
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பீச்ரோடு சந்திப்பை சேர்ந்தவர் ஆஸ்டின் ( 48). இவர் அந்த பகுதியில் பரோட்டா கடை நடத்தி வருகிறார். ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் பணத்தை செலுத்த க்யூ.ஆர் கோடு ஸ்கேனர் வசதி செய்யப்பட்டிருந்தது. அதில் ஆஸ்டினின் வங்கி கணக்கு இணைக்கப்பட்டு இருந்தது. இவரது ஓட்டலில் பூதப்பாண்டியை சேர்ந்த இவரின் உறவினர் வேணுகுமார் என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக கணக்குகளை கவனித்து வந்தார்.
QR Code-ஐ மாற்றி…
ஓட்டலில் வைக்கப்பட்டிருந்த ஆஸ்டினின் வங்கிக்கணக்கு இணைக்கப்பட்ட க்யூ.ஆர் கோடை மாற்றிவிட்டு, அதில் தனது வங்கி கணக்கின் க்யூ.ஆர் கோடை ஒட்டி வைத்துள்ளார் வேணுகுமார். ஓட்டலில் சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு முடித்துவிட்டு பில் தொகையை க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் செலுத்தியுள்ளனர். அந்த பணம் வேணுகுமாரின் வங்கிக்கணக்குக்கு சென்றுள்ளது.
இதற்கிடையே ஓட்டலில் வருவாய் குறைவாக வருவதாக ஆஸ்டினுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து தனது வங்கி கணக்குகளை ஆஸ்டின் சரி பார்த்தபோது க்யூ.ஆர். கோடு மூலம் செலுத்தும் பணம் தனது வங்கி கணக்கில் வராமல் இருப்பதை கண்டுபிடித்தார். அந்த கியூ.ஆர் கோட் குறித்து விசாரித்ததில் வேணுகுமார் தனது வங்கி கணக்கின் க்யூ.ஆர் கோடை இணைத்து மோசடி செய்தது தெரியவந்தது.
க்யூ.ஆர் கோடை மாற்றி சுமார் 14 லட்சம் ரூபாய் வரை தனது வங்கி கணக்கில் பெற்று வேணுகுமார் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந்த பணத்தில் ஒரு பங்கை தனது உறவினரான சென்னையைச் சேர்ந்த மீனா (27) என்ற பெண்ணுக்கும் அனுப்பி வைத்திருக்கிறார் வேணுகுமார்.

வேணுகுமாரின் மோசடி குறித்து நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஸ்டின் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வேணுகுமார் மற்றும் மீனா மீது நடவடிக்கை எடுக்க கோட்டார் போலீஸாருக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் கியூ.ஆர் கோட் மூலம் மோசடி செய்ததாக வேணுகுமார் மற்றும் மீனா ஆகிய 2 பேர் மீதும் கோட்டார் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவாக இருக்கும் இரண்டு பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.