
ஆன்லைன் சூதாட்ட தளங்களை விளம்பரப்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில், நடிகர் விஜய் தேவரகொண்டா இன்று ஹைதராபாத்தின் பஷீர்பாக் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.
அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்த தகவலின்படி, விஜய் தேவரகொண்டாவின் வாக்குமூலங்கள் ஏற்கெனவே இவ்வழக்கில் விசாரிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களுடன் கிடைக்கப்பெற்ற ஆவணங்களுடன் ஒப்பீடு செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
சில பிரபலங்களும், சமூக ஊடக பிரபலங்களும் பணம் பெற்றுக்கொண்டு, சூதாட்ட நடவடிக்கைகளை மறைமுகமாக ஆதரிக்கும் வகையில், விளம்பரங்களில் பங்கேற்றதாக அமலாக்கத்துறை சந்தேகிக்கிறது.
இதற்கு முன்னதாக, நடிகர் பிரகாஷ் ராஜ் கடந்த ஜூலை 30 ஆம் தேதி அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். விசாரணைக்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய அவர், இந்த விவகாரம் 2016 ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்றும், தான் எந்தப் பணமும் பெறவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்ட சில பிரபலங்கள் ஒத்துழைத்து வர, மற்றவர்கள் கால அவகாசம் கோரியுள்ளனர். நடிகர் ராணா தகுபதி, ஜூலை 23 ஆம் தேதி ஆஜராக கூறிய நிலையில், வேறு தேதியை அவர் கேட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

நடிகை மஞ்சு லட்சுமி ஆகஸ்ட் 13 ஆம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளார்.
தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசங்களில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்.களின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெறுகிறது.
இதில் நடிகர்கள், யூடியூபர்கள், இன்புளுயன்சர்கள் உள்ளிட்ட பலர் இதில் சம்மந்தப்பட்டுள்ளனர். இந்த விளம்பரங்கள் குறித்து அமலாக்கத்துறை தற்போது ஆராய்ந்து வருகிறது.