
மும்பை உயர்நீதிமன்றத்திற்கு சுப்ரீம் கோர்ட் உயர்மட்டக்குழு 3 நீதிபதிகளை நியமித்து பரிந்துரை செய்துள்ளது. அஜித் காதேதன்கர், அராதி சாதே, சுஷில் கோடேஷ்வர் ஆகியோர் பெயர்களை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக சுப்ரீம் கோர்ட் பரிந்துரை செய்துள்ளது.
இதில் அராதி சாதே, பிரபல குடும்ப வழக்கறிஞர் கிராந்தி சாதேயின் மகள் ஆவார். அராதே சாதே இதற்கு முன்பு பா.ஜ.கவில் இருந்தார்.
அவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை மும்பை பா.ஜ.க செய்தித்தொடர்பாளராக பணியாற்றிவிட்டு அப்பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார். அராதியின் தந்தையும் பா.ஜ.கவில் இருந்தவர்தான். அவர் பா.ஜ.க சார்பாக மும்பையில் நடிகர் சுனில் தத்தை எதிர்த்து மக்களவை தேர்தலில் போட்டியிட்டவர் ஆவார்.
தற்போது நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்டுள்ள அராதி சாதே வருமான வரி தொடர்பான சட்டத்தில் நிபுணர் ஆவார். பாஜக-வை சேர்ந்த ஒருவரை நீதிபதியாக நியமித்து இருப்பது குறித்து தேசியவாத காங்கிரஸ் (சரத்பவா) கடும் விமர்சனம் செய்துள்ளது.
அக்கட்சியின் எம்.எல்.ஏ.ரோஹித் பவார் இது தொடர்பாக வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், ”ஆளும் கட்சியின் கருத்துக்களை பொதுவெளியில் எடுத்துச்சொல்லக்கூடிய ஒருவரை நீதிபதியாக நியமித்து இருப்பது குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார்.
சுப்ரீம் கோர்ட்டின் உயர்மட்டக் கமிட்டி இந்த நியமனத்தை அறிவித்தாலும், இந்த நியமனம் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகவே தெரிகிறது. இந்நடவடிக்கை நீதித்துறையின் பாரபட்சமற்ற தன்மையில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இந்த நியமனத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும் ரோஹித் பவார் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க செய்தித்தொாடர்பாளர் கேசவ் உபாத்யா,”அராதே 1.5 ஆண்டுகளுக்கு முன்பே பா.ஜ.கவில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார். அவருக்கு பா.ஜ.கவுடன் இப்போது தொடர்பு கிடையாது. இதற்கு முன்பு 1962-ம் காங்கிரஸ் ஆட்சியில் பஹ்ருல் இஸ்லாம் என்பவர் ராஜ்ய சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1972-ம் ஆண்டு ராஜ்ய சபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அவரை ஹவுகாத்தி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமித்தார்கள். 1980-ம் ஆண்டு அவர் நீதித்துறையில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு அவர் மீண்டும் அரசியலில் நுழைந்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.