
பாகிஸ்தானின் சிந்து நதி டெல்டா பகுதி, மக்கள் வாழத் தகுதியான இடமா எனக் கேள்வி எழுப்பும் வகையில் மிகப் பெரிய சிக்கலை சந்தித்து வருகிறது. இதில் இந்தியாவின் பங்கும் உள்ளது.
பாகிஸ்தானின் தெற்கில் சிந்து நதி அரேபிய கடலை அடையும் டெல்டா பகுதியில், கடல் நீர் உள் வருவதனால் பல கிராமங்கள் தீவுகளாக சுருங்கியும் மூழ்கியும் வருகின்றன. பலர் வீடுகளை இழந்து ஊள்நாட்டு அகதிகளாக இடம்பெயர்கின்றனர். விவசாயமும், இறால் வளர்ப்பும், மீன் பிடிக்கும் தொழிலும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக காரோ சான் நகரில் அப்துல்லா மிர்பஹர் கிராமத்தில் 150 வீடுகள் இருந்த நிலையில், இப்போது நான்கு மட்டுமே எஞ்சியிருப்பதாக அரப் நியூஸ் தளம் கூறுகிறது. அவர்களும் கிராமத்தை விட்டு நகரங்களுக்கு இடம்பெயரும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
வெளியேறிய 12 லட்சம் மக்கள்
காரோ சான் நகரைச் சுற்றியிருந்த 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல இப்போது இல்லை. நகரின் மக்கள் தொகை 2023ம் ஆண்டில் 26,000 ஆக இருந்து, இப்போது 11,000 ஆக குறைந்துள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களில் சிந்து நதியின் டெல்டா பகுதியிலிருந்து 12 லட்சம் மக்கள் வெளியேறியிருப்பதாக 2025 மார்ச் மாதம் வெளியான புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
திபெத்தில் தொடங்கி காஷ்மீர் வழியாக பாகிஸ்தான் முழுவதும் ஓடும் சிந்து நதியில் அமைக்கப்பட்ட நீர்ப்பாசன கால்வாய்கள், நீர்மின் அணைகள் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களான பனிப்பாறைகள் உருகுதல் ஆகியவற்றின் விளைவாக, 1950களில் இருந்து டெல்டாவிற்குள் நீர் ஓட்டம் 80 சதவீதம் குறைந்துள்ளது என்று, அமெரிக்க-பாகிஸ்தான் நீர் மேம்பட்டு ஆய்வுகள் மையத்தின் 2018 ஆம் ஆண்டு ஆய்வு தெரிவிக்கிறது.
இதனால் ஊர்களை அழிக்கும் வகையில் கடல் நீர் உள்நுழைந்துள்ளது. 1970ம் ஆண்டு இருந்ததை விட நீரின் உப்புத்தன்மை 70% அதிகரித்துள்ளது.
சிந்து நதியை மோசமாக்கிய நீர் மின் திட்டங்கள்
பொதுவாக வளமான வண்டல் மண்ணை ஆறுகள் டெல்டாவில் வந்து சேமிப்பதனால், அங்கு விவசாயம் செழிப்பானதாக இருக்கும். இங்கோ கடல் நீர் உள்நுழைவினால் பரந்த அளவில் விளைநிலங்கள் தரிசாகிவிட்டன.
சிந்து நதியில் ஆங்கிலேயர்கள் முதலில் கால்வாய்களையும் அணைகளையும் கட்டினர். சுதந்திரத்துக்குப் பிறகு தொடங்கப்பட்ட பல நீர்மின் திட்டங்கள் நிலைமையை இன்னும் மோசமாக்கியிருக்கின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ராணுவம் தொடங்கிய கால்வாய் திட்டங்கள் சிந்து மாகாணத்தில் உள்ள விவசாயிகள் போராட்டத்தால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உப்புநீர் உள்ளே வருவதை. இயற்கையாக தடுக்கும் வகையில் சதுப்பு நிலக் காடுகளை மீண்டும் உருவாக்கும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது சிந்து மாகாண அரசாங்கம்.
இந்தியாவின் நடவடிக்கையால் மக்கள் அச்சம்
இதற்கு இடையில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தியுள்ள இந்தியாவின் முடிவு மேலும் அச்சத்தைக் கூட்டியிருக்கிறது. இதனை பாகிஸ்தான் “போர் நடவடிக்கை” என எச்சரித்தபோதிலும் இந்தியா பின் வாங்காததால் மீனவர்கள், விவசாயிகள், இறால் வளர்ப்பு பண்ணைகள் வாழ்வாதாரத்தை இழக்கும் அச்சத்தில் உள்ளனர். முன்னதாக பாகிஸ்தான் சிந்து நதி நீரை 20 கோடி மக்கள் நம்பியிருப்பதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
“யாரும் விருப்பப்பட்டு சொந்த ஊரை விட்டு வெளியேறுவதில்லை. நாங்கள் எங்கள் நிலங்களை மட்டுமல்ல கலச்சாரத்தையும் இழந்துவருகிறோம்” என அரப் நியூஸில் பேசியுள்ளார் வீட்டையும் முன்னோர்களின் கல்லறைகளையும் விட்டு வெளியேறும் ஒருவர்!