
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சட்டமன்றத் தொகுதியின் பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மத்திய அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் ஒன்று சேர்க்க வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணியையும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் செய்ய வேண்டும் எனவும் கூறினார். பின், அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், ”கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு தலா 10 லட்ச ரூபாய். திருப்பூரில் போலீஸ் எஸ்.ஐ வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிகழ்வில், அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு 30 லட்ச ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளது. இது போன்ற சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் நிதியுதவி வழங்குகிறாரே தவிர குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்தவில்லை என்பது மிகவும் வருத்தமாக உள்ளது. தமிழகத்தில் அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளை தடுக்க தமிழக அரசு தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என நான் தான் முதலில் தெரிவித்தேன். இன்று திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் முதல்வரை சந்தித்து ஆணவ கொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றி நிறைவேற்றி தரவேண்டும்” என்றார்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திமுக ஆட்சிக்கு நூற்றுக்கு 50 மார்க் வழங்கியுள்ளது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், “அவரது கருத்துக்கு மாற்று கருத்து எதுவும் சொல்ல முடியாது. திமுக ஆட்சி மிக மோசமாக படு பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. போதைப் பொருள் கலாச்சாரம், பாலியல் வன்கொடுமைகள் தினசரி நடைபெறுகின்றன. தமிழகத்தில் சில அரசு மருத்துவமனைகளில் நாய் கடிக்கும், பாம்பு கடிக்கும் மருந்துகள் இல்லை என தகவல் வருகின்றன. அதே போல் பல மருத்துவமனைகளில் கட்டிடங்கள் அதிகமாக இருக்கிறது மருத்துவர்கள் இல்லை. இதனை மருத்துவ நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என தெரிவித்தார்.