
தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்பட்ட விவகாரத்தில், அவரின் மனைவிதான் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து யூடியூப் வீடியோ பார்த்து திட்டம் போட்டு கொலைசெய்திருக்கிறார் என்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
போலீஸார் தரப்பில் வெளியான தகவலின்படி, கொல்லப்பட்டவரின் பெயர் சம்பத். இவர் உள்ளூர் நூலகத்தில் துப்புரவு பணியாளராக வேலைபார்த்து வந்திருக்கிறார்.
இவரின் மனைவி ரமாதேவி. இருவருக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. குடிப்பழக்கம் உடைய சம்பத் போதையில் அவ்வப்போது தன் மனைவியை அடிப்பார் என்று கூறப்படுகிறது.
இருப்பினும், ரமாதேவி சிற்றுண்டி விற்று குழந்தைகளைக் கவனித்து வந்திருக்கிறார்.
சிற்றுண்டி விற்கும்போதுதான் கர்ரே ராஜய்யா (50) என்பவருடன் ரமாதேவிக்கு பழக்கம் ஏற்பட்டு பின்னாளில் அதுவே திருமணம் மீறிய உறவாகச் சென்றிருக்கிறது.
இந்த நிலையில்தான், இருவரும் சம்பத்தைக் கொலைசெய்யத் திட்டமிட்டிருக்கின்றனர்.
அதன்படி ரமாதேவி, ஒருவரின் காதில் பூச்சிக்கொல்லியை ஊற்றுவது உயிருக்கு ஆபத்தானது என்பதை யூடியூபில் வீடியோ பார்த்து அதை கர்ரே ராஜய்யாவிடம் கூறியிருக்கிறார்.
அதைத்தொடர்ந்து, கொலை நடந்த அன்று கர்ரே ராஜய்யாவும் அவரின் நண்பர் ஸ்ரீனிவாஸும் சேர்ந்து மது அருந்தலாம் என்று கூறி சம்பத்தை பொம்மக்கல் மேம்பாலத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
பின்னர் அங்கு மதுபோதையில் சம்பத் சுயநினைவை இழந்த நேரத்தில் அவரின் காதில் பூச்சி மருந்தை ஊற்றி கொலை செய்திருக்கிறார் கர்ரே ராஜய்யா.

கொலை செய்த அடுத்த சில நிமிடங்களில் உடனடியாக ரமாதேவிக்கு போன் செய்து திட்டம் போட்டபடி அனைத்தும் முடிந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார்.
அடுத்தநாள் ரமாதேவி துக்கத்தில் இருப்பதுபோல, தன் கணவர் காணாமல் போய்விட்டதாக போலீஸில் புகாரளித்தார்.
ஆகஸ்ட் 1-ம் தேதி சம்பத்தின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதும் ரமாதேவியும், கர்ரே ராஜய்யாவும் போலீஸைத் தொடர்புகொண்டனர்.
கூடவே, பிரேத பரிசோதனை நடத்தக் கூடாது என்றும் கூறியிருக்கின்றனர்.

இதில் சந்தேகமடைந்த போலீஸார், விசாரணையில் மாதேவி, கர்ரே ராஜய்யாவின் தொலைபேசி அழைப்புகள், செல்போன் லொகேஷன், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் அவர்களின் திட்டம் தெரியவந்திருக்கிறது.
பின்னர், வசமாகச் சிக்கிய ரமாதேவி, கர்ரே ராஜய்யா மற்றும் அவரின் நண்பர் ஸ்ரீனிவாஸ் ஆகிய மூவரும் கொலையை ஒப்புக்கொண்டனர்.
தற்போது அவர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.