
கேரளாவைச் சேர்ந்தவர் மலையாள நடிகை ஸ்வேதா மேனன். இவர் சினிமாக்களிலும், விளம்பரங்களிலும் நடித்துவந்தார். இந்த நிலையில் நடிகை ஸ்வேதா மேனன் ஆபாச படங்களில் நடித்ததாகவும், பணத்துக்காக விளம்பரங்களில் நிர்வாண போஸ் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், ஸ்வேதா மேனன் சில ஆண்டுகளுக்கு முன் நடித்த பாலேரி மாணிக்கம், ரதிநிர்வேதம் உள்ளிட்ட சினிமாக்களின் சில காட்சிகளும், காமசூத்ரா விளம்பரத்தின் ஆபாச காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் மார்ட்டின் மேனாச்சேரி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் எர்ணாகுளம் சி.ஜே.எம் கோர்ட் உத்தரவின் அடிப்படையில் கொச்சி சென்ட்ரல் போலீஸார் ஸ்வேதா மேனன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஐ.டி ஆக்ட் படியும், ஒழுக்ககேடான நடைமுறைகள் தடுப்புச் சட்டத்தின் கீழும் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மலையாள சினிமா நடிகர்கள் சங்கமான அம்மா அமைப்பின் வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அம்மா அமைப்பின் தலைவர் பதவிக்காக ஸ்வேதா மேனன் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக நடிகர் தேவன் போட்டியிடுகிறார். நடிகை ஸ்வேதா மேனனுக்கும் நடிகர் தேவனுக்கும் நேரடி போட்டி நிலவிவருகிறது. கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற அம்மா அமைப்பின் தேர்தலில் அதன் தலைவராக மோகன் லால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

படபிடிப்பு தளங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்த நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து ஏற்பட்ட விவாதங்களை அடுத்து அம்மா அமைப்பின் தலைவர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராஜினாமா செய்தனர். அதைத்தொடர்ந்தே இப்போது அம்மா அமைப்பின் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில்தான் நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.