• August 6, 2025
  • NewsEditor
  • 0

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்தி அவரது மகன்கள் தங்கபாண்டி, மணிகண்டன் ஆகியோர் அங்கேயே தங்கி வேலை செய்து வந்தனர்.

தந்தைக்கும் மகன்களுக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், தந்தை மூர்த்தி மற்றும் மகன்கள் தங்கபாண்டி, மணிகண்டன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை இரவு மது அருந்தி உள்ளனர். அப்போது, தந்தை மற்றும் மகன்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

அப்போது, மூர்த்தியை மகன்கள் தங்கபாண்டி, மணிகண்டன் இருவரும் சேர்ந்து வெட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மூர்த்தியின் உறவினர்கள் காவல் உதவி எண்ணான 100-க்கு போன் செய்து புகார் தெரிவித்துள்ளார்.

சண்முகவேலு

இதையடுத்து, சிக்கனூத்து அருகில் ரோந்துப் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலுக்கு இந்த புகாரை விசாரிக்குமாறு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சிக்கனூத்து கிராமத்துக்குச் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் மூர்த்தி மற்றும் அவரது மகன்கள் தங்கபாண்டி, மணிகண்டன் விசாரணை நடத்தி உள்ளார்.

இதைத் தொடர்ந்து, காயமடைந்த மூர்த்தியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸை அழைத்துள்ளார். அப்போது, தங்கபாண்டி, மணிகண்டன் ஆகிய இருவரையும் உதவி ஆய்வாளர் சண்முகவேலு புகைப்படம் எடுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தங்கபாண்டி, அவரது சகோதரர் மணிகண்டன் தோட்டத்தில் இருந்த அரிவாளைக் கொண்டு சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலை துரத்தி உள்ளார்.

நிலைமை கை மீறிப்போவதை அறிந்துகொண்ட சண்முகவேலு தங்கராஜாவிடம் இருந்து தப்பிக்க ஓடியுள்ளார். இருந்தபோதிலும் விடாமல் சண்முகவேலுவை துரத்திய தங்கராஜாவும், அவரது சகோதரரும் சண்முகவேலுவை ஓட ஓட விரட்டி வெட்டி உள்ளனர். இதில், கழுத்து மற்றும் தலையில் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சண்முகவேலு உயிரிழந்தார். சம்பவ இடத்தில் ஐஜி செந்தில்குமார், டிஐஜி சசிமோகன், காவல் கண்காணிப்பாளர் கிரீஷ்குமார் யாதவ் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

கொலை

இதுகுறித்து மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “குடும்பச் சண்டை என்று காவல் நிலையத்துக்கு தகவல் வந்ததால், எம்எல்ஏ மகேந்திரனின் தோட்டத்துக்கு உதவி ஆய்வாளர் சண்முகவேலு, காவலர் அழகுராஜா ஆகிய இருவரும் சென்றுள்ளனர். அங்கு மூர்த்தி காயத்துடன் காணப்பட்டுள்ளார். அவரது மகன்களான தங்கபாண்டி, மணிகண்டன் இருவரும் தகராறு செய்துகொண்டிருந்தனர். அவர்களை சமாதானப்படுத்திய சண்முகவேலு, மூர்த்தியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸை வரச்சொல்லி உள்ளார். அப்போது, ஆத்திரத்தில் இருந்த தங்கபாண்டி, மணிகண்டன் ஆகிய இருவரும் அரிவாளால் துரத்தியுள்ளனர். அப்போது, அங்கிருந்த தப்பிச் செல்ல முயன்ற சண்முகவேலுவை அவர்கள் வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

இதுதொடர்பாக 6 தனிப்படைகளை அமைத்துள்ளோம். மணிகண்டன் மீது நான்கு வழக்குகளும், தங்கபாண்டியன் மீதும் 4 வழக்குகளும் உள்ளது. மூர்த்தி மீது இரண்டு வழக்குகள் உள்ளது. போலீஸ் வாகனத்தின் கண்ணாடி, வாக்கி டாக்கி மைக்கையும் உடைத்துள்ளனர். அவர்களின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. விரைவில் பிடிபடுவார்கள்” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *