• August 7, 2025
  • NewsEditor
  • 0

Doctor Vikatan: வெயிட்லாஸுக்கும் பீரியட்ஸ் சைக்கிளுக்கும் தொடர்பு உண்டா, ஒருவர் வெயிட் குறைத்தால் பீரியட்ஸ் வரும் நாள்கள் அதிகரிக்குமா, அல்லது ப்ளீடிங் அளவில் மாற்றங்கள் இருக்குமா? இதை எப்படிப் புரிந்துகொள்வது?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

வெயிட்லாஸுக்கும் பீரியட்ஸ் சுழற்சி மற்றும் அதன் தன்மைக்கும்  நிச்சயம் நெருங்கிய தொடர்பு உண்டு. எடையைக் குறைக்க சிலர் க்ராஷ் டயட்டை (Crash Diet) பின்பற்றுவார்கள்.  க்ராஷ் டயட்  என்பது, மிகக் குறைந்த கலோரிகள் கொண்ட உணவுகளை எடுத்துக்கொண்டு, குறுகிய காலத்தில் அதிக உடல் எடையைக் குறைக்கும் ஒரு தீவிர உணவுமுறை. 

திருமணம் நிச்சயமாகியிருக்கிறது, திடீரென ஒரு விசேஷத்துக்குச் செல்ல வேண்டும். அதில் ஒல்லியாகத் தெரிய வேண்டும் என இந்த டயட்டை பின்பற்றுவார்கள். இந்த டயட்டை பின்பற்றுவதால் கடகடவென உடல் எடை குறையும்பட்சத்தில், அது நிச்சயம் அந்தப் பெண்ணின் பீரியட்ஸ் சுழற்சியையும், பீரியட்ஸின்போது வெளியேறும் ப்ளீடிங்கின் அளவையும் மாற்றும்.

வெயிட்லாஸுக்காக க்ராஷ் டயட்டை பின்பற்றுவதால், பீரியட்ஸ் வருவதில் தாமதம் ஏற்படலாம் அல்லது பீரியட்ஸ் வராமலிருக்கலாம். உடலிலுள்ள கொழுப்பானது திடீரென பெருமளவில் குறைவதால், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அளவும் குறையும். இது ஓவுலேஷன் எனப்படும் அண்டவிடுப்பை பாதிக்கும் என்பதால், அதன் விளைவாக பீரியட்ஸ் சுழற்சியும் மாறும். சிலருக்கு வழக்கத்தைவிட அதிக அளவிலான ப்ளீடிங் இருக்கலாம். வேறு சிலருக்கு ஸ்பாட்டிங் எனப்படும் லேசான ப்ளீடிங் இருக்கலாம்.

பீரியட்ஸ்

அடுத்தது பீரியட்ஸ் சுழற்சியின் நாள்களும் மாறக்கூடும். அதாவது ஒருவர் உடல் பருமனோடு இருந்தபோது, வழக்கமாக அவருக்கு 28 நாள்களுக்கொரு முறை பீரியட்ஸ் வந்திருக்கும். எடையைக் குறைத்ததும் அது 21 நாள்களாகக் குறையவோ, 35 நாள்களுக்கொரு முறை அதிகரிக்கவோ கூடும். இதற்குக் காரணம் ஹார்மோன் மாற்றங்கள். அதாவது, வெயிட்லாஸ் என்ற நிகழ்வானது, மாதவிலக்கை முறைப்படுத்துகிற ஹார்மோன்களை பாதிப்பதுதான் காரணம்.

டயட் இருக்கும்போது போதுமான அளவும் சரியான அளவும் ஊட்டச்சத்துகளை எடுத்துக்கொள்கிறோமா என்பது தெரியாமலிருக்கலாம். அதன் விளைவாக புரதச்சத்து இழப்பு, கொழுப்புச்சத்து இழப்பு, நுண் ஊட்டச்சத்து இழப்பு போன்றவை ஏற்படலாம். அதனால் ஹார்மோன் உற்பத்தியே பாதிப்பதால், பீரியட்ஸ் சுழற்சியில் மாறுதல்கள் இருக்கலாம்.

தீவிர உடற்பயிற்சி செய்வதன் காரணமாக, விளையாட்டு வீராங்கனைகளுக்கு முறைதவறிய மாதவிடாய் சுழற்சி இருப்பதைப் பார்க்கலாம்.  இதை ‘ஹைப்போதலாமிக் அமனோரியா’ (Hypothalamic amenorrhea) என்று சொல்வோம். அதாவது ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன்கள் சுரப்பது குறையும். அந்த வகையில், வெயிட்லாஸில் இருப்பவர், உடற்பயிற்சியும் செய்யும்பட்சத்தில், இதே நிலைமை அவர்களுக்கும் ஏற்படலாம்.

பீரியட்ஸ் சுழற்சியை பீரியட் டிராக்கர் மூலம் கண்காணியுங்கள்.

எனவே, வெயிட்லாஸ் செய்யும்போது எப்போதும்  கொஞ்சம் கொஞ்சமாக, மெதுவாகவே எடையைக் குறைக்க முயல வேண்டும். பேலன்ஸ்டு டயட் சாப்பிடுவதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். திடீரென, இன்று முதல் அரிசி உணவு சாப்பிட மாட்டேன், எண்ணெய் சேர்த்தது சாப்பிட மாட்டேன் என்றெல்லாம் எதையும் அறவே தவிர்க்காமல், எல்லாமே சரிவிகிதத்தில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். புரதச்சத்து அளவு சரியாக இருக்க வேண்டியது முக்கியம். பீரியட்ஸ் சுழற்சியை பீரியட் டிராக்கர் மூலம் கண்காணியுங்கள். 

தொடர்ந்து 2-3 பீரியட்ஸ் வரவே இல்லை என்றாலோ, பீரியட்ஸ் வந்தாலும் ப்ளீடிங் மிக அதிகமாகவோ அல்லது மிகக் குறைவாகவோ இருந்தாலோ, திடீரென வேகமாக எடை குறைந்தாலோ, மருத்துவரை அணுகி, ஆலோசனை பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *