
பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா (Luiz Inácio Lula da Silva), ‘அமெரிக்கா விதித்துள்ள வரிகளைக் குறித்து விவாதிக்க எப்போது வேண்டுமானாலும் தன்னை அழைக்கலாம்’, என்ற ட்ரம்ப்பின் அழைப்பை நிராகரித்துள்ளார்.
பிரேசில் அதன் நலன்களைக் காக்க உலக வர்த்தக மையம் உள்ளிட்ட மற்ற அனைத்து வழிகளையும் கையாளும் என பிரேசில் அதிபர் கூறியுள்ளார்.
பிரேசில் மீது 50% வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து இரண்டு நாடுகளுக்கும் இடையில் உரசல் ஏற்பட்டுள்ளது.
50% வரி ஏன்?
பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, 2022 தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஆட்சிக் கவிழ்ப்பு சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு விசாரணையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ர் போல்சனாரோவுக்கு எதிரான விசாரணையை ‘சூனிய வேட்டை’ எனக் குறிப்பிட்டுள்ளார் ட்ரம்ப், அதனாலேயே இந்த வரி விதிப்பு நடவடிக்கையை அமல்படுத்தியிருக்கிறார்.
அதாவது வரிவிதிப்பின் மூலம் பிரேசில் அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார் ட்ரம்ப். ஏனென்றால் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஒரு பழைமைவாதி, ட்ரம்ப்பின் நெருங்கிய கூட்டாளியாக இருந்த இவர், அமெரிக்காவின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்தார். ஆனால் 2022 தேர்தலில் மக்கள் தேர்ந்தெடுத்த இடதுசாரி அரசாங்கம் ட்ரம்ப்பின் கருத்துகளுக்கு எதிராக உள்ளது.
மேலும் பிரேசில் உச்சநீதிமன்றம் எக்ஸ் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மீது தடையை விதித்தது அமெரிக்காவின் பேச்சு சுதந்திரத்தைப் பாதிப்பதாக ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
பேச்சு சுதந்திர விஷயமும் சரி, முன்னாள் அதிபர் மீதான் விசாரணையும் சரி பிரேசில் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது. அதில் வெளிநாட்டு சக்திகள் தாக்கம் செலுத்த அனுமதிக்க மாட்டேன் என்கிறார் சில்வா.
வரி விதிப்பில் விலக்குகள்
இந்த 50% வரி விதிப்பிலிருந்து முக்கிய பிரேசிலிய ஏற்றுமதி பொருள்களான விமானங்கள், ஆரஞ்சு சாறு, எரிசக்தி பொருட்கள் மற்றும் சில கனிமங்கள் ஆகியவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் பிரேசிலுன் 36% ஏற்றுமதிப்பொருள்கள் மட்டுமே இந்த வரி விதிப்பை எதிர்கொள்ளும். எனினும் காபி, மாட்டிறைச்சி உள்ளிட்ட முக்கியத் துறைகள் இதனால் பாதிக்கப்படுகின்றன.
பிரேசிலின் பொருளாதார பரஸ்பர சட்டத்தின் கீழ் அமெரிக்க இறக்குமதி மீது 50% வரி விதிக்கப்படும் என்றும் பிரேசில் அதிபர் சில்வா எச்சரித்துள்ளார்.

பிரதமர் மோடியை அழைப்பேன்
அமெரிக்கா-பிரேசில் இருதரப்பு உறவில் மிகவும் வருத்தத்துரிய நேரத்தில் இந்த வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாக் கூறும் அவர், வெளிநாடுகளுடனான வர்த்தகத்தை வலுப்படுத்த பிரிக்ஸ் கூட்டாளிகள் உள்ளிட்டப் பிற நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார்.
பிரேசிலியாவில் நடந்த நிகழ்வு ஒன்றில், “2025 ஆம் ஆண்டில், நமது நலன்களைப் பாதுகாக்க, WTO தொடங்கி, சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்வோம். உண்மையில், அமெரிக்காவில் நிர்வாக மாற்றத்திற்கு முன்பே, வெளிநாட்டு வர்த்தகத்தை வலுப்படுத்தவும், உள்நாட்டு நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் அரசாங்கம் ஏற்கெனவே நடவடிக்கை எடுத்து வந்தது.” எனப் பேசியுள்ளார்.
மேலும் தான் ஒருபோதும் ட்ரம்ப்பை அழைத்துப் பேசப்போவதில்லை, அமெரிக்க அதிபரும் பேச விரும்பவில்லை என்றும் அதற்குமாற்றாக, “நான் ஜி ஜின்பிங்கை அழைப்பேன், பிரதமர் மோடியை அழைப்பேன். புடினால் இப்போது பயணம் செய்ய முடியாததால் நான் அவரை அழைக்க மாட்டேன். ஆனால் நான் பல ஜனாதிபதிகளை அழைப்பேன்.” என்றார்.
இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகியவை பிரிக்ஸ் நாடுகள். இது அமெரிக்க டாலரை வலுவிழக்கச் செய்ய செயல்படுவதாகவும், பிரிக்ஸுக்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

`ட்ரம்ப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயார், ஆனால்’
“நான் ட்ரம்ப்புக்கு கால் செய்ய மாட்டேன், ஏனென்றல் அவர் பேச விரும்பவில்லை. ஆனால் நான் COP30 மாநாட்டுக்கு அவரை அழைப்பேன், அது காலநிலை சம்பந்தப்பட்ட விஷயம். அதற்கு அழைக்கும் அளவு இரக்கத்துடன் இருப்பேன்.” எனப் பேசியுள்ளார்.
மேலும் அவர், “சமமான அடிப்படையில்” பரஸ்பர மரியாதையுடன் பேச்சுவார்த்தை நடந்தால் தேசிய இறையாண்மை மற்றும் நியாயமான வர்த்தகத்திற்கான தனது உறுதிப்பாட்டை நிலைநிறுத்துவதற்காக பேச்சுவார்த்தை ஈடுபடவும் தயார் எனக் கூறியுள்ளார்.