
சென்னை ரிப்பன் பில்டிங் எதிரே 1000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கடந்த 5 நாட்களுக்கு மேலாக போராடி வரும் நிலையில் அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார் த.வெ.க.வின் ஆதவ் அர்ஜுனா.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மாநகராட்சியின் குறிப்பிட்ட மண்டலங்களைச் சேர்ந்த அரசு ஒப்பந்த அடிப்படையிலான தூய்மைப் பணியாளர்கள், தங்கள் பணி பாதுகாப்பு உட்பட்ட அடிப்படை உரிமைகளுக்காகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எதிர்க்கட்சியாக இருக்கும்போது ‘தூய்மை பணி ஒப்பந்தங்களை தனியாரிடம் கொடுக்கக் கூடாது, தூய்மைப் பணியாளர்கள் உரிமைகளை ஏற்க வேண்டும்’ என்றெல்லாம் பேசினார் இன்றைய முதல்வர் அவர்கள்.
வஞ்சித்து வருகிறது மக்கள் விரோத திமுக அரசு
ஆனால் இப்போது, மாநகராட்சியின் பராமரிப்பு பணிகளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தனியாரிடம் தாரைவார்த்து, ஒருசிலர் பயனடைய ஒட்டுமொத்த தூய்மைப் பணியாளர்களையும் வஞ்சித்து வருகிறது மக்கள் விரோத திமுக அரசு. போராடுபவர்கள் பெரும்பாலும் பெண்கள், முதியவர்கள் என்றும் பார்க்காமல் ஐந்து நாட்களாக வீதியில் போராடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

இன்று தொழிலாளர்களின் மொத்த வாழ்வாதாரத்தையும் கேள்விக்குள்ளாக்கி வயிற்றில் அடித்து வருகிறது திமுக அரசு. சாமானிய மக்களின் குறைந்தபட்ச முன்னேற்றமான அரசு வேலைவாய்ப்பை ஒழித்துவிட்டு என்ன சமூகநீதியைப் பேசப்போகிறீர்கள்?. சமூக அநீதியை மட்டுமே ஆட்சியாக நடத்திவரும் அரசுக்கு எதிராகச் சென்னையில் போராடிவரும் தூய்மைப் பணியாளர்களைத் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக, கழக துணைப் பொதுச்செயலாளர் சகோதரர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள், கழகத் தோழர்கள் ஆகியோரோடு நேற்று சந்தித்தோம்.
அடிப்படை உரிமைக்காக ஜனநாயக வழியில் போராடும் மக்களோடு போராட்டக் களத்தில் பங்கேற்றோம். அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும், பணிப்பாதுகாப்பு உரிமைக்கும் சட்ட அடிப்படையிலும், ஜனநாயக களத்திலும் தமிழக வெற்றிக் கழகம் எப்போதும் துணை நிற்கும் என்று தெரிவித்தோம்’ இவ்வாறு கூறியிருக்கிறார்.