
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஆவாரம்பட்டி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியிடம் இன்ஸ்டாகிராமில் பழகி காதல் வலை விரித்து 26 பவுன் நகைகளை அபகரித்துச் சென்ற லிபின் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இராஜபாளையம் ஆவாரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் இதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் கர்நாடகா மாநிலம் சிராஜ்பேட்டை பகுதியைச் சேர்ந்த லிவின் என்ற வாலிபருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் அந்தப் பெண்ணைக் காதலிப்பதாகவும், அவரைத் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி நேரில் இரு முறை சந்தித்துள்ளார். அப்போது நாம் திருமணம் செய்து கொண்டால் தனியாகக் குடித்தனம் நடத்த பணம் தேவைப்படும். ஆகையால் உங்கள் வீட்டில் இருக்கும் நகைகள் மற்றும் பணத்தைக் கொண்டு வருமாறு கல்லூரி மாணவியிடம் கூறியுள்ளார்.
இதனை நம்பிய கல்லூரி மாணவி சுமார் 26 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் பணத்தை மதுரையில் வைத்து லிவினிம் வழங்கியுள்ளார். இந்நிலையில் வீட்டில் வைத்திருந்த பணம் நகைகள் மாயமானது தொடர்ந்து செந்தில்குமார் தனது மனைவி மற்றும் மகளிடம் விசாரித்த நிலையில், தான் அந்தப் பணம் மற்றும் நகைகளை எடுத்து லிவினிடம் கொடுத்ததாக மகள் கூறியுள்ளார்.
அப்போது அவருக்கு போன் செய்த லிவின், “நீ கொடுத்த பணம் பத்தாது. மேலும் பணம் வேண்டும். ஆகையால் அதை ஏற்பாடு செய்” என்று கூறியுள்ளார். சந்தேகம் அடைந்த அந்தப் பெண் இராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் பெற்றோருடன் சென்று புகார் அளித்துள்ளார்.

போலீசாரின் அறிவுறுத்தலின்படி லிவினை இராஜபாளையம் ஆவாரம்பட்டிக்கு வரவழைத்து அவரிடம் கல்லூரி மாணவி பணத்தைக் கொடுக்க முயன்ற போது மறைந்திருந்த போலீசார் லிவினைச் சுற்றி வளைத்தனர். போலீசாரிடம் இருந்து தப்பிய லிவின் தனது சொந்த மாநிலத்திற்கு ஓடிவிட்டார்.
இதனையடுத்து கர்நாடக மாநிலம் சிராஜ்பேட்டையில் வைத்து லிவினைக் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடந்த விசாரணையில் தனது நண்பரின் மூலம் வங்கியில் நகைகளை அடமானம் வைத்திருப்பதை அறிந்த போலீசார் 21 பவுன் தங்க நகைகளை மீட்டு லிவினை அழைத்துக் கொண்டு இராஜபாளையம் திரும்பினர்.
தொடர்ந்து லிவினிடம் விசாரித்த போலீசார் சமூக வலைத்தளம் மூலம் இந்தப் பெண்ணை மட்டும் தான் ஏமாற்றினாரா அல்லது இது போல் வேறு யாரையாவது ஏமாற்றி இருக்கிறாரா என விசாரணை நடத்தி இராஜபாளையம் நீதித்துறை நடுவர் என் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.