
மும்பையில் புறாக்களுக்கு தீனி போட மும்பை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இப்பிரச்னை இப்போது போராட்டமாக மாறியுள்ளது.
மும்பையில் முக்கியமான சில இடங்களில் புறாக்களுக்கு பொதுமக்கள் தீனி போடுவது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் இப்புறாக்களால் பொதுமக்களுக்கு சுவாச கோளாறு ஏற்படுவதாக கூறி தொடரப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம் புறாக்களுக்கு பொதுமக்கள் திறந்த வெளியில் சாப்பாடு கொடுக்க தடை விதித்துள்ளது.
இத்தடையை தொடர்ந்து பொதுமக்கள் கொடுக்கும் தானியங்களை மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்து வந்த புறாக்கள் சாப்பாடு இல்லாமல் பட்டினியால் சாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புறாக்களுக்கு தாதர் மேற்கு பகுதியில் பொதுமக்கள் அதிக அளவில் சாப்பாடு கொடுப்பது வழக்கம். அந்த இடத்தை மாநகராட்சி நிர்வாகம் தார்பாய் மூலம் மூடிவிட்டது. குஜராத்தியர்கள் மற்றும் ஜெயின் மதத்தினர் தான் புறாக்களுக்கு அதிக அளவில் சாப்பாடு கொடுப்பதை தங்களது மத சடங்காக செய்து வருகின்றனர்.
தாதர் கபூத்தர்கானா பகுதியில் புறாக்களுக்கு சாப்பாடு கொடுக்க தடை விதித்து தடுப்பு அமைக்கப்பட்டு இருந்த இடத்தில் பொதுமக்கள் திரளாக கூடினர். நூற்றுக்கணக்கானோர் கூடி அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மாநகராட்சி ஊழியர்கள் அமைத்திருந்த தார்பாயை கிழித்து அப்புறப்படுத்தினர்.
அதனை போலீஸார் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்த்தனர். நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால் போலீஸார் பொதுமக்களை அங்கிருந்து விரட்டியடித்தனர்.
போராட்டக்காரர்கள் ஒரு மூட்டை தானியத்தை புறாக்களுக்கு சாப்பாடு போடும் இடத்தில் தட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இப்போராட்டத்தில் பங்கேற்பதற்காக மும்பையின் போரிவலி உள்பட பல்வேறு இடங்களில் இருந்து திரளானவர்கள் வந்திருந்தனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி வினாயக் கூறுகையில், ”கோர்ட் உத்தரவிட்டு இருப்பதால் தாதர் பகுதியில் புறாக்களுக்கு சாப்பாடு கொடுக்க தொடர்ந்து கட்டுப்பாடுகள் முழு அளவில் அமல்படுத்தப்படும். மாநகராட்சியின் உத்தரவின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார். சம்பவ இடத்தில் ஒரு ஜெயின் கோயில் இருக்கிறது.
இது குறித்து அக்கோயில் நிர்வாகத்துடன் மும்பை பொறுப்பு அமைச்சர் மங்கள் பிரபாத் லோதா பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் பொதுமக்கள் அமைதிகாக்கவேண்டும் என்றும், இப்பிரச்னை கோர்ட்டில் இருப்பதாகவும் லோதா கேட்டுக்கொண்டார்.
புறாக்களுக்கு சாப்பாடு கொடுக்க மும்பை மாநகராட்சி நிர்வாகத்திடம் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இப்பிரச்னை தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அம்மனு இன்று விசாரணைக்கு வருகிறது. ஜெயின் மதத்தினர் சமீப காலத்தில் இரண்டாவது முறையாக தெருக்களில் இறங்கி போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இப்போராட்டம் குறித்து மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் அளித்த பேட்டியில், ”பில்டர்கள் மங்கள் பிரபாத் லோதா, அதானியின் இடங்களில் கபூத்தர்கானா அமைக்க முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நடவடிக்கை எடுக்கவேண்டும். இது தொடர்பாக பில்டர்களுக்கு முதல்வர் ஆலோசனை வழங்கவேண்டும். பொதுமக்களின் உடல் நலம் மிகவும் முக்கியம். புறாக்களால் நோய்கள் பரவுவது தெளிவாக தெரிகிறது. ”என்றார்.
இது குறித்து சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.ரோஹித் பவார் கூறுகையில்,”பின்விளைவுகளை ஆராயாமல் திடீரென கபூத்தர்கானாக்கள் மூடப்பட்டு இருப்பதால் புறாக்கள் சாப்பாடு இல்லாமல் இறக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது” என்றார். மும்பை மாநகராட்சிக்கு தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் ஜெயின் மதத்தினரின் போராட்டம் அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.