
புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை உறுப்பினர்கள் 70 பேருக்கும் ஐபோன் 16 புரோ, ஐபேட் மற்றும் டேப்லெட் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காகித பயன்பாடு இல்லாத டிஜிட்டல் சட்டப்பேரவை என்ற நகர்வின் கீழ் இது முன்னெடுக்கப்பட்டுள்ளதாம். இதற்கு, நெட்டிசன்கள் கொந்தளிப்புடன் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
NeVA எனப்படும் தேசிய இ-விதான் அப்ளிகேஷன் முயற்சியின் கீழ் இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. அதன்படி முதல் முறையாக பேரவை கூட்டத்தில் பங்கேற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் புதிய டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தியதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், டெல்லி பேரவைக்கு தேவையான மின்சாரம் முழுவதும் சூரிய சக்தி மூலம் பெறப்படுகிறது. இதன் மூலம் தேசத்திலேயே முழுவதும் சூரிய சக்தி மின்சாரம் மற்றும் டிஜிட்டல் மயமான முதல் பேரவையாக டெல்லி சட்டப்பேரவை மாற்றம் கண்டுள்ளது.