
மதுரை: மதுரையில் நடக்க இருக்கும் தவெக மாநாடு குறித்த காவல் துறையின் பல்வேறு கேள்விகளுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் திருமங்கலம் கூடுதல் எஸ்பியிடம் விளக்கம் அளித்தார்.
மதுரை அருகே பாரபத்தி என்ற இடத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு ஆக.25-ல் நடக்கும் என, கட்சியின் தலைவர் விஜய் அறிவித்தார். இதற்காக சுமார் 500 ஏக்கர் இடம் தேர்வு செய்து ஏற்பாடுகளும் தொடர்ந்து நடைபெறுகிறது. மாநாட்டுக்கான அனுமதி, பாதுகாப்பு கேட்டு மதுரை காவல் கண்காணிப்பாளர் அரவிந்திடம் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கடிதம் கொடுத்த நிலையில், ஆகஸ்டு 27-ம் தேதிக்கு மேல் விநாயகர் சதுர்த்தி வருவதால் வேறு தேதியில் மாநாடு நடத்திக்கொள்ள காவல் துறை அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து ஆக.21-ல் மாநாடு நடைபெறும் என தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.