் தயாரிக்கலாமே என்கிற எனது ஆதங்க எண்ணத்தை சிறு கட்டுரையாக அனுப்பினேன். அது அப்படியே ஒரு வரி கூட மாறாமல் “காரசாரம்” என்ற பகுதியில் வெளியானது, (17-1-82). இது விகடன் மீதான அன்பை அதிகப்படுத்தியது. வாசகன் எழுத்தாளரான நாளல்லவா?

தனக்கு எரிச்சல் ஏற்படுத்தும் விஷயத்தைக் குறிப்பிட்ட ஒரு வாசகர் உங்களுக்கு? (எது) என்று கேள்வி எழுப்பி இருந்தார். அப்போது அதன் தொடர்ச்சியாக நான் எழுதியது இப்படி வெளியானது. (12-8-84.)

“ஒரு முக்கிய நிகழ்ச்சியைக் கேட்க ஆவலாக ரேடியோவைத் திருப்ப…கரண்ட்டும் கட்டாகி, டிரான்ஸிஸ்டரில் ‘ஸெல்’லும் வீக்காகி குறிப்பிட்ட நிகழ்ச்சியைக் கேட்க முடியாமல் போகும்போது… (அப்போது மொபைல் போன்களே வராத காலக்கட்டம்!)

 “சுதந்திரம்” என்கிற தலைப்பில் அனுப்பியது “கூண்டு” தலைப்பில் வந்தது. (29-5-88), “சுதந்திரம் கிடைக்காதா என கூண்டுக்கிளி ஏங்கியது; சிறகை வெட்டிவிட்டு அதற்கு சுதந்திரம் தரப்பட்டது” – நாலு வரிகளில் நறுக்குத் தெறித்தாற்போல உள்ளது எனப் பலரும் பாராட்ட விகடன் காரணமானது.

அஞ்சலட்டையில் ஒரு கதை எழுத முடியுமா என்று கேட்டதற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது எனது சிறுகதை. ஒரு வாகனத்தை, தனது வாகனத்தில் பின்தொடரும் இளம்பெண், தப்புக்கணக்குப் போடும் வாலிபன். தனது வாகன விளக்கு எரியாததால் தனக்காக மெதுவாகச் சென்றதாக நினைத்து, போகும் போது அவனுக்கு நன்றி கூறியபடிச் செல்லும் அந்தப்பெண் என முடித்திருந்தேன். வெளிச்சம் தலைப்பில் வந்த இந்த சிறுகதை, கதாசிரியராக விகடனுடன் எனது அனுபவம்.

தொடர்ந்து எழுத முடியாதபடி வேறு கடமைகள் தடுத்தாலும், எழுத்தாளராக இல்லாமல் வாசகனாக என்றென்றும் தொடர்கிறேன். பகிர வாய்ப்பளித்த விகடனுக்கு என்றென்றும் நன்றிகள்! –

இ.மணிபாரதி, சென்னை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *