
ஒரு இந்தியர், தனது சாமர்த்தியமான யோசனை மூலம் `ஆப்பிள் மேக்புக்’கை வியட்நாமில் குறைந்த விலையில் வாங்கி, அங்கே பதினொரு நாட்கள் விடுமுறையை அனுபவித்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் விலை இறக்குமதி வரி மற்றும் ஜிஎஸ்டி காரணமாக அதிகரித்து காணப்படுகிறது. இதனால் ஒரு சாமர்த்தியமான யோசனையை செயல்படுத்தியதாக ரெடிட்டில் பகிர்ந்துள்ளார்.
ரெடிட் பதிவின்படி, இந்தியாவில் ₹1.85 லட்சம் விலையுள்ள மேக்புக்கை வியட்நாமில் கிடைக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கான VAT வரி சலுகையைப் பயன்படுத்தி, ₹1.48 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.
இதன் மூலம் சுமார் ₹36,500 மிச்சப்படுத்தியுள்ளார். இந்தத் தொகையில் விடுமுறையையும் கழித்திருக்கிறார்.
இவர் தனது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, மிகக் குறைந்த விமானக் கட்டணத்தில் ஹனோய் சென்றிருக்கிறார். அங்கு,VAT (Value-added tax) வரி சலுகை வசதிக்கு ஏற்றவாறு ஆப்பிள் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களை ஆராய்ந்து, தேவையான விலைப்பட்டியலைப் பெற்றிருக்கிறார்.
விமானப் பயணம், தங்குமிடம், உணவு, போக்குவரத்து மற்றும் மேக்புக் வாங்கியது என மொத்த செலவு ₹2.08 லட்சம் வந்திருக்கிறது.
VAT வரி சலுகைக்குப் பிறகு இது ₹1.97 லட்சமாகக் குறைந்திருக்கிறது. மேக்புக்கின் விலையைக் கழித்தால், அவரது வியட்நாம் விடுமுறைக்கு ₹48,000 மட்டுமே செலவாகியிருக்கிறது.
இவரது ரெடிட் பதிவு இணையத்தில் வைரலாகி, இதேபோல், அடுத்த ஐபோன் வெளியீட்டின் போது வியட்நாம் அல்லது துபாய்க்கு செல்லவுள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.