
சென்னை, ஆவடி பகுதியில் வசித்து வருபவர் மணி (47). இவர் கடந்த 27.07.2025-ம் தேதி அவருக்கு தெரிந்த பெண் தோழி தீபிகா என்பவருடன் தேனாம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலுக்குச் சென்றார். பின்னர் அங்கு அறை எடுத்து, தங்கிவிட்டு, மறுநாள் (28.07.2025) காலை எழுந்து பார்த்தபோது, தீபிகாவைக் காணவில்லை. அதோடு மணி கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் எடையுள்ள தங்கச் செயினும் மாயமாகியிருந்தது. இதுகுறித்து மணி, தேனாம்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவில் புகாரளித்தார். அதன்பேரில் உதவி கமிஷனர் ஆரோக்கிய ரவீந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சபரிதாசன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து தேனாம்பேட்டை போலீஸார் கூறுகையில், “மணி கொடுத்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்குச் சென்று விசாரித்தோம். மணியுடன் தங்கியிருந்த தீபிகா மீது முதலில் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரின் செல்போன் நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் கிடைக்கவில்லை. இந்தச் சமயத்தில்தான் தீபிகாவின் ஆண் நண்பர் சதீஷ்குமார் குறித்த தகவல் கிடைத்தது. அதனால் முதலில் சதீஷ்குமாரைப் பிடித்தோம். அவர் அளித்த தகவலின்படி குன்றத்தூர் சிவன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த தீபிகா என்கிற தீபலட்சுமியை (22) கைது செய்தோம். தீபிகாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. கணவரைப் பிரிந்து வாழும் தீபிகா கடந்த சில ஆண்டுகளாக சதீஷ்குமாருடன் பழகிவருகிறார். சம்பவத்தன்று மணியுடன் மது அருந்திய தீபிகா, அவர் அணிந்திருந்த தங்கச் செயினை திருட திட்டமிட்டிருக்கிறார். இதற்காக மணியுடன் மிகவும் நெருக்கமாக பேசி வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் போதையில் மணி தள்ளாட அவரை அறைக்கு கைதாங்கலாக அழைத்துச் சென்று செயினை திருடியிருக்கிறார் .பின்னர் அந்தச் செயினை விற்று அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு சதீஷ்குமாருக்கு விலை உயர்ந்த பைக் ஒன்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார். மீதியுள்ள பணத்தை வைத்து சந்தோஷமாக இருந்த சமயத்தில்தான் இருவரையும் நாங்கள் கைது செய்தோம். தற்போது பைக், மீதி பணம் 3 லட்சம் ரூபாய் ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம். கைதான தீபிகா, சதீஷ்குமாரின் பின்னணி குறித்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.