• August 6, 2025
  • NewsEditor
  • 0

‘ஒரணியில் தமிழ்நாடு’, ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என தி.மு.க, அ.தி.மு.க தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியிருக்கும் சூழலில், மாடு மாநாடு, தண்ணீர் மாநாடு என புது வழி எடுக்கிறது நாம் தமிழர் கட்சி. ‘மாடு மேய்க்கச் சொல்கிறார்’ என விமர்சிக்கப்பட்டு வரும் சூழலில், நா.த.க-வின் தேர்தல் வியூகம் குறித்து அலசினோம்..!

மாடு மேய்க்கும் போராட்டத்தில் சீமான்

1.1 சதவீதம் டு 8.22 சதவீதம்!

2016 சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் களம்கண்ட நா.த.க, 234 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டு 1.1 சதவீத வாக்குகளைப் பெற்ற நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளைப் பெற்று அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி அந்தஸ்தைப் பெற்று, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகிறது. மற்ற கட்சிகள் மக்களைச் சந்தித்து பிரசாரம் நடத்தி வரும் நிலையில், மாடு, மரம், தண்ணீர், மலைகளுக்கு மாநாடு நடத்தி புது வழி எடுக்கிறார் சீமான். இது எந்த அளவுக்கு சீமானுக்கு கைகொடுக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

கட்டமைப்பை வலிமைப்படுத்தி… மக்களை சந்திக்கிறோம்!

நம்மிடம் பேசிய நா.த.க செய்தித் தொடர்பாளர்கள் சிலர், “நாங்கள் இதுவரை சந்தித்த எந்தத் தேர்தலிலும் கட்சிக் கட்டமைப்பை முழுமையாக வலுப்படுத்தவில்லை. ஆனால், இம்முறை கட்சிக் கட்டமைப்பில் மிகக் கவனமாக இருக்கிறோம். மாவட்ட வாரியாகப் பொறுப்பாளர்களைப் புதுப்பித்தல், அனைத்து பூத் கமிட்டிகளையும் கட்டமைப்பது, இளைஞர், மகளிர் உள்ளிட்ட அனைத்து பாசறைப் பொறுப்பாளர்களை நியமிப்பது என முழுவீச்சில் செயல்படுகிறோம்.

சீமான்
நெல்லை ஆணவக்கொலை – கவீன்குமார் வீட்டில் சீமான்

குறிப்பாக, தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருப்பதால், வேட்பாளர்களை இப்போதே உறுதி செய்து பணியைத் தொடங்கச் சொல்லிவிட்டார் அண்ணன் சீமான். வேட்பாளர் தேர்வில் 117 இடங்களில் பெண்களுக்கும், புறக்கணிக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கவும் முடிவெடுத்துள்ளோம்.

மேலும், தேர்தல் வருவதால் தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் மக்களைச் சந்திக்கக் கிளம்பியிருக்கின்றன. ஆனால், நாம் தமிழர் கட்சியினர் அனைத்து மக்கள் பிரச்னைகளுக்கும் முன்நின்று, தொடர்ச்சியாக மக்களைச் சந்தித்து வருகிறோம். ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது எங்களின் எண்ணமாக இருந்தாலும், இம்முறை வாக்கு வங்கியை இரு மடங்காக உயர்த்தி, எம்.எல்.ஏ சீட்டுகளை நிச்சயம் வெல்வோம்” என்றனர்.

இயற்கையின் குரலாக ஒலிப்பார் சீமான்!

தலைமைக்கு நெருக்கமான சிலர் பேசுகையில், “மற்ற தேர்தல்களைக் காட்டிலும் இம்முறை வித்தியாசமான தேர்தல் வியூகங்களைக் கட்டமைத்திருக்கிறார் அண்ணன் சீமான். 2026 சட்டமன்றத் தேர்தல் வரை ஒரு கோரிக்கைக்கு வெறுமனே மேடைப் போட்டுப் பேசாமல், கோரிக்கைக்கு செயல் வடிவத்துடன் போராட வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருக்கிறார். அப்படித்தான் கள் விடுதலை மாநாட்டுக்குப் பனையேறி கள் இறக்கினார். அடுத்ததாக, ஆடு-மாடுகளைத் திரட்டி மாநாடும் நடத்தினோம். அந்தப் பட்டியலில் அடுத்ததாக இருப்பது மரங்களின் மாநாடு. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே ஒரு காடு இருக்கிறது. அங்கே மரங்களுக்கு மத்தியில், மரங்களுக்காகவும், மரங்களுடனும் அண்ணன் பேசப் போகிறார்.

தூத்துக்குடியில் பனை மரம் ஏறி கள் இறக்கிய சீமான்.!
தூத்துக்குடியில் பனை மரம் ஏறி கள் இறக்கிய சீமான்.!

அந்த வரிசையில், நீர்த்தேக்கப் பகுதியில் தண்ணீருக்காகவும், மலைகளுக்கு மத்தியிலிருந்து மலைகளுக்காகவும் பேசப் போகிறார். மறுபக்கம், தேவேந்திர குல வேளாளர்களின் பட்டியல் சமூக வெளியேற்றம், மேய்ச்சல் நிலத் தடையை எதிர்த்து மாடு மேய்க்கும் போராட்டத்தில் களமிறங்கினார். அடுத்து, தூய்மைப் பணியாளர்கள் மாநாட்டுக்கும் திட்டமிட்டு வருகிறோம். இப்படி, 2026 சட்டமன்றத் தேர்தல் வரை மக்கள் கோரிக்கைகளுக்கு செயல் வடிவத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்துவதே திட்டம். அதன் பிறகு, நவம்பர் இறுதியில் மாநிலப் பிரசாரப் பயணத்தைத் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடங்குவார். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் மாநில மாநாட்டையும் நடத்தவுள்ளோம்” என்றனர்.

நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர்கள் சிலர், “நா.த.க-வுக்கும் த.வெ.க-வுக்கும் போட்டி நிலவும் எனப் பேசப்படும் சூழலில், விஜய் மக்கள் போராட்டங்களை நடத்தாமல் அறிக்கை அரசியலை நம்பியே இருக்கிறார். அதிலும், கவின்குமார் ஆணவப் படுகொலைக்கு அவரிடமிருந்து அறிக்கைகூட வரவில்லை. இப்படியிருக்கையில், முழுக்க முழுக்க களச் செயல்பாட்டைக் கொண்டிருப்பதால் மிகுந்த நம்பிக்கையுடன் அணுகுகிறது நா.த.க. இருந்தாலும், மக்கள் என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்பது போகப் போகத்தான் தெரியும்” என்றனர்.

– இடும்பாவனம் கார்த்திக்

அக்கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி பேசுகையில், “விஜய் நடிகர் என்பதால் ஊடகங்கள் அவரைப் பூதாகரப்படுத்துகின்றன. எந்த மக்கள் பிரச்னைக்கும் களத்துக்கு வராமல், முக்கியப் பிரச்னைகளுக்கு வாய் திறக்காமல் இருக்கும் விஜய்யால் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. நாம் தமிழர் கட்சி மக்களுடனும், மக்களுக்காகவும் நிற்கிறது. எந்த ஊரில் எந்தப் பிரச்னையாக இருந்தாலும், அங்கே அண்ணன் சீமான் முன்வந்து நிற்பார். இதுவரை இல்லாத ஒரு பாய்ச்சலை 2026 சட்டமன்றத் தேர்தலில் வெளிப்படுத்தி, பெரு வெற்றியை அடைவோம்” என்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *