• August 7, 2025
  • NewsEditor
  • 0

தஞ்சாவூர் கீழவாசல் தட்டான்தெரு பகுதியில் இளைஞர்கள் சிலர் மாத்திரையை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் நரம்பில் செலுத்தி போதை ஏற்படுத்திக்கொண்டு வந்துள்ளனர். குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இத்தகைய போதைப்பழக்கத்து ஆளாகி வந்துள்ளனர். ஒரு கும்பல், கல்லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்.பி.,ராஜராமன் உத்தரவின் பேரில், கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீஸார் விசாரணையில் ஈடுபட்டனர்.

போதை மாத்திரை விற்பனை செய்த நவீன்குமார்

இதில், தட்டான்தெருவில் போதை மாத்திரை மற்றும் ஊசி விற்பனை செய்த கீழவாசல் பகுதியை சேர்ந்த முகமது அப்பாஸ், பிரவீன், அரவிந்த், வெங்கடேசன், அம்மாபேட்டையைச் சேர்ந்த சந்தோஷ்குமார், வண்டிக்காரத் தெருவைச் சேர்ந்த அபிஷேக் ஆகிய 6 பேரை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். இவர்களிடம் போலீஸ் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “திண்டுக்கல் மரியநாதபுரம் ஹனுமான் நகரை சேர்ந்த நவீன்குமார் (33), போதை மாத்திரையை தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வந்துள்ளார். தனிப்படை போலீஸ் உதவி ஆய்வாளர் தென்னரசு, திண்டுக்கலில் தங்கி இருந்து நவீன்குமார் குறித்து விசாரணை நடத்தினர். இதில் நவீன்குமார் மெடிக்கல் ரெப்பாக பணியாற்றி வருகிறார். வலி நிவாரணி மாத்திரைகள் அதிகளவில் தேவை இருப்பதை அறிந்துக்கொண்டு, ஆன்லைனில் புக்கிங் செய்யும் நபர்களை குறித்து மாத்திரைகள் விற்பனை செய்து வந்துள்ளார். இதில் நல்ல வருமானம் கிடைத்துள்ளது.

மேலும், அதிக வலி நிவாரணி மாத்திரைகளை ஹரியானா மாநிலத்தில் இருந்து வாங்கி தமிழகம் முழுவதும் ஒரு குழு அமைத்து சப்ளை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து நவீன்குமாரை கைது செய்ததுடன், அவரிடம் இருந்து சுமார் 600க்கும் மேற்பட்ட போதை மாத்திரை அட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டது. அவரை தஞ்சாவூருக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினோம். வலி மாத்திரை அதிகளவில் எடுத்து கொண்டால் போதை உண்டாகும் எனவே போதைக்காக வலி மாத்திரை அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிந்துக்கொண்டேன். பின்னர் நான், நடத்திய மெடிக்கலை வேறு நபருக்கு கொடுத்து விட்டு, மாத்திரை வாங்குவதற்கான அனுமதியை வைத்து, வலி நிவாரணியை அதிகளவில் கொள்முதல் செய்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வந்தேன். என்னிடம் கல்லுாரி மாணவர்கள் தான் அதிகளவில் மாத்திரையை வாங்கியதாக நவீன்குமார் தெரிவித்தார். இது குறித்து விசாரணை மேலும் தொடர்கிறது” என்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *