
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ஏற்பட்ட இந்தியா – பாகிஸ்தான் மோதலை வர்த்தகத்தை முன்வைத்து நான்தான் முடிவுக்கு கொண்டு வந்தேன் எனத் தொடர்ச்சியாகக் கூறிவரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்திய பொருள்கள் மீது 25 சதவிகிதம் வரி விதித்தார்.
ஏற்கெனவே, ஆப்பிள் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களிடம், தங்களின் தொழிற்சாலைகளை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அமைக்கக் கூடாது என்று எச்சரித்து வந்த ட்ரம்ப், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி அந்நாட்டின் பொருளரத்துக்கும், உக்ரைன் மீதான போருக்கு இந்தியா மறைமுகமாக ஆதரவு வழங்கி வருவதாகக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அதோடு, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தாவிட்டால் வரியை மேலும் அதிகரிப்பேன் என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.
மறுபக்கம், ஒரு நாடு எந்த நாட்டுடன் வர்த்தகம் செய்யவேண்டும் என்பது அந்நாட்டின் உரிமை, அதை யாரும் கட்டாயப்படுத்த முடியாது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறிவந்தார்.
இந்த நிலையில், அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியா மீதான வரியை உயர்த்தப்போகிறேன் என்று நேற்று (ஆகஸ்ட் 5) அறிவித்த ட்ரம்ப், சொன்னதைப் போலவே இந்தியா மீதான வரியை இன்று மேலும் 25 சதவிகிதம் உயர்த்தி 50 சதவிகிதமாக விதித்திருக்கிறார்.
அதுவும், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை இந்தியா தொடர்ந்து வாங்கிவருவதால் அதற்கு அபராதமாக இந்த 25 சதவிகித வரி உயர்த்தியிருப்பதாக ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.
இந்த அபராத வரி அடுத்த 21 நாள்களில் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன்மூலம், பிரேசிலுக்கு அடுத்தபடியாக அமெரிக்காவால் 50 சதவிகித வரிவிதிப்புக்குள்ளான நாடாகியிருக்கிறது இந்தியா.
ட்ரம்பின் இந்த நடவடிக்கையை, `நியாயமற்றது, காரணமற்றது’ என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விமர்சித்திருக்கிறது.
அதோடு, பல நாடுகள் தங்கள் சொந்த தேசிய நலனுக்காக எடுக்கும் நடவடிக்கைகளுக்காக இந்தியா மீது அமெரிக்கா கூடுதல் வரிகளை விதிப்பது துரதிர்ஷ்டவசமானது என்றும், இந்தியா தனது தேசிய நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.