• August 6, 2025
  • NewsEditor
  • 0

குஜராத் மாநிலம், பனஸ்காந்தா என்ற இடத்தை சேர்ந்த சந்திரிகா(18) என்ற பெண் ஹரேஷ் செளதரி என்பவருடன் கடந்த சில மாதங்களாக லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்தார். இருவரும் இதற்காக ஒப்பந்தமும் செய்து கொண்டனர். ஆனால் சந்திரிகாவிடம் அவரது பெற்றோர் தாங்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்று கூறி நிர்ப்பந்தம் செய்து வந்தனர். இதையடுத்து தங்களது பெற்றோருக்கு பயந்து சந்திரிகாவும், அவரது பார்ட்னர் ஹரேஷும் சேர்ந்து மத்திய பிரதேசம், ராஜஸ்தானிற்கு சென்றனர். அவர்களை சந்திரிகாவின் உறவினர்கள் தேடி வந்தனர். போலீஸிலும் புகார் செய்தனர். இவரும் இருக்கும் இடத்தை சந்திரிகாவின் பெற்றோர் குஜராத் போலீஸாரின் துணையோடு கண்டுபிடித்தனர்.

இருவரும் ராஜஸ்தானில் உள்ள ஒரு ஹோட்டலில் பதுங்கி இருந்தபோது அவர்களை மடக்கி பிடித்து குஜராத்திற்கு அழைத்து வந்தனர். ஹரேஷ் மீது பழைய ஒரு புகாரில் வழக்கு பதிவு சிறையில் அடைத்தனர். சந்திரிகாவை கட்டாயப்படுத்தி மிரட்டி தனது பெற்றோருடன் செல்வதாக வீடியோ ஒன்றை போலீஸார் எடுத்துக்கொண்டு அவரை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு சென்ற பிறகு அவர்கள் தாங்கள் பார்த்திருக்கும் மணமகனை திருமணம் செய்யவேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்து வந்தனர்.

போலீஸார் ஹரேஷை விடுதலை செய்தவுடன் வெளியில் வந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்தபோது அதில் சந்திரிகாவின் இரண்டு மெசேஜ் இருந்தது. அதில் சந்திரிகா தன்னை வந்து அழைத்து செல்லும்படியும், அப்படி செய்யாவிட்டால் தன்னை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். அல்லது என்னை கொலை செய்துவிடுவார்கள் என்று குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து ஹரேஷ் குஜராத் உயர்நீதிமன்றத்தில் சந்திரிகாவை ஆஜர்படுத்த உத்தரவிடக்கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இம்மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இருந்த இரண்டு நாட்கள் இருந்த நிலையில் சந்திரிகா அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார். சந்திரிகா இறந்துவிட்டதாக கூறி உறவினர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுக்காமல் பிரேத பரிசோதனை செய்யாமல் அதிகாலையில் உடலை எரித்துவிட்டனர்.

ஹரேஷ் மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது சந்திரிகா இறந்துவிட்டதாக கூறி இறப்பு சான்றிதழை தாக்கல் செய்து மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று பெண் வீட்டார் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து சந்திரிகா ஆணவப்படுகொலை செய்யப்பட்டதாக கூறி மனித உரிமை கமிஷன், டிஜிபி, முதல்வருக்கு ஹரேஷ் விரிவான புகார் ஒன்றை அனுப்பி வைத்தார். அதில் சந்திரிகாவை அவரது தந்தையும் உறவினர்களும் சேர்ந்து படுகொலை செய்து விட்டதாகவும், சந்திரிகாவிடம் தாங்கள் பார்த்திருக்கும் மணமகனை திருமணம் செய்யும்படி கட்டாயப்படுத்தியதாகவும், ஆனால் சந்திரிகா மறுத்துவிட்டதால் உறவினர்கள் சேர்ந்து படுகொலை செய்துள்ளனர்.

இதற்கு போலீஸ் அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். அப்புகாரின் அடிப்படையில் 9 பேரை பிடித்து அவர்களுக்கு இக்கொலையில் உள்ள பங்கு குறித்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர். இது குறித்து ஹரேஷ் கூறுகையில்,”சந்திரிகாவின் தந்தை இன்னும் தலைமறைவாக இருக்கிறார். நான் விசாரணை குழுவிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளேன். சந்திரிகா எனக்கு அனுப்பிய வாட்ஸ் ஆப் மெசேஜில் தன்னை வந்து காப்பாற்றும்படியும், வராவிட்டால் என்னை கொலை செய்துவிடுவார்கள் என்று மெசேஜ் அனுப்பி இருந்தார். எனவே சந்திரிகாவை அவரது உறவினர்கள்தான் ஆணவக்கொலை செய்துள்ளனர்”என்று தெரிவித்துள்ளார். இருவரும் மே 5ம் தேதியில் இருந்து லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *