
சென்னையில் தூய்மைப் பணிகள் தனியார் மயமாவதை எதிர்த்து ரிப்பன் மாளிகைக்கு வெளியில் பணியாளர்கள் போராடி வரும் சூழலில், அதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கியுள்ளார் அமைச்சர் சேகர் பாபு.
முறையாகத் தகவல் கொடுக்கப்பட்டது
அமைச்சர் சேகர் பாபு, “சென்னையைப் பொறுத்தவரையில் 15 மண்டலங்களாக மாநகராட்சி சார்பில் நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதில் ஏற்கனவே 11 மண்டலங்கள், தனியார் சார்பில்தான் தற்பொழுது குப்பை அள்ளுதல் மற்றும் டப்ளிஷ் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
மீதமிருக்கும் நான்கு மண்டலங்களில் தற்போது ஐந்து, ஆறு இரு மண்டலங்களுக்கும் கூறப்பட்ட ஒப்பந்தம் நிறைவு செய்யப்பட்டு, பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு, இனி தனியார்தான் மேற்கொள்ளப் போகிறார்கள் என்று முறையாக மாநகராட்சி சார்பில் அவர்கள் (தொழிலாளர்கள்) அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
தனியார் இந்தப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்பதும், அதே நேரத்தில் பணியாற்றியவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதும் போராடுபவர்களின் கோரிக்கை.
அதிமுகவுக்கு அருகதை இல்லை
அத்துடன், “இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் அதிமுகவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராடுபவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நேற்றைக்கு முன்னாள் அமைச்சர் பேட்டி கொடுத்துச் சென்று விட்டிருக்கின்றார்.
அவர்கள் ஆட்சிக்காலத்தில்தான் 11 மண்டலங்களில் தனியாருக்கு இந்தப் பணிகளை மேற்கொள்ள உத்தரவு வழங்கப்பட்டது. மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம் என்ற பழமொழியும் அவர்களுக்கு வந்தால் ரத்தம் மற்றவர்களுக்கு வந்தால் தக்காளிச் சட்னியா என்ற வடிவேலு காமெடியும்தான் நினைவுக்கு வருகிறது. அதிமுகவிற்கு அருகதை இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

அனைவருக்கும் பணி வழங்கப்படும்; ஊதியம் குறைக்கப்படாது!
மேலும், “இந்தத் தூய்மைப் பணியாளர்களுக்குப் பணி உத்தரவாதம் தரப்படும் என்று நேற்றைக்குக் கூட பெருநகர மேயர் மதிப்பிற்குரிய பிரியா அவர்களும் நம்முடைய மாநகராட்சி ஆணையாளர்களும் கூட்டாகச் சேர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து இருக்கின்றார்கள்.
அவர்களுக்கு உரிய ஓய்வூதியம் போன்றவைப் பிடித்தம் செய்யப்படும். ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த அந்த ஊதியம் குறைக்கப்படாது என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கின்றது.
ஏற்கெனவே அனைத்து நிலைகளிலும் பணியாற்றியவர்களுக்குப் பணி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. ஆகவே அங்கே ஆர்ப்பாட்டத்தில் இருக்கின்ற மக்களைத் தவறான வழியில் திசை திருப்புவதால்தான் இந்தப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இன்னும் ஒரு நாட்களில் முடிவுக்கு வந்துவிடும்.
‘கொரோனா நேரத்துலகூட கக்கூஸை கழுவினோமே’ – போராடும் தூய்மை தொழிலாளர்களின் கண்ணீர் – Spot Visit
அதேபோல் இந்தப் போராட்டத்தால் மண்டலம் 5,6-ல் தேங்குகின்ற குப்பைகளை அகற்றுவதற்கு முதலமைச்சர் உத்தரவின் பெயரில், இந்தப் பணியாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பும் வரையில் தற்காலிகமாக மாற்று வழி ஒன்றை ஏற்படுத்தி குப்பைகள் தேங்கா வண்ணம் பார்த்துக் கொள்வதற்குப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.” என்றார்.
போராடுபவர்களைச் சந்திக்கத் தயார்
மேலும், “போராடுபவர்களைச் சந்திக்க விரும்பினால் இன்றைக்கே கூட பெருநகர மேயரும், மாநகராட்சி ஆணையரும், அந்தப் பகுதியின் மாவட்ட அமைச்சர் என்ற வகையில் நானும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்.” என்றார் சேகர் பாபு