• August 6, 2025
  • NewsEditor
  • 0

கோவை, பேரூர் அருகே உள்ள ராமசெட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். சென்டரிங் வேலை செய்து வந்தார். இவர் நேற்று இரவு பெரியகடை வீதி காவல் நிலையம் சென்றுள்ளார். அங்கு, ‘என்னை வெட்டுவதற்காக 50 பேர் துரத்தி வருகிறார்கள்’ என்று கூறி புகார் அளிக்க சென்றுள்ளார்.

பெரியகடை வீதி காவல்நிலையம்

ஆனால் வெளியில் சென்று பார்த்த காவலர், அங்கு யாரும் இல்லாததால் அவரை நாளை காலை வாருங்கள். என்று அனுப்பியுள்ளனர். ராஜன் சிறிது நேரத்திலேயே பணியில் இருந்து காவலருக்கு தெரியாமல், காவல் நிலையத்தில் மேல் பகுதியில் இருந்த எஸ்.ஐ அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்தார்.

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்த கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர், “ராஜன் கடந்த சில நாள்களாகவே மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் கூறுகின்றனர். இது லாக்அப் மரணம் இல்லை.” என்றார். காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ராஜன் நேற்று காலை கோவை மாவட்ட நீதிமன்றம் சென்று அங்குள்ள நீதிபதியை சந்தித்து, தன்னை யாரோ வெட்ட துரத்தி வருகிறார்கள் என்று கூறியது தெரியவந்துள்ளது.

சரவணசுந்தர்

இதேபோல பேரூர் காவல் நிலையம் சென்றும் தன்னை கொலை செய்ய துரத்துகிறார்கள் என்று கூறியிருக்கிறார். அங்கு அவரின் கை செலவுக்கு பணம் கொடுத்து அனுப்பியுள்ளனர். இதனிடையே பணியில் அலட்சியமாக இருந்த பெரியகடை வீதி காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகராஜ், காவலர் செந்தில்குமார் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்த ராஜனின் அக்கா வீரமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், “ராஜன் என் உடன் பிறந்த தம்பி. எங்கள் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 6 பேர். நாங்கள் 2 பேர் மட்டுமே இருந்தோம். மற்றவர்கள் இறந்துவிட்டனர். இப்போது அவனும் இறந்துவிட்டான். ராஜன் நன்றாக தான் இருந்தான். அவனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. அதனால் இப்படி ஆனதா என்று தெரியவில்லை. குடித்தாலும் யார் பிரச்னைக்கும் போக மாட்டான்.

வீரமணி

அமைதியாக வீட்டிலேயே இருப்பான். நேற்று காலை வேலைக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து கிளம்பினான். இன்று காலை காவல்நிலையத்தில் இருந்து அழைப்பு வந்தபோதுதான் எங்களுக்கு தகவல் தெரிந்தது. கடந்த ஆடி 18 ஆம் தேதியில் இருந்தே, ‘என்னை யாரோ 10 பேர் துரத்திக் கொண்டு வருகிறார்கள். காவல் நிலையம் சென்று புகார் அளிக்கிறேன்.’ என்று கூறினான்.

நாங்கள், ‘அப்படி எல்லாம் யாரும் வரவில்லை.’ என்று சமாதானப்படுத்தினோம். பாத யாத்திரை சென்றபோது காலில் அடிபட்டது. அதற்காக காலில் கட்டு போட்டிருந்தான். அவனுக்கு எதிரிகள் யாரும் இல்லை.  எனவே மனநிலை சரி இல்லாமல் தான் இப்படி செய்திருக்கிறான் என்று நினைக்கிறோம். அவனின் உடலை பார்த்துவிட்டோம்.

ராஜன் சாலையில் ஓடும் சிசிடிவி

காயம் எதுவும் இல்லை. அதனால் எங்களுக்கு மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை.” என்றார். இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் ராஜனின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *