
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் அருகே சிக்கனூத்து கிராமம் உள்ளது. அங்கு மடத்துக்குளம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ சி.மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பில், தோட்டப்பராமரிப்புக்காக திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை சேர்ந்த மூர்த்தி (60) மற்றும் அவரது மனைவி காமாட்சி குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர். கடந்த ஓராண்டாக மூர்த்தியின் மூத்த மகன் மணிகண்டனும் (32) அவரின் மனைவி சபீனாவும் தங்கி தோட்ட வேலை செய்து வந்தனர்.
இந்தநிலையில் மூர்த்தியின் 2 வது மகன் தங்கபாண்டி தந்தையை பார்பதற்காக வந்துள்ளார். இரவு கறி விருந்துடன் மது அருந்தியுள்ளனர். மதுபோதையில் தங்கபாண்டிக்கும் அவரது தந்தைக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதில் மூர்த்தி காயமடைந்தார். தகராறு முற்றிய நிலையில் பண்ணை மேலாளருக்கு தகவல் கொடுத்தனர். அவர் உடனடியாக குடிமங்கலம் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
உடனடியாக அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு எஸ்.ஐ சண்முகவேலுக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டார். சண்முகவேல் மற்றும் ஜீப் ஓட்டுநர் அழகுராஜா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காவல்துறை அதிகாரி வருவதை அறிந்த தங்கப்பாண்டி தோப்புக்குள் மறைந்திருந்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த எஸ்.ஐ. சண்முகவேல் உடனடியாக காயமடைந்த மூர்த்தியை ஆம்புலன்சில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த தங்கபாண்டி, எஸ்.ஐ. சண்முகவேலை அரிவாளால் தாக்கியுள்ளார். உடன் சென்றவர்களையும் அரிவாளால் தாக்க முற்பட்டுள்ளார். அங்கிருந்து தப்பி வந்த ஜீப் ஓட்டுநர் காவல்நிலையத்துக்கு அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்றபோது சிறப்பு உதவி ஆய்வாளர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறை அதிகாரிகள் வருவதற்குள் அங்கிருந்து அனைவரும் தலைமறைவாகிவிட்டனர்.
இது குறித்த தகவல் அறிந்த கோவை மேற்கு மண்டல ஐஜி செந்தில் குமார், கோவை சரக டிஐஜி சசிமோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் க்ரிஷ் யாதவ் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று நேரில் விசாரணை மேற்கொண்டனர். உதவி ஆய்வாளரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து ஐஜி செந்தில் குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, “குற்றவாளிகள் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. குற்றவாளிகளைப் பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகள் பிடிபடுபவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு அவர்களிடம் விசாரிப்பதன் மூலம் யார் யார் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தெரியவரும்” என்றார்.
சண்முகவேலின் சடலம், உடற்கூறாய்வு முடிந்த நிலையில், காவல்துறை அதிகாரிகளின் மரியாதைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து, ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார். இதனிடையே, உடுமலை அருகே கொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் உடலுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்த நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய தந்தை மற்றும் மகனை போலீஸார் கைது செய்தனர்.
மூன்றாவது குற்றவாளியான மணிகண்டனும் நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று மணிகண்டனிடம் விசாரணை மேற்கொண்டபோது, அங்கிருந்த காவல் உதவி ஆய்வாளர் சரவணகுமார் என்பவரை தாக்கி விட்டு தப்பியோட முயன்றதாகவும், அப்போது, காவலர்கள் அவரை சுட்டுப் பிடித்ததாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து இருவரையும் உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த போலீஸார் அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியதில், மணிகண்டன் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் காவல் உதவி ஆய்வாளர் சரவணகுமார் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் என்றத் தகவலும் வெளியாகியிருக்கிறது