
புதுடெல்லி: கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ‘பரிக் ஷா பே சர்ச்சா' என்ற நிகழ்ச்சி டெல்லியில் நடைபெறுகிறது. ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்களுடன் நேரடியாகவும் காணொலி வாயிலாகவும் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். மாணவர்கள் தேர்வை சுமையாக கருதாமல், கற்றலின் கொண்டாட்டமாக கருத வேண்டும் என்பதுதான் இந்நிகழ்ச்சியின் நோக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ‘மைகவ்' இணையதளத்தில் ஒரே மாதத்தில் 3.53 கோடி பேர் பதிவு செய்திருந்தனர். அத்துடன் பல்வேறு ஊடகங்களில் இந்நிகழ்ச்சியை 21 கோடி பேர் பார்த்தனர். இதன்மூலம் பொதுமக்கள் பயன்பாட்டு இணையதளத்தில் ஒரே மாதத்தில் அதிகம் பேர் பதிவு செய்த காரணத்துக்காக இந்த நிகழ்ச்சி புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது.