
தாராலி: உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியின் தரளி பகுதியில் மேகவெடிப்பால் ஏற்பட்ட நிலச்சரிவு – பெருவெள்ளத்தில் சிக்கி இதுவரை ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், 100-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தொடர்ந்து வருகிறது. இதுவரை 190 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள தரளியில் பகுதியில் நேற்று பிற்பகலில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் கீர் கங்கா நதியில் திடீரென பெருவெள்ளம் ஏற்பட்டு தரளி கிராமத்தை நோக்கி சீறிப் பாய்ந்தது. தரளியில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் ராணுவம், ஐடிபிபி, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை ஆகியவை இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. தொடர் மழையால் மீட்புப் பணிகளில் தடைகள் ஏற்பட்டுள்ள நிலையில், 150 பேர் கொண்ட ராணுவக் குழு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முன்னெடுத்து வருகிறது.