
செல்போனை ஓப்பன் செய்தாலே, ‘நைட்ல மெக்னீசியம் கிரீமை உடம்புல தடவிக்கிட்டுப் படுத்தா நல்லா தூக்கம் வரும்’ என்கிற ரீல்ஸ் வந்துகொண்டே இருக்கிறது.
மெக்னீசியம் கிரீம் என்றால் என்ன; அதன் முக்கியத்துவம்; நன்மைகள்; மெக்னீசியம் குறைபாட்டால் ஏற்படும் அறிகுறிகள்; மெக்னீசியத்திற்கும் தூக்கத்திற்குமான தொடர்பு என்ன ஆகியவற்றைப்பற்றி சென்னையைச் சேர்ந்த பொதுநல மற்றும் சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர். N. ராஜா அவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்வோம்.
மெக்னீசியம் மனித உடலுக்குத் தேவையான நான்காவது தாது (mineral) ஆகும். இது மனித உடலில் நடக்கும் 300-க்கும் மேற்பட்ட உயிர் வேதியியல் மாற்றங்களில் கோ ஃபேக்டராக (co factor) செயல்படுகிறது. தவிர, ஆற்றல் உற்பத்திக்கும், தசை நார்கள் சுருங்கி விரியவும், டி.என்.ஏ, ஆர்.என்.ஏ போன்ற புரதங்கள் உற்பத்திக்கும், கால்சியம், பாஸ்பரஸ் முதலிய தாதுக்களை நம் செல்களுக்குள்ளே அனுப்புவதற்கும், ரத்த அழுத்தத்தை முறைப்படுத்தவும், ரத்தத்தில் சர்க்கரை அளவை சீர் செய்வதற்கும் மெக்னீசியம் கட்டாயம் தேவை.
இயற்கையாக மனித உடலில் 25 கிராம் மெக்னீசியம் காணப்படும். இதில் 50 முதல் 60 சதவீதம் எலும்புகளிலும் தசைகளிலும் காணப்படுகிறது. தவிர, ஒரு சதவிகிதம் ரத்தத்தில் காணப்படும். பொதுவாக, ஆண்களுக்கு 420 மில்லி கிராமும், பெண்களுக்கு 320 மில்லி கிராமும் ஒரு நாளைக்கு தேவையான மெக்னீசியத்தின் அளவாக உள்ளது.
இதன் அளவு சிறுநீரகத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றது. ஏனென்றால், ஒரு நாளைக்கு 120 மில்லி கிராம் மெக்னீசியம் சிறுநீரின் வழியாக வெளியேற்றப்படுகிறது.

எல்லாவிதமான பழங்கள், காய்கறிகள், பால் முதலியவற்றில் மெக்னீசியம் உள்ளது. நமக்குத் தினந்தோறும் தேவையான மெக்னீசியத்தின் அளவில் பத்து சதவீதம் நாம் பருகும் தண்ணீரிலிருந்தே பெற்றுக் கொள்ளலாம். பால் பொருள்கள், பப்பாளி, வாழை, முருங்கைக்கீரை, பட்டாணி, சோயாபீன்ஸ் மற்றும் பிற கீரை வகைகளில் அபரிமிதமான மெக்னீசியம் சத்து உள்ளது. அசைவ வகைகளை எடுத்துக்கொண்டால் மீன் மற்றும் இறைச்சி வகைகளில் உள்ளது.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் மெக்னீசியம் உள்ளது. எனவே மெக்னீசியத்திற்காக சப்ளிமெண்ட் எடுப்பது பெரும்பாலும் தேவைப்படாது. ஒருவேளை மெக்னீசியம் குறைபாடு ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனைபெற்று மெக்னீசியம் சப்ளிமென்ட்ஸ் எடுத்துக்கொள்ளலாம்.

பொதுவாக மெக்னீசியம் குறைபாட்டால் வாய் குமட்டல், வாந்தி, தசை பலவீனம், சோர்வு, கை கால் நமைச்சல், குத்தல், தலைவலி, இதய தசைகள் சோர்வடைதல், சீரணக்கோளாறு, கால்சியம் குறைபாடு, பொட்டாசியம் குறைபாடு, இதயத்துடிப்புக் குறைதல் போன்ற அறிகுறிகளைக் காட்டும்.
நீரிழிவு நோயாளிகள், மது அருந்துபவர்கள், நீண்ட காலமாக பேதியால் அவதிப்படுபவர்கள், குடலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளவர்கள் மெக்னீசியம் குறையாடு விஷயத்தில் அதிக கவனமுடன் இருக்க வேண்டும்.

மெக்னீசியத்தின் அளவு உடலில் அதிகரித்தால் மயக்கம், குழப்பம், மாறுபட்ட இதயத்துடிப்பு, குறைந்த ரத்த அழுத்தம், தூக்கமின்மை, தசை சோர்வடைதல் முதலிய விளைவுகளை உண்டாக்கும்.
நாம் உறங்குவதற்கு மெலடோனின் எனும் ஹார்மோன் காரணமாக உள்ளது. இந்த மெலடோனின் (melatonin) ஹார்மோன் உற்பத்திக்கு மெக்னீசியம் அவசியமாகிறது. எனவே மெக்னீசியம் கிரீம்களை தோலில் பூசிக்கொண்டால் மெக்னீசியம் தோலால் உறிஞ்சப்பட்டு மெலடோனின் உற்பத்தியைத் தூண்டி தூக்கத்தை வரவழைக்கும். என்றாலும், ஒரு மருத்துவரின் ஆலோசனைப்பெற்று பயன்படுத்துவதே நல்லது.”
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…