• August 6, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

பெரும்பான்மை இலக்கியங்கள் ரசனைக்கு மட்டுமே இடம்கொடுக்கின்ற இக்காலத்தில், ரசனையோடு சேர்த்து தமிழரின் அறத்தையும் வரலாற்றையும் வாழ்வியலையும் படைத்துள்ளதுதான் வேள்பாரியின் தனித்துவம். வேள்பாரி நாவலை வாசிக்கத் தொடங்கியதும் கபிலரின் கைகளைப் பற்றி நானும் பறம்பில் பயணிக்கத் தொடங்கினேன். வாசித்து முடித்த பிறகு பாரியை விட்டும்  பறம்பை விட்டும் கபிலரைப் போல என்னாலும் மீள முடியவில்லை.

சிறைவைக்கும் கூடுகளாய் இல்லாது எனது வானமாய் அவர்கள் மாறிப் போயினர்.  ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் என்னுள் ஓராயிரம் எண்ணங்களை எழுப்பியது. கதையைவிட்டு கடக்கமுடியாதபடிச் செய்தது. வேள்பாரி மீது நான் கொண்ட இந்த அலாதிப் பற்றால், கடந்த 2௦22ஆம் ஆண்டு வேள்பாரி நாவலிலே எனது முனைவர்பட்ட ஆய்வினைத் தொடங்கினேன். இதுவரை வேள்பாரி நாவல் குறித்து ஆறு ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளேன். இன்னும் ஆயிரம் கட்டுரைகள் எழுதுமளவு அறிவுப் பெட்டகமாக வேள்பாரி நாவல் அமைந்துள்ளது. 

வீரயுக நாயகன் வேள்பாரி

நான் முனைவர்பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்த காலத்தில், நிறைமாத கருவுற்றிருந்த எனது சகோதரிக்கு இந்த நாவலைப் பரிந்துரை செய்தேன். அவர்கள் நாவலைப் படித்து முடித்த அன்று இரவே வலி ஏற்பட்டு ஆண்குழந்தை பிறந்தது. ஒன்பது மாதங்களே ஆகியிருந்த நிலையில் குழந்தை அன்று இரவே பிறந்தது ஆச்சர்யத்தை அளித்தது. பாரியே எங்கள் வீட்டில் பிறந்துள்ளதாக தோன்றியது. அந்த நம்பிக்கையினால்,  பாரியின் பெயரையே அவனுக்கும் சூட்டினோம்.

காதல் வீரம் அறம் என்று அனைத்திலும் சிறந்து விளங்குகின்ற பறம்பின் தலைவனான  பாரி, அவனைத் தங்களது உயிரினும் மேலாய் கருதுகின்ற பறம்பு மக்கள்,  நட்பின் இலக்கணமாய்த் திகழும் தமிழ்ப்புலவன் கபிலர், அறத்தின் சாட்சியாய் காட்சி தரும் திசைவேழர் மற்றும் பொற்சுவை, அறிவின்  ஊற்றாய் வீரத்தின் விளைச்சலாய் விளங்கும் தேக்கன் ஆசான், வீரத்தின் வித்துக்களான இரவாதன் மற்றும் நீலன், காதலைப் பறைசாற்றும் ஆதினி மற்றும் மயிலா என ஒவ்வொரு கதாப்பாத்திரமும் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தின. இவர்களைப் போலத்தான் வாழ வேண்டும் என ஒவ்வொரு பாத்திரமும் எண்ண வைத்தன.

நாவலில் அறத்தை வலியுறுத்துகின்ற கதாப்பத்திரங்களும் காட்சிகளும் எனக்கு மிகவும் பிடித்தமானவைகள். 

வீரயுக நாயகன் வேள்பாரி

முதலில் பொற்சுவை கதாப்பாத்திரம். அதுவரை பார்த்ததுகூட இல்லாத பாரியைக் காப்பற்றுவதற்காக தன் உயிரையே கொடுக்கத் துணிகின்ற பொற்சுவை கதாப்பாத்திரம் பற்றி சொல்ல வார்த்தேயில்லை. பல்லக்கைத் தூக்கி வருபவர்கள் அண்ணகர்கள் அல்ல என்று உணர்ந்துகொண்டதும் கணநேரத்தில் சிந்தித்து முடிவெடுக்கும் அவளது அறிவுநுட்பம் அப்பப்பா என்றுதான் சொல்லவேண்டும்.

பாரியைக் கண்டு வணங்க வேண்டும் என்ற ஏக்கம், அதே சமயம் அப்படி வணங்கினால் அவரைக் கொன்றுவிடுவரே என்ற பயம், என  இரண்டும் சேர்ந்த தவிப்போடு பொற்சுவை இறக்கும்பொழுது ஒருமுறையாவது பார்த்திருக்கலாமே என்ற கவலை எனக்குள்ளும் கடத்தப்பட்டது. 

அடுத்தது திசைவேழர். தட்டியங்காட்டில் அறம் கைவிடப்பட்டதும் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் அறத்தின் அகராதி  அவர். இரவாதன் மரணமற்றவன் மாவீரன் என்பதை வெளிப்படுத்துவதே  திசைவேழர்தான். அந்த மாவீரனுக்கு  நீதியை வழங்க முடியாததால், தான் அதுநாள்வரை போற்றி மதித்த  கணிகருக்குரிய நாழிகைக்கோலை தனது குரல்வளைக்குள் செலுத்தி உயிரையே மாய்த்துக்கொள்கிறார். அறம் இறந்ததால் அவரும் இறக்கின்றார். அந்த நொடி திசைவேழர் கதாப்பாத்திரம் அறக்கடவுளாய் கண்முன்னே வந்து நின்றது.

வீரயுக நாயகன் வேள்பாரி – 107

அறத்தைக் காக்கத் தன் உயிரை மாய்த்துக்கொள்கின்ற பொற்சுவையும், அறத்தைக் காக்க முடியாததால் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் திசைவேழரும் அறத்தின் சாட்சிகளாய் நாவலின் ஆகச்சிறந்த கதாப்பாத்திரங்களாக எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தின.

போர்க்களத்தில் இறந்த இரவாதனின் உடலை தேக்கன் சுமந்து வந்து பாரியின்முன் நிற்கும் காட்சி நாவலின் சிறந்த காட்சி. முதல்முறை வாசித்தபொழுது அது என்னை அழ வைத்தது. வலியின் விளிம்பில் திணறச் செய்தது. அடுத்தமுறை வாசித்தபோது தாக்கத்தை ஏற்படுத்தியது. அடுத்தடுத்த முறைகளில் எப்பேர்பட்ட காட்சி என்று ரசித்து நிற்க வைத்தது. “பாரி குனிந்து இரவாதனின் உடலைப் பார்த்தாலோ, தேக்கன் நிமிர்ந்து பாரியின் முகத்தைப் பார்த்தாலோ உடைந்து நொறுங்கி விடுவர்” என்ற வரிகளும் அப்பக்கத்தில் இடம்பெறும் ம.செ.யின் வரைபடமும் காட்சியை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்திவிட்டது.

இரவாதனை பாரியின் கையில் ஒப்படைத்துவிட்டு “காட்டின் தலைமகனை இழந்துவிட்டோமடா, பாரி!” என்று தேக்கன் வாய்விட்டு கதறி அழும்பொழுது நம் கண்ணைவிட்டு கண்ணீர் கரைபுரண்டு ஓடும். நெஞ்சம் வெடித்துச் சிதறுவது போன்றதோர் உணர்வு ஏற்பட்டது. தேக்கனின் வலியும் பாரியின் வேதனையும் என்னையும் ஆட்கொண்டது. எத்தனை முறை படித்தாலும் வலியை ஏற்படுத்துகின்ற ஆழமானதொரு காட்சி இது. 

காதல், வீரம், ஓவியம், மொழிவளம், தமிழரின் அறம், மாண்பு இப்படி பேசப்பட்டுள்ள பல அற்புதங்களில் எனக்கு மிகவும் பிடித்தது தமிழரின் அறம்தான். காரணம் இன்று படைக்கப்படும் பல பனுவல்கள் காதல் மற்றும்  வீரம் பற்றி எல்லாம் பல்வேறு கோணங்களில் பேசுகின்றன. ஆனால், தமிழரின் அறத்தைப் பேசத் தவறிவிடுகின்றன.

கைவிடப்பட்ட அறத்தினை  தனது கையில் எடுத்து பறைசாற்றும் ஓர் ஒப்பற்ற நூலாக வேள்பாரி படைக்கப்பட்டுள்ளது. அன்றைய காலந்தொட்டு பேசப்பட்டுக்கொண்டே இருப்பதாலோ என்னவோ காதல் வீரம் எல்லாம் இன்றும் தமிழர்களிடம் தலையோங்கித் தான்  காணப்படுகிறது. ஆனால், அறம்தான் மாண்டு கொண்டு இருக்கிறது. இப்பேற்பட்ட  சூழலில் அறத்தை வலியுறுத்தியுள்ளது, அதுவும் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி, ரசிக்கும்படி, அப்படி வாழ்ந்திட ஆசைப்படும்படி படைத்துள்ளதுதான் நாவலின் தனிப்பெரும் சிறப்பு என்று கூறுவேன். 

நாவலாசிரியர் எழுத்தாளர் திரு.சு.வெங்கடேசன் அவர்கள் வேள்பாரியின் வெற்றி விழாவில், ‘அறத்தை கொல்லக்கூடாது; அறம் வாழவேண்டும்; இக்காரணத்தாலே பாரியை வாழ வைத்தேன். பாரி அறவழிப்பட்டவன். அவன் மாண்டுபோனால் அறம் மாண்டதாகிவிடும். அதனால் பாரி வென்றதாகப் படைத்தேன்’ என்று கூறியிருந்தார். இதிலிருந்து நாவலாசிரியர் இந்நாவலைப் படைத்ததன் நோக்கமும், நாவலின் கருப்பொருளும் அறம்தான் என்பதை உணரலாம்.

“அறங்காக்கும் தெய்வங்கள் எமது நிலத்தை ஆளட்டும். எம் மக்களை ஆளட்டும். எம்மை ஆளட்டும்” என்று நாவலின் இறுதிக்கட்டத்தில் பாரி கூறுகின்ற பொழுது மெய் சிலிர்த்து அடங்கியது. இவ்வரிகளே நாவலில் எனக்கு மிகப் பிடித்தமான வரிகள். இவ்வரிகள் பொன்மொழிகள் போல  ஒவ்வொருவரின் மனங்களிலும் பொதிந்து வைக்கப்பட வேண்டியவை.

அன்பு, அறிவு, அறம், காதல்,  வீரம், அரசியல், ஆதிக்கம், வரலாறு என்று அனைத்தையும் உள்ளடக்கியுள்ள வேள்பாரி நாவல், “தமிழிலக்கியக் களஞ்சியம்” என்றே கூறலாம்.  தமிழில் ஆகச்சிறந்த ஒரு படைப்பாக இந்நாவலைப் படைத்திட்ட எழுத்தாளர் சு.வெங்கடேசன் அவர்களுக்கும், விகடன் குழுவினருக்கும், பாரியை நம் கண்முன் காட்டிய ஓவியர் மணியம்செல்வன் அவர்களுக்கும் எம் மனமுவந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்.

வாழ்க அறத்துடன்!!!

பொன்.கனகா,

தூத்துக்குடி.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *