
2014 முதல் 2021 வரை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த யஸ்வந்த் வர்மா, 2021 அக்டோபரில் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து, இவர் தனது குடும்பத்துடன் டெல்லியில் நீதிபதிகளுக்காக ஒதுக்கப்படும் அரசு பங்களாவில் வசித்துவந்தார்.
இவ்வாறிருக்க, கடந்த மார்ச் 14-ம் தேதி அவரது வீட்டில் திடீரென தீப்பற்றியுள்ளது. அப்போது நீதிபதி வர்மா வீட்டில் இல்லாததால், அவரது குடும்பத்தினர் இரவு 11:20 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் 15 நிமிடங்களில் தீயை அணைத்தனர்.
அதன்பிறகு, சேதங்கள் குறித்து ஆய்வு செய்தபோது நீதிபதியின் அறையில் கட்டு கட்டாகப் பணம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால், உயரதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தகவல் தெரிவிக்க, வெவ்வேறு உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் மற்றும் நீதிபதிகள் ஆகியோர் கொண்ட உள்விசாரணை குழுவை அவர் அமைத்தார்.
இந்த விசாரணைக் குழுவானது, நீதிபதி எஸ்வந்த் வர்மா, அவரது மகள், அவரது வீட்டில் வேலை செய்த வேலைக்காரர்கள், டெல்லி போலீஸ் கமிஷனர், தீயணைப்புத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் விரிவான விசாரணை நடத்தி, விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் சமர்ப்பித்தது.
அந்த அறிக்கையை குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அனுப்பி வைத்தார்.
ஆனால், உள்விசாரணைக் குழுவில் ஆஜராகி வாக்குமூலங்களைக் கொடுத்திருந்த நீதிபதி வர்மா, திடீரென இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விசாரணை அறிக்கையை குடியரசு தலைவர் மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி திபங்கர் தத்தா தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்று வந்தது.

கடந்த விசாரணையின்போதே, நீதிபதி யஷ்வந்த் வர்மா மத்திய அரசை எதிர்மனுதாரராக சேர்த்ததற்கு நீதிபதிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
குறிப்பாக, “உங்களது பிரச்னை உச்ச நீதிமன்றத்திற்கு எதிராகத்தான். தேவையில்லாமல் இதில் மத்திய அரசை சேர்த்திருக்கிறீர்கள்” என நீதிபதிகள் சுட்டிக் காட்டினார்கள்.
இருப்பினும், நீதிபதி எஸ்வந்த் வர்மா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “அரசியல் சாசன பிரிவு 124-ன்படிதான் ஒரு நீதிபதியை நீக்க வேண்டுமே தவிர உள்விசாரணைக் குழு அமைத்து, அதன் மூலம் பொதுவெளியில் விவாதம் நடத்தி அல்ல. இதில் பல்வேறு நடைமுறைகள் முறையாகப் பின்பற்றவில்லை” எனக் கூறினார்.
அப்போது நீதிபதி தத்தா, “இந்தக் குழு முறையாக அமைக்கப்படவில்லை என்றால் பிறகு எதற்காக குழுவின் முன் ஆஜராகி உங்கள் தரப்பு கருத்துக்களைக் கூறினீர்கள்.
அதுமட்டுமில்லாமல் ஏன் இவ்வளவு தாமதமாக நீதிமன்றத்தை நாடியிருக்கிறீர்கள்.
நீங்கள் ஒரு அரசியல் சாசன பொறுப்பை வகிக்கக் கூடியவர், இதெல்லாம் தெரியாது என மட்டும் தயவுசெய்து சொல்லாதீர்கள்” எனக் கடுமையாகப் பேசினார்.
விசாரணையின் முடிவில், தீர்ப்பானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று விரிவான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதில் நீதிபதிகள், “பதவியில் இருக்கும் நீதிபதியின் செயல்பாடுகளை விசாரணை செய்ய, உள்விசாரணை குழு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல.
ஏனெனில், உள்விசாரணைக் குழு சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு அரசியல் சாசன வழிமுறைகளும் உள்ளது.
நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அடிப்படை உரிமைகள் எதுவும் மீறப்படவில்லை. விசாரணைக் குழு உரிய சட்ட விதிமுறைகளை முறையாகப் பின்பற்றியது.
அதேபோல் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு அறிக்கையை அனுப்புவது அரசியலமைப்புக்கு விரோதமானது அல்ல” என்று தெளிவாகக் குறிப்பிட்டு யஷ்வந்த் வர்மாவின் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.