• August 6, 2025
  • NewsEditor
  • 0

திருப்பூர் மாவட்டம், சிக்கனூத்து அருகில் பணியின் போது குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் (57) படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

அவருடன் சென்ற அழகுராஜா என்ற ஆயுதப்படைக் காவலர் காயமடைந்துள்ளார். தனியார் தோட்டத்தில் நடைபெற்ற அடிதடி பிரச்னை குறித்து விசாரிக்கச் சென்ற காவல்துறையினரை மூன்று பேர் துரத்தி தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

சம்பவம் நடந்த இடம் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்குச் சொந்தமான தோட்டம் எனக் கூறப்படுகிறது.

சண்முகவேல்

இந்த இழப்புக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சண்முகவேல் குடும்பத்தினருக்கு ரூ1.கோடி நிவாரண உதவிகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய காவல்துறைக்கு அறிவுறுத்தியதாகத் தெரிவித்துள்ளார். 

அண்ணாமலை கூறுவதென்ன?

இதுகுறித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, “நேற்று இரவு தமிழ்நாட்டில் சிறப்பு துணை காவல் ஆய்வாளர் சீருடையில் இருந்தபோது கொல்லப்பட்ட நிகழ்வு நம் சமூகம் அதன் ஆன்மாவை இழந்து ஒழுக்கச் சீரிழிவு பாதையில் செல்வதைக் காட்டுகிறது.” என சமூக வலைத்தள பதிவு ஒன்றை எழுதியுள்ளார். 

அதில், “குற்றவாளிகளோ அல்லது ஒரு சாதாரண மனிதரோ கோபத்தில் ஒரு போலீஸ்காரை பொது இடத்தில் கொலை செய்வதற்கு என்ன காரணம்? இப்படிப்பட்ட குற்றத்தை செய்துவிட்டு தப்பிக்க முடியாது என்பதை அவர்கள் தெளிவான அறிவில் நன்றாகவே அறிவர். ஆனாலும் அதைச் செய்கிறார்கள்.

ஏன்?

அண்ணாமலை
அண்ணாமலை

மூன்று காரணங்கள்

தடையற்ற மதுபானம் (அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கத்தாலும், சில்லறை விற்பனையாளர்களாகச் செயல்படும் அரசாங்க கடைகளாலும் பெருமளவில் விற்கப்படுகிறது),

போதைப்பொருட்கள் எளிதாக கிடைப்பதும் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதும் (பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்றிருந்த போதை மருந்துகள் புதிய பொருட்கள் வருகையால் குறைந்த வருமானம் கொண்ட வகுப்பினரை எளிதாக அடைகின்றன)

அத்துடன் களத்தில் கிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடப்பதும் தான் காரணம். இந்த மூன்றையும் தீர்க்கும்போது இயல்புநிலை திரும்பும். 

டெக்னிக்கலாக காவல்துறையின் எஸ்.ஐ மற்றும் அதற்கு கீழ் பதவியில் இருப்பவர்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய நேரம் இது. டேசர் துப்பாக்கிகள் (ஷாக் வழங்கும் துப்பாக்கிகள்), பாடி கேமராக்கள், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கிகள் கொள்முதல் அதிகரித்தல், சிறந்த ரோந்து கார்கள் வழங்கப்பட வேண்டும். மிக முக்கியமாக, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டும் (இதனால் போலீஸார் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்கு ‘துணை’ இல்லாமல் தனியாகச் செல்லும் நிலை இருக்காது).

மேல் மட்டத்தில் கொள்கை ரீதியாக ஏற்படும் தோல்விகள், கீழ்மட்டத்தில் உள்ள சாமானிய மக்களை நேரடியாகப் பாதிக்கின்றன. தூங்கிக்கொண்டிருக்கும் தமிழ்நாடு உள்துறை அமைச்சருக்கு இது ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கும் என நம்புகிறேன். அவர் நமது முதல்வர்ரும் கூட…” எனக் கடுமையாக சாடியுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *